யானை மரணம் உணர்த்தும் சேதி
மிசன் மதுக்கரை மகாராஜ் என்ற பெயரில் மதுக்கரை மக்களின் கோரிக்கையை ஏற்று ஒற்றை யானையை உயிருடன் பிடிக்கப் போடப்பட்ட திட்டம் அந்த யானையின் மரணத்தில் முடிந்திருக்கிறது. உண்மையில் அந்த யானை வனத்துறையிடம் பிடிபட்டபோதே செத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாவது தடவையாக அந்த யானை இறந்திருக்கிறது. ஆம் எஞ்சிய காலம் முழுவதும் தன் குடும்பத்தை விட்டுப்பிரிந்து ஏதோ ஒரு பாகன் கையில் அடிமையாய் இருப்பதை விட அந்த யானை இறந்ததேமேல் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
ஒரு நாட்டை அழிக்க அமெரிக்கா செய்யும் செயலைப்போல ஒற்றை யானையை ஒரு தீவிரவாதியாக சித்தரித்து அதிகாலை 4 மணிக்கு இந்த இடத்தை கடக்கும் அப்போது பிடிபட்டு விடும் என்று பின்லேடன் ரேஞ்சுக்கு பரபரப்பை கூட்டி ஊடகத்துறையினரும் செய்தி வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.
யானை இறந்ததற்கு மயக்க மருந்து அதிகமாகச் செலுத்தப்பட்டது தான் முதன்மையான காரணமாகச் சொல்லப்படுகிறது. அந்த மயக்கத்தினூடேயே 10 மணி நேரம் பயணமாக வரகளியாறு முகாம் கொண்டு செல்லப்பட்டு. உணவு தண்ணீரின்றி கடும் உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு கொட்டிலில் அடைக்கப்பட்டிருக்கிறது. பாதி மயக்கத்தில் என்ன செய்வதெனத் தெரியாத நிலையில் அலைக்கழிக்கப்பட்ட எரிச்சலும் சேர்ந்து கொள்ள அதிலிருந்து மீள முயற்சித்து அதன் மத்தளத்தால் முட்டி மோதியிருக்கிறது. அப்போது ஏற்பட்ட காயத்தால் மண்டையில் இரத்தம் உறைந்து மூளைச் சாவடைந்திருக்கிறது எனத் தெரியவருகிறது. இந்த மரணத்தின் மூலம் நமக்கு பல செய்தியை உணர்த்தி விட்டுச் சென்றிருக்கிறது.
இந்த மரணம் உணர்த்தும் சேதி என்ன?
இதே கேள்வியை வேறு மாதிரி கேட்டால் அனைவருக்கும் எளிதில் புரியுமென்று நினைக்கிறேன். ஏன் யானைகள் காட்டை விட்டு வெளியே வருகின்றன? இந்த கேள்வியே தவறு தான் என்பதால் அப்படி கேட்கத் தோன்றவில்லை. காரணம் இன்று நாம் காடு என வரையறுத்து வைத்துள்ள இடமே மிகவும் ஒருதலை பக்கமானது. அதுவும் மிகவும் சொற்பமான இடங்களே அவைகள் வாழ ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் காடுகள் என்பது ஏதோ ஒரு விலங்கு காட்சி சாலை போலவும் விலங்குகள் அந்த இடத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்ற தவறான பார்வையும் புரிதலும் பொது மக்களிடம் பரவலாக உள்ளது.
இந்தியா முழுவதுமே நன்கு பாதுகாக்கப்படும் காடுகள் வெறும் ஐந்து சதவீதம் தான். எஞ்சி உள்ள காடுகளும் தொடர்ச்சியற்றும் நம்மால் சிறு சிறு துண்டாக சின்னா பின்னப் படுத்தப் பட்டும் வளமற்றும் உள்ளன. நம்மால் பயிர் செய்ய முடியாத பாறைகளையும் முகடுகளையுமே நாம் விலங்குகளுக்கென விட்டு வைத்திருக்கிறோம். வனவிலங்குகள் வாழ்வதற்குத் தோதான அருமையான ஆற்றுப் படுகைகள் வளமான பள்ளத்தாக்குகள் ஆற்றோரங்கள், தடாகங்கள் எல்லாம் ஆன்மீக வாதிகளாலும் கல்வி வள்ளல்களாலும் கார்ப்பரேட் கம்பெனிகளாலும் ரிசார்டுகளாலும் பெரும் விவசாயிகளாலும் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இது போதாதென்று காட்டை ஒட்டியுள்ள நீர் நிலைகளையும் நாலாபுறமும் ஆக்ரமிப்பு செய்துவிட்டோம்.
