Our Blog

நிமெசுலைட் (Nimesulide) தடைக்குப் பின்னர்

 

நிமெசுலைட் (Nimesulide) தடைக்குப் பின்னர்.

இந்த ஆண்டின் தொடக்க நாளில் இன்பத்தேனாய் ஒரு செய்தி வந்து பறவை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. 

‘நிமெசுலைட்’ (Nimesulide) மருந்தைக் கால்நடைப் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்வதாக ஒன்றிய அரசின் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health and Family Welfare) வெளியிட்ட செய்திதான் அம் மகிழ்ச்சிக்குக் காரணம். 

இதற்காக ஒன்றிய அரசுக்கும், குடும்ப நல அமைச்சகத்திற்கும், பரிந்துரைத்த மருந்துகள் நுட்ப அறிவுறுத்தல் வாரியத்திற்கும் (Drug Technical Advisory Board) நன்றியினை உரித்தாக்குகிறோம். 2006-ஆம் ஆண்டு டைக்லோபினாக் (diclofenac) மருந்துக்கு விடுக்கப்பட்ட தடைதான் இதற்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. 

இம்மருந்துகள் யாவும் ஊக்கி கலக்காத, வீக்கத்தை மட்டுப்படுத்தும் மருந்து வகையைச் சேரும் (Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs). இம் மருந்துகள் கால்நடைகளுக்கு மடிவீக்கம், மூட்டுவலி, சுளுக்கு, காய்ச்சல் போன்ற நோய்க்கூறுகளைக் குணமாக்கத் தரப்படுகின்றன. 

பாறு கழுகுகள் கூட்டங் கூட்டமாக மடிந்ததற்கு டைக்லோபினாக் தான் முதன்மைக் காரணம் என அசைக்க முடியாத ஆய்வுகள் மூலம் மருத்துவர் லிண்ட்சே ஓக்சு (J Lindsay Oaks) தலைமையிலான குழு 2003-ஆம் ஆண்டு முதன்முதலில் உறுதிப்படுத்திற்று. 

மருந்து புகட்டப்பட்டுக் குணமாகாமல் இறந்த கால்நடைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாகப் போடுவது வழக்கம். மருந்தின் வீரியம் சில வாரங்களுக்கு மாட்டின் உடலில் இருக்கும். அதை எதிர்பாராமல் உண்ட ‘பாறு’ கழுகுகளின் சிறுநீரகத்தை அம்மருந்து செயலிழக்கச் செய்து உயிரிழப்பை ஏற்படுத்துகிறது என அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்தன. இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனமும் இதனை மீள் ஆய்வு செய்து உறுதி செய்தது. 

டைக்லோபினாக் மருந்து மட்டுமின்றி அசிக்லோபினாக் (Aceclofenac), ப்லூநிக்சின் (Flunixin), கார்ப்ரோபென் (Carprofen), நிமெசுலைட் (Nimesulide), கீட்டோபுரோபென் (Ketoprofen) உள்ளிட்ட மருந்துகளும் பாறு கழுகுகளுக்குத் தீங்கு செய்யும் எனவும் குறிப்பாக அசிக்லோபினாக் மருந்து உடலில் செலுத்தியபின்னர் டைக்லோபினாக் மூலக்கூறாக மாறி அதே சிக்கலை ஏற்படுத்தும் என அப்போதே நடத்தப்பட்ட தொடர் ஆராய்ச்சிகள் உறுதிபடத் தெரிவித்தன. மேலும் நிமெசுலைட் மருந்து டைக்லோபினாக் மருந்தை விட உடனே எதிர்வினையாற்றிப் பாறு கழுகுகளைப் பாதிக்கிறது எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்தன. பாதுகாப்பான மாற்று மருந்தாக மெலாக்சிகம் (Meloxicam) மற்றும் டோல்பினாமிக் ஆசிட் (Tolfenamic acid) ஆகிய மருந்துகள் மட்டுமே அரசால் பரிந்துரைக்கப்பட்டன. 

