கால்நடைகளுக்கு வரும் நோய்கள் குறித்தும் பாறு கழுகுகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வுக் கூட்டம்
மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு வரும் நோய்கள் குறித்தும் பாறு கழுகுகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வுக் கூட்டம் சத்தியமங்களம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தலைமலையில் அருளகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. திறந்தவெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் எளிய முறையில் நாட்டு மருத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்காக யுவர்பார்ம் நிறுவனத்தைச் சேர்ந்த திரு.ரகு அவர்கள் வருகை புரிந்தார்.
மாவநத்தம்,பெஜலட்டி,தடசலட்டி ஆகிய கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள கால்நடை வளர்ப்போரைச் சந்தித்து கால்நடைகளுக்கு வரும் நோய்கள் பற்றிக் கேட்டறிந்தோம். கால்நடைகளுக்கு உண்ணி, மடிவீக்கம், அம்மை போன்ற நோய்கள் வருகின்றன என்று தெரிவித்தனர். அதற்கு எளிய முறையில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களைக் கொண்டு எப்படி மருந்து தயார் செய்வது என்பது குறித்தும் நோய் வராமல் தடுக்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் குடல் புழு தாக்கிய கால்நடைகளை எப்படிக் கண்டறிய வேண்டும் என்பது குறித்தும் குடல்புழு நீக்கம் செய்யவேண்டியதன் அவசியத்தையும் ரகு அவர்கள் எடுத்துரைத்தார்.
மேலும் கால்நடைகள் கட்டப்பட்டு இருக்கும் கட்டுத்துறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இதன் மூலம் மடிவீக்கம் வராமல் தடுக்க முடியும் என்றார்.
அருளகத்தின் செயலார் திரு.பாரதிதாசன், மாடுகளுக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பதுண்டா என்று பங்கேற்பாளர்களைக் கேட்டபோது, நோய் வந்தால் மருத்துவரை அழைப்போம் என்றும் மருத்துவர் வருவதற்குத் தாமதமானால் தாங்களே நாட்டு வைத்தியம் பார்த்துக்கொள்வோம் என்றும் கூறினர். இறந்த மாடுகளின் சடலத்தை என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது சிலர் புதைத்துவிடுவோம் என்றும் சிலர் அப்படியே விட்டுவிடுவோம் என்றும் கூறினர். கால்நடைகள் புலி தாக்கி இறந்தால் அதற்குரிய இழப்பீடு பெற்றுள்ளீர்களா என்றும் கேட்டபோது, சிலர் வாங்கியுள்ளதாகவும் சிலர் கிடைக்கவில்லை என்றும் பதில் கூறினர். அவர்களிடம் பதிலைப் பெற்றுக்கொண்ட பின்னர், பாறு கழுகுகளின் சூழல் முக்கியத்துவம் குறித்தும் தாங்கள் தெரிந்தும் தெரியாமலும் தரும் மருந்துகளால் ஒரு உயிரினமே வாழ்வா சாவா என்று வாழ்ந்து வருவதாகவும் பாறு கழுகுகளைக் காக்க உங்களது ஒத்துழைப்பு அவசியம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அக்கூட்டத்தில் பெரியவர் ஒருவர் இந்த விழிப்புணர்வு ஒரு நாள் மட்டுமே போதாது என்றும் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அரசுத்துறை உள்ளிட்ட தனியார் அமைப்புகளும் இப்படி ஒரு நாளில் போகிறபோக்கில் சொல்லி விட்டுப் போவதில் பயனில்லை என்றும் கூறினார். அதற்குப் பதிலளித்துப்பேசிய சு. பாரதிதசான், தற்போது உங்கள் ஊரிலிருந்தே இரண்டு நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளோம் என்றும் அவர்கள் உங்களுடன் அடிக்கடித் தொடர்பில் இருப்பார்கள் என்றும் கூறினார். கால்நடையிலிருந்து கிடைக்கும் பாலை மதிப்புக் கூட்டி வெண்ணெய், நெய், தயிர், மோர் என மாற்றுவது குறித்தும் சாணத்திலிருந்து மண்புழு உரம், ஊதுபத்தி, திருநீர், மற்றும் எருவாட்டி ஆகியவற்றைத் தயார்படுத்தி உங்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்று அருளகத்தின் உயிரியலாளர் செல்வி சுந்தரி எடுத்துரைத்தார்.
அருளகத்தின் சமூகப் பணியாளர் செல்வி ரேவதி அவர்கள் பாறு கழுகுகளின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். பாதுகாப்பான மாற்று மருந்துகள் எவை என்பது குறித்தும் தடை செய்யப்பட்ட மருந்துகள் எவை என்பது குறித்தும் அருளகத்தின் ஆராய்ச்சியாளர் சர்மா அவர்கள் எடுத்துக் கூறினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பேபி ஷாலினி செய்திருந்தார்.