கோடை காலத்தில் நீர்நிலைகள் வற்றும்போது அந்த இடத்தில் புல் நன்கு வளர்ந்திருக்கும். அந்த வறட்சியான சூழலில் அந்த ஒரு இடத்தில் தான் தீனியும் தண்ணீரும் கிடைக்கும். அந்த இடத்தையும் நாம் விட்டு வைப்பதில்லை அதையும் ஆக்ரமித்து குறுகிய கால வெள்ளாமை செய்வதாலும் ஆடு மாடுகளை மேய்ப்பதாலும் காட்டை ஒட்டியுள்ள அந்த வளமான இடமும் விலங்குகளுக்கு மறுக்கப்படுகிறது. கடும் வெயில் காலத்தில் அவைகள் தாகத்திற்கு தண்ணீர்குடிக்க வருவதற்கே பல மணி நேரம் காத்து இருக்க நேரிடுகிறது. காரணம் காட்டை ஒட்டியுள்ள பகுதியில் இருக்கும் அளவுக்கு அதிகமான மனித நடமாட்டம் தான்.
யானை போன்ற விலங்குகள் உச்சி வெயிலில் இளைப்பாற ஆற்றோரத்தைத் தான் தேர்ந்தெடுக்கும். ஆனால் அதற்கு தேவைப்படும் முக்கியமான இடங்களை எல்லாம் நாம் பலவந்தமாக எடுத்து விட்டு வறண்டு கிடக்கும் பொட்டல் தரைகளை அவைகளுக்கு விட்டால் அவைகள் உணவுக்கும் தண்ணீருக்கும் எங்கு செல்லும்.
இந்தச் சூழலில்தான் அவை காட்டிற்கு அருகாமையில் பசுமையாகத் தெரியும் வெள்ளாமை செய்யும் இடங்களை நாடி வருகின்றன. ஏற்கனவே கடனை உடனை வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இது பெரும் இடஞ்சலாகி விடுகிறது. வனவிலங்குகளால் ஏற்படும் இழப்பை உடனே கணக்கிட்டு அவ்வப்போது அதற்கான நட்ட ஈட்டை பட்டுவாடா செய்தால் அவர்களுக்கும் பேருதவியாய் இருக்கும். அவர்களை அலைக்கழித்து எரிச்சல்படுத்தி அமைச்சர்கள் முன்னிலையில் நிவாரணம் தருவதற்காக காலதாமதப் படுத்தி பந்தாடுகின்றனர். இந்த எரிச்சலை அவர்கள் மறுபடியும் விலங்குகள் மேல் காட்டுகின்றனர். இந்த அடிப்படையில் தான் விவசாயிகள் வனத்துறையினரைப் பார்த்து உங்கள் விலங்கை நீங்கள் காட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூச்சலிடுகின்றனர்.
ஆயினும் வேறு மாதிரியான விவசாயிகளும் இருக்கவே செய்கின்றனர். தன் தோட்டத்தை சேதப்படுத்திய யானையைப் பார்த்து ஒரு விவசாயி, நாம ஒரு சான் வயிற்றுக்கே பசிக்கு ஆளாப் பறக்கிறோமே இவ்வளவு பெரிய ஜீவன் என்ன செய்யும் என்று குறிப்பிட்டதைக் கேட்டு வியந்திருக்கிறேன். யானை தன் தோட்டத்திற்கு வந்து சென்றால் சுபகாரியம் கைகூடும் என்ற நம்பும் விவசாயிகளையும் சந்தித்திருக்கிறேன்.
யானைகள் உண்டு அழிப்பதை விட காலில் மிதி பட்டு நேரும் சேதாரம் தான் அதிகம். அதை விரட்டும் போது இங்கும் அங்கும் ஓடுவதால் நேரும் சேதாரத்தால்தான் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போதாக்குறைக்கு சொரணையே இல்லாமல் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கும் கூட்டத்தாலும் செல்பி எடுக்கும் சிறு புத்திக்காரர்களாலும் யானைகளும் வனத்துறையினரும் படும் துயரம் சொல்லி மாளாது.