டைக்லோபினாக்  மருந்தைத் தடைசெய்ததற்குப் 17 ஆண்டுகளுக்குப் பின்னரே அதாவது 2023 - ஆம் ஆண்டுதான் அசிக்லோபினாக் மற்றும் கீட்டோபுரோபென் ஆகிய மருந்துகள் தடைசெய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தடைசெய்யப்பட்டுள்ள நிமெசுலைட் மருந்து மனிதர்களுக்கு முதுகுவலி, காய்ச்சல், நாள்பட்ட வலி, பெண்களின் மாதவிடாய்த் தொல்லைக்கும் கைகண்ட மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. 

இம்மருந்து மனிதர்களுக்கு குறிப்பாகச் சிறார்களுக்குக் கல்லீரல் வீக்கம், கல்லீரல் அரிப்பு, குருதிச் சிவப்பணுக்கள் சிதைவு,  சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட பின் விளைவுகளை ஏற்படுத்துவதைக் கருத்தில்கொண்டு  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், கனடா, அமெரிக்க ஒன்றிய மாநிலங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பின்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், அயர்லாந்து ஆகிய நாடுகள் 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே மனிதர்களுக்குப் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய ஒன்றிய அரசும் 2011-ஆம் ஆண்டே இம்மருந்தை 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று தடைசெய்தது. ஆயினும் தொடர்ந்து இம்மருந்து சிறார்களுக்குப் பயன்படுத்தப்படுவதையும் மருத்துவர்களுக்கே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையும் சுட்டிக் காட்டி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கடந்த அக்டோபர் மாதம் சுற்றறிக்கை ஒன்றைக் கண்காணிப்பு நிறுவனமான இந்திய மருந்தியல் ஆணையம் (Drug Control General)அனுப்பியது. 

மனிதர்களுக்கு, அதுவும் சிறார்களுக்குத் தீங்கு செய்யும் என உறுதிபடத் தெரிந்தும் மருத்துவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நிலைமை இருக்கும்போது கால்நடைப் பயன்பாட்டிற்கு விடுக்கப்பட்ட தடை எவ்விதம் பலனளிக்கக்கூடும் என்ற முதன்மையான கேள்வி எழுகிறது. 

மருத்துவர் அளிக்கும் பரிந்துரைச் சீட்டு இன்றி நம்மூரில் எளிதாக எவ்வித மருந்தையும் வாங்கமுடியும் என்பதும் மருந்துக்கடை தவிர பெட்டிக்கடையிலும் வலிப் போக்கி மருந்துகள் விற்கப்படும் என்பதும் ஊர் அறிந்தது.

டைக்லோபினாக் தடை கடந்து வந்த வழியைப் பார்க்கும்போது இந்த ஐயம் கூடுதலாகிறது.  ஆம். இம்மருந்தைக் கால்நடைப் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்வதாக 2003-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அன்றைய தலைமை அமைச்சர் மாண்புமிகு மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற ஓர் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆயினும், அந்த ஆணை 16 மாதங்கள் கழித்து 2006-ஆம் ஆண்டு சூலை மாதந்தான்  அரசிதழில் வெளியாகிற்று. 

மனிதர்களுக்கு அம்மருந்து தொடர்ந்து பயன்பாட்டில் இருந்ததாலும் பெரிய அளவிலான புட்டிகள் (30 மிலி, 100 மிலி) தடைசெய்யப்படாததாலும் அவை மடைமாற்றம் செய்யப்பட்டுக் கால்நடைகள் பயன்பாட்டுககுத் தொடர்ந்து கிடைத்து வந்தன. இது அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு மருந்துக் குப்பியின் மீது ‘கால்நடைப் பயன்பாட்டிற்கு அல்ல’ என்ற எச்சரிக்கை வாசகம் பொறிக்கப்பட்டது. ஆயினும் அதுவும் பெரிதாகப் பலனளிக்கவில்லை. தொடர்ந்து கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டே வந்ததைக் கள நிலவரம் உணர்த்திற்று. அதனைக் கண்காணிப்பதில் உள்ள சிக்கலைக் கருத்தில்கொண்டு 3மிலி அளவுக்கு மேல் தயாரிக்கவே அனுமதிக்கக் கூடாது என்ற வேண்டுகோள் மீண்டும் அரசுக்கு விடப்பட்டது.  அதனை ஏற்றுக்கொண்டு 2015-ஆம் ஆண்டு 3மிலி அளவுக் குப்பிக்கு மேல் டைக்லோபினாக் மருந்தைத் தயாரிக்க மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை தடை விதித்தது. மருந்துக் கம்பெனிகள் நீதிமன்றத்தை அணுகி அந்த ஆணையை இடைநிறுத்தம் செய்தன. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் ஒத்துழைப்பினாலும் கட்டுரையாளர் எடுத்த கூட்டு முயற்சியின் காரணமாகவும் இடைக்காலத் தடை உத்தரவு 2017-ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. 

