அருள்மொழி நினைவுத் தண்ணீர்ப் பந்தல்
நீரின்றி அமையாதுலகு
தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தர வேண்டும் என்பது வழக்குமொழி. வீட்டுக்குள் வருபவர்கட்கு முதலில் குடிக்கத் தண்ணீர் தருவது நல்லதொருப் பண்பாடாக இன்றளவும் இருந்து வருகிறது. தற்போது தண்ணீர் என்பது வணிகப்பொருளாகத் திட்டமிட்டு அரசுகளாலும் வணிக நிறுவனங்களாலும் மாற்றப்பட்டு விட்டது. தண்ணீர் என்றாலே புட்டியில் அடைக்கப்பட்டது எனவும் அதுதான் பாதுகாப்பானது எனவும் நம் அனைவரும் மூளைச் சலவை செய்யப்பட்டுவிட்டோம். தண்ணீரில் மூலம் பரவும் நோய்களைக் காட்டி அச்சுறுத்தி எளியமனிதர்களையும் புட்டிக்குள் அடைத்துவிட்டனர்.
இதற்கு மாற்றாகப் பாதுகாப்பானக் குடிநீரை வழங்கவேண்டும் என்று யோசித்தபோது மழைநீரை விடப் பாதுகாப்பான நீர் இல்லை. எனவே முதலில் நம் வீட்டுக் கூரையில் விழும் மழைநீரைச் சேகரிக்கலாம் என முடிவு செய்தோம். அதற்காக 30000 லிட்டர் கொள்ளலவு கொண்டத் தொட்டி நிலத்தடியில் கட்டப்பட்டு மழைநீரை வடிகட்டிக் குடிநீராக வழங்க அருளகம் முடிவு செய்தது. இதன்மூலம் ஓரளவு பிளாஸ்டிக் குப்பிப் பயன்பாடுக் குறைந்தாலும் மகிழ்ச்சியே. அருள்மொழி நினைவுத் தண்ணீர்ப் பந்தல் (19-1-2024) அன்று ஓய்வுபெற்றக் கால்நடை மருத்துவர் திரு. கணேசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அவரது திருக்கரங்களால் திறந்து வைகப்பட்டது மிக்க மகிழ்ச்சி. அவர் குடும்பத்தார் சார்பாக ஊரில் வயதான நான்கு பெரியவர்களுக்கு (இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள்) துணிகளும் பயன்படு பொருளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு கால்நடை மருத்துவர் திரு.வி.விஜயகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார். இசை அமைப்பைச் சேர்ந்த சின்னையா, ஓய்வு பெற்றக் கல்லூரி முதல்வர் திரு. பாலகிருக்ஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து அருளகத்தின் செயலர் சு.பாரதிதாசன் குறிப்பிடும்போது, கரூர் மாவட்டத்தில் பயணித்தபோது, ஒரு சிற்றூரில் சிறு பந்தல்போடப்பட்டு அதற்குக் கீழே மண்பானையும் குவளையும் வைக்கப்பட்டிருந்தது தான் இதற்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது எனவும் அருள்மொழி நினைவுத் தண்ணீர்ப்பந்தலை திறந்து வைக்கப் பொருத்தமான ஒரு மனிதரை யோசித்தபோது டாக்டர் கணேசன் அவர்கள் தான் மனதில் வந்தது எனவும் அவரது திருக்கரங்களால் தண்ணீர்பந்தலைத் திறந்து வைத்தது மிகவும் பொருத்தமாக அமைந்தது எனவும் பெருமை கொள்ளவைத்தது என்றும் குறிப்பிட்டார்.