நிர்பந்தம் காரணமாக அவைகள் காட்டை விட்டு வெளியே வந்தாலும் தனக்கு பாதுகாப்பு காடுதான் என்று அவைகள் திரும்பிச் செல்ல நினைத்தாலும் முடிவதில்லை. காரணம் ரியல் எஸ்டேட் கும்பல்களாலும் ரிசார்ட்டுகளாலும் சுரங்கம்தோண்டும் போது வெடிக்கும் வெடியாலும் மணல் குவாரிகளாலும் மின் வேலிகளாலும் முள் கம்பி வேலிகளாலும் மின் விளக்காலும் அவை திரும்பிச் செல்லும் இடம் தெரியாமல் கண்ணைக் கட்டி நாட்டில் விட்டதைப் போல திக்குமுக்காடுகின்றன.
இதனால் வனத்துறையினருக்கு யானைகளைச் சமாளிப்பதே பெரிய சவாலாக உள்ளது. யானைகள் என்ற பேச்சை எடுத்தாலே யானை மனித மோதல் தான் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்தச்சூழலில் வனவிலங்குகள் பாதுகாப்புக்காக இருக்கும் வனத்துறையும் யானைகள் பாதுகாப்பை விட யானைகளை விரட்டுவதற்குத்தான் முக்கியத்துவம் தருகிறது. தான் பணிபுரியும் காலத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் தப்பித்தால் போதும் என்றே பெரும்பாலான வனத்துறை ஊழியர்கள் விரும்புகின்றனர். எனவே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை தற்காலிகத் தீர்வாக வெடியை வெடித்து காட்டுக்குள் விரட்டுதல் போன்ற மேலோட்டமான செயல்களை செய்து காலத்தைக் கழித்து விட்டு வேறு இடம் மாற்றலாகிச் சென்று விடுகின்றனர்.
யானை விலங்கு மோதலைத் தவிர்க்க பல்வேறு வழிவகைகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்தாலும் மக்களின் உளவியலைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் ஆளும் ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் விதமாகவும் இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால் தனக்கு என்ன இலாபம் கிடைக்கும் என்ற அடிப்படையிலும் தான் அதிகாரிகள் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது அகழி வெட்டுதல், சூரிய மின் வேலி அமைத்தல், தொட்டி கட்டி அதில் தண்ணீர் ஊற்றுதல், தீவனப் புல் வளர்த்தல், சாலையைக் கடக்க மேம்பாலம் அமைத்தல் போன்ற மேலோட்டமான தீர்வுகளைத் தான் செயல்படுத்த விரும்புகின்றனர். அதற்கான காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
யானைகள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது அதனால் தான் அவை உணவு தேடி ஊருக்குள் வருகின்றன என்று சொல்வதிலும் அர்த்தம் இல்லை. எந்த ஒப்பீட்டின் படி அதன் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறோம் என்பதை வைத்துத்தான் இந்த முடிவுக்கு வரமுடியும்.
ஆயினும் வருங்காலங்களில் இப்போது உள்ளதை விட யானைகள் எண்ணிக்கை ஒருவேளை அதிகமாகலாம். இதனால் புதிய புதிய இடங்களில் எல்லாம் யானைகள் புக ஆரம்பிக்கலாம். அதனால் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான பிணக்கு வருங்காலங்களில் இன்னும் அதிகமாகலாம். மனிதர்களா யானையா என்று பார்த்தால் மனிதர்கள்தான் முதன்மையாகத் தெரிவார்கள். காரணம் யானைகளுக்கு ஓட்டு இல்லை. இந்த கண்ணோட்டத்தை விட்டுவிட்டு யானைகளுடன் இணக்கமாக வாழ்வது எப்படி என்று திட்டம் வகுக்க வேண்டும். ஏனெனில் யானைகள் காட்டின் ஆதார உயிரினம். காட்டில் யானைகள் இருந்தால் நம் குடிநீருக்கும் பங்கம் வராது. நிலைமை இன்னும் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது. ஊர்கூடித் தேர் இழுக்க வேண்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
• இந்த திட்டத்தில் வனத்துறையினரோடு வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் விவசாயத்துறையினர், காவல் துறையினரும் கைகோர்க்க வேண்டும்.
• ஆற்றோரக் காடுகள் என்ற அற்புதமான சூழலியல் மண்டலத்தையே நாம் அழித்து மாபாதகம் செய்து விட்டோம். ஆயிரம் ஏக்கர் வளமற்ற காட்டுப்பகுதியை விட சில நூறு ஏக்கர் வளமான ஆற்றுப் படுகைகள் அவைகளுக்குப் பெரிதும் உதவியாயிருக்கும். எனவே எப்படி பட்ட நிலம் இருந்தால் யானைகள் வாழ்வாங்கு வாழமுடியும் என்று ஆய்ந்துணர்ந்து அந்த இடங்களை மீட்டெடுக்க வேண்டும்.