அசிக்லோபினாக், கீட்டோபுரோபென், நிமெசுலைட் ஆகிய மருந்துகளும் கால்நடைப் பயன்பாட்டுக்குத் தடை என்பதாகத்தான் அரசிதழில் வெளியான செய்திக்குறிப்புத் தெரிவிக்கிறதே தவிரப் பெரிய அளவிலான குப்பிகள் (30 மிலி, 100மிலி) தடை செய்யப்படுவது குறித்துக் குறிப்பிடவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.  எனவே இம்மருந்துகளின் பெரிய அளவிலான குப்பிகள் கால்நடைகள் பயன்பாட்டிற்குக் கிடைப்பதைத் தடைசெய்ய முடியாது. 

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம் (The Bombay Natural History Society) உள்ளிட்ட பறவைப் பாதுகாப்பு அமைப்புகள் அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வுகளின் போது, 2020-ஆம் ஆண்டு தயாரிப்புத் தேதி அச்சிடப்பட்ட மருந்துக் குப்பிகள் மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், பீகார், பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முறைகேடாகக் கிடைக்கப்பெறுவதாகத் தெரிய வந்தது. 

தமிழ்நாட்டில் நிலைமை ஓரளவு பரவாயில்லை என்றாலும் அருளகம் அமைப்பு கடந்த டிசம்பரில் மேற்கொண்ட மருந்துக் கடை ஆய்விலும் கவலை அளிக்கும் செய்திகள் கிடைத்தன. அதாவது தடை செய்யப்பட்ட மருந்துகளின் பெயரைக் கூறி அவை கிடைக்குமா என்று கேட்டபோது, தற்போது இருப்பில் இல்லை; தேவைப்பட்டால் வாங்கித் தருகிறோம் எனச் சில மருந்துக் கடைகளில் பதில் தெரிவித்தனர். அதேபோல, தடைசெய்யப்பட்ட மருந்துகளின் சிறிய அளவிலான குப்பிகளை (1மிலி, 3மிலி) மொத்தமாக வாங்கிக் கால்நடைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாமா எனக்கேட்டபோது பயன்படுத்திக்கொள்ளலாம் எனச் சில மருந்துக்கடைகளில் பதில் வந்தது. இவை எல்லாம் கவலையளிக்கும் பதில்கள்.

தற்போது பாறு கழுகுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. ஏற்கனவே கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் பாறு கழுகுகளை வாழ்வாங்கு வாழ வைக்கவும், இத்தடை எதிர்பார்த்த பலனை அளிக்கவும் கீழ்க்காணும் கோரிக்கையை அரசுக்கு முன் வைக்கிறோம்.  

