பாறு கழுகு பாதுகாப்பு மருந்துக் கடை உரிமையாளரின் முன்முயற்சி
18-08-24
இன்று எனது வாட்சப் புலனத்திற்கு சூலூர் தாலுகா மருந்து வணிகர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் ஸ்ரீகுமரன் மெடிக்கல்சு நிர்வாகியுமான திரு மனோஜ்குமார் அவர்கள் ஒரு சுவரொட்டிப் புகைப்படம் ஒன்றை அனுப்பி அதனைத் தனது மருந்துக் கடையின் வாசலில் ஒட்டியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். வாசித்துப் பார்த்தேன். அதில் கால்நடைகளுக்குத் தடை செய்யப்பட்ட மருந்துகள் என டைக்குளோபினாக், கீட்டோபுரோபேன், அசிக்குளோபினாக் ஆகிய மருந்துகளும் கால்நடை மருத்துவரின் பரிந்துரை மருந்துச் சீட்டு இல்லாமல் தர இயலாது என்ற பட்டியலிடப்பட்ட புளூநிக்சின், நிமிசிலாய்ட்சு, கார்புரோபேன் ஆகிய மருந்துகளும் இடம்பெற்றிருந்தன. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சூலூர் மருந்து வணிகர் சங்கப் பொதுக்குழுக்கூட்டத்தில் இவ்வாறு எச்சரிக்கை அறிக்கை அடித்து எல்லா மருந்துக் கடைகளிலும் ஒட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது என்றும் சொன்னார்.
இதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?. பட்டியலில் இடம்பெற்ற மருந்துகள் எல்லாம் பாறு கழுகுகளின் வாழ்வியலோடு நேரடித் தொடர்புடையவை. இந்த மருந்துகளின் வீரியம் வெறும் 0.01 விழுக்காடு கலந்த ஒரே ஒரு மாட்டின் உடலத்தை அவை உண்ண நேர்ந்தால் கூட அது அவற்றுக்குப் பேராபத்தாய் முடியும்.
மருந்து வணிகர்களுக்கும் கால்நடை மருத்துவர்களுக்கும் இது குறித்து எடுத்துச் சொல்வதற்காக சென்ற வருடம் அவர்களைப் பாறு கழுகுகளின் வாழிடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தோம். அருளகமும் வனத்துறையும் உலக இயற்கைக் காப்பு அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் குமரன் மெடிக்கல்சு நிர்வாகி மனோஜ் அவர்களும் மருந்து ஆய்வாளர் திரு பிரகாசு அவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நிகழ்வின் நல்வினையாக இது தற்போது நடந்தேறியுள்ளது.
சூலூர் தாலுகாவில் உள்ள மருந்துக் கடைகளில் எல்லாம் ஒட்டுவதற்கு முன்மொழிந்த பல்லடத்தைச் சேர்ந்த மருந்துக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் திரு பிரகாசு அவர்கட்கும் இப் பரிந்துரையை விரும்பி ஏற்று அதைத் தங்கள் கடைகளில் ஒட்ட முன்வந்த சூலூர் வட்டார மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இதனை கோயமுத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மருந்துக் கடைகளுக்கு முன்னரும் ஒட்டுவதோடு கால்நடைப் பயன்பாட்டிற்கு இம் மருந்தை அறவே தராமல் புறக்கணிக்குமாறும் மருந்துக் கடைக்காரர்களை அன்புடன் வேண்டுகிறோம். தேர்ந்தெடுத்த பயனாளிகளுக்காக ஆழ்ந்த அக்கறையுடன் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தாக்கம் எப்படி எதிரொலிக்கும் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. உண்மையான மனமாற்றமே வெற்றியைத் தரும். இதன் மூலம் பாறு கழுகுகளின் வாழ்வில் நிச்சயம் நம்பிக்கைக் கீற்று விழும்.
மனோஜ் பற்றி…
திரு. மனோஜ் அவர்கள் சென்ற கோடை விடுமுறையின் போது குடும்பத்துடன் மாயாறுக்கு சுற்றுலா வந்தபோது பறவையாளரும் ஓவியருமான சிவக்குமார் அவர்கள் வரைந்த பாறு கழுகு படத்தின் அருகில் நின்று செல்பி எடுத்து அனுப்பி என்னை ஆச்சரியமூட்டியிருந்தார். இவருக்கு அருளகம் சார்பாகவும் பாறு கழுகு அன்பர்கள் சார்பாகவும் திரளான நன்றியினை உரித்தாக்குகிறோம்.