• வனத்துறையில் ஆற்றல் மிகு அலுவலர்கள் பலர் உள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி ஆற்றோரங்களிலும் நீர்நிலைகளிலும் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி வனவிலங்குகள் சுதந்திரமாகத் திரிய வழிவகை செய்ய வேண்டும்.
• சிதறுண்ட வாழிடங்களை இணைக்கும் நடவடிக்கையையும் அவசரகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
• வருவாய்த்துறையினரிடம் உள்ள வளமான இடங்களை எல்லாம் கண்டறிந்து அவைகள் தனியார் கைகளுக்கும் குவாரி கொள்ளையர்கள் கையிலும் சிக்காமல் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
• பொதுப்பணித்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளை குறுகிய கால குத்தகைக்கு விடுவதைத் தவிர்க்க வேண்டும்.
• ஒப்பந்தம் காலாவதியான இலாபம் தராத தேயிலை, காபி தோட்டங்களை அழித்து விட்டு மறுபடியும் காடாக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
• யானைகள் மேயாமல் இருக்கும் மாற்றுப்பயிர் என்ன? அதை வளர்த்தால் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்குமா என்பதை வேளாண்துறை ஆய்வு செய்ய வேண்டும்.
• யானைகள் வலசை செல்லும் பாதையில் புதிதாக முள்கம்பி வேலிகளை அமைப்பதைத் தடுப்பதோடு ஏற்கனவே உள்ளதை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• யானைகளை காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கையில் உதவிசெய்கிறேன் பேர்வழி என்று பொதுமக்களும் புகைப்படம் எடுப்பவரும் வனத்துறையினருக்கு இடைஞ்சல் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இந்தப் பணியில் ஊடகத்துறைக்கும் பெரும் பங்குண்டு என்பதையும் பின்வரும் சம்பவம் வாயிலாகக் குறிப்பிட விரும்புகிறேன். ஒருமுறை தளமலையிலிருந்து அருள்வாடிக்கு இரு சக்கர வாகனத்தில் பயணிக்க நேர்ந்தது. வழியில் சாலை ஒரத்தில் ஒரு ஒற்றையானை மேய்ந்து கொண்டிருந்தது. நான் போகலாமா வேண்டாமா என்று ஒரு நிமிடம் யோசித்தேன். என்னைப் பார்த்துவிட்டு தன் உடம்பை பின்பக்கம் திருப்பி நின்று கொண்டு மேய ஆரம்பித்தது. அதன் செய்கை நீ பாட்டுக்கு உன் வழியில் செல் என்று சொல்வதைப் போல இருந்தது. அதை உணர்ந்து படபடப்புடன் அந்த இடத்தை விருட்டென்று கடந்து வந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி வந்து வண்டியை நிறுத்தி புள்ளினங்களைப் பார்த்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். என்னைப் போலவே பொரி கடலை வியாபாரி, உர மூட்டை எடுத்து வந்த விவசாயி, பால்காரர், எண்ணெய் வியாபாரி என நான்கு பேர் அரை மணி நேரத்தில் அந்த இடத்தை கடந்து சென்றனர். யாருக்கும் எந்த தீங்கும் நேரவில்லை. அடுத்த நாள் டீக்கடையில் அன்றைய செய்தித்தாளை புரட்டியபோது ‘’துரத்தியது காட்டு யானை’’ என்ற தலைப்பில் தாளவாடியில் சுற்றித்திரியும் ஒற்றையானையால் பொதுமக்கள் பீதி என்று அதே யானையைப் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது.
இதைப் படித்ததும் ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதைப் போல என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது. அவைகளின் வாழிடத்தை நாம் அபகரித்து விட்டு அவைகள் ஊருக்குள் புகுந்து விட்டன என கூப்பாடு போடுகிறோம் என்பதை மட்டுமாவது நினைவில் கொண்டு செய்தி வெளியிடுமாறு வேண்டுகிறோம்.பழங்குடிகள் யானையைப் பற்றிச் சொல்லும் போது பெரியவர் அந்த பக்கம் இருக்கிறார். கவனமாகச் செல்லுங்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படிப் பட்ட மக்கள் அதிகம் இருப்பதாலும் வனத்துறையின் கட்டுப்பாட்டாலும் தான் இன்றும ஆசிய அளவில் அதிகமான எண்ணிக்கையில் முதுமலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த பெருமையைத் தக்க வைத்துக்கொள்ளும் பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது, யானைகள் பெரிய மனம் படைத்த கணவான்கள் என்பதை உரக்கச் சொல்லுவோம்.