பெரும்பாலான நேரம் மருந்துகளைத் தடைசெய்வதில் கால விரயமாகிறது. அதுவும் மருந்துக் கம்பெனிகளை ஊடறுத்து இதைச் செய்யவேண்டிய தேவை இருக்கிறது. அதற்குள் பாறு கழுகுகளின் எண்ணிக்கை மீள முடியாத அளவுக்குச் சரிந்துவிடும் ஆபத்து உண்டு. எனவே,
* இனி எவ்வித மருந்துகளும் கால்நடைகளுக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, அம்மருந்துகளால் வேறு உயிரினங்களுக்கு ஏதேனும் பின் விளைவுகள் நேருமா என்பதனை இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (Indian Veterinary Research Institute) ஆராய்ந்து பரிந்துரைத்த பின்னரே அனுமதிக்கவேண்டும். 
* முதல்கட்டமாக, ப்லூநிக்சின், கார்புரோபென் ஆகிய மருந்துகள் உடனே தடைசெய்யப்படவேண்டும். 
* கீட்டோபுரோபென், அசிக்லோபினாக், நிமெசுலைட் ஆகிய மருந்துகளை 3மிலி அளவுக்கு மேல் தயாரிப்பதை முற்றாக நிறுத்த வேண்டும்.
* தடை குறித்துக் கால்நடை மருத்துவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்ப வேண்டும். மருந்துக் கடைக்காரர்களுக்கும் கால்நடை மருத்துவர்களுக்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். இதனைத் தற்போது பாறு கழுகுகள் வலம் வரும் பகுதியிலாவது முதல்கட்டமாக மேற்கொள்ள வேண்டும். ஆயினும் மாட்டுச் சந்தை மூலமும் வாகனம் வழியாகவும் எங்கிருந்து வேண்டுமானாலும் கால்நடைகள் எளிதில் இடம்பெயரும் என்பதால் அடுத்த கட்டமாகப் பிற பகுதிகளுக்கும் இதை விரிவு படுத்த வேண்டும்.
* கால்நடை மருத்துவர்களைத் தவிர பிறரும் மருத்துவம் பார்க்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மருந்துக் கடைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி மருத்துவர் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் மருந்து தரப்படுவதைத் தடுக்கவேண்டும். அதற்கேற்ப ஒவ்வொரு மருந்துக் கடையிலும் வலிமருந்துகள் விற்கப்பட்ட விபரம் (பரிந்துரைத்தவர் பெயர், வாங்கியவர் பெயர், காரணம்) போன்ற குறிப்புகள் பேணப்பட்டு மாதந்தோரும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்கு ஒப்படைக்கப்படவேண்டும்.
* தற்போது இணைய வழியிலும் மருந்துகளை எளிதாகப் பெறமுடியும் என்பதால் அதனையும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அரசு கையாள வேண்டும்
* அடிக்கடி மருந்துக் கடைகளில் கண்காணிப்புச் சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட மருந்துகள் கிடைக்காவண்ணம் உறுதி செய்யவேண்டும்.
* பாறு கழுகுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் ஊக்கி கலக்காத வீக்கத்தை மட்டுப்படுத்தும் மருந்துகளுக்கு (Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs) மாற்றாகச் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி மருத்துவமுறைகளையும் மருந்துகளையும் பயன்படுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும். 
* பாதுகாப்பான மாற்று மருந்துகளை மட்டுமே அரசு மருந்தகங்களுக்கு வாங்க வேண்டும். அத்துடன், அம்மருந்துகள் தள்ளுபடி விலையில் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட அறம் சார்ந்த வணிகச் சிந்தனைதான் பெருமளவு கைகொடுக்கும். மருந்துக் கடைக்காரர்கள் மீதும் கால்நடை மருத்துவர்கள் மீதும் மிகுந்த  நம்பிக்கை இருக்கிறது. அவர்களது உதவியுடன் பாறு கழுகுகள் மீண்டும் வானில் வலம் வரும் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

இத்தடைக்காக பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம் , ஆய்வு மேற்கொண்ட சலீம் அலி பறவையியல் மையம் (Salim Ali Centre for Ornithology and Natural History - Wildlife Institute of India) இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ப்ரிட்டோரியா (Pretoria) கால்நடைப் பல்கலைக் கழகம், பறவைகள் பாதுகாப்பிற்கான அரசுரிமைச் சங்கம் (Royal Society for the Protection of Birds), ஆசியாவின் பாறு கழுகுகளை அழிவிலிருந்து மீட்பதற்கான கூட்டமைப்பு (Saving Asia’s Vultures from Extinctions) ஆகிய அமைப்புகள் பெரும்பங்கு வகித்தன.

அருளகமும் நிமெசுலைட் மருந்தை விலக்கக்கோரிக் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தியது. அத்துடன் குடும்ப நல அமைச்சகத்தின் செயலருக்கும் கடிதம் அனுப்பி இம்மருந்தை விலக்கக்கோரி  பரிந்துரைக்குமாறு வேண்டுகோள் வைத்தது. மேலும், கோயமுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கணபதி இராஜ்குமார் அவர்களுக்கும் கோரிக்கை வைத்தது. தொடர்ந்து முழுமூச்சாகக் களமாடிய அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றி. இன்னும் பயணம் தொடர்கிறது.

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Newsletter

Subscribe to our newsletters to receive latest news and updates.
I agree with the Privacy policy