12th Annual SAVE Meeting
பாறுக் கழுகுகள் பாதுகாப்பிற்கென ஒருங்கிணைக்கப்படும் 12வது ஆண்டுக் கூட்டம் நேபாள நாட்டில்
நாவல்பூர் மாவட்டத்திலுள்ள சித்துவான் தேசியப்பூங்காவில் கடந்த மூன்று நாட்களாக (9 லிருந்து 11 -3- 2023) வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேசு, மியான்மர், கம்போடியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பாறுக் கழுகுகள் தொடார்பாக ஆராய்ச்சியிலும் பாதுகாப்பிலும் ஈடுபட்டுவரும் 45க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வை நேபாள பறவைகள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைத்தது.
இதில் அருளகம் சார்பாக நானும் பேச அழைக்கப்பட்டேன். எனது உரையில் வெவ்வேறு தரப்பு மக்களிடம் எவ்வாறு அருளகம் களப்பணியாற்றி வருகிறது என்பதை எடுத்துரைத்தேன். அத்துடன் இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டு அரசால் எடுக்கப்பட்டக் கொள்கை முடிவுகளையும் குறிப்பிட்டேன். அருளகத்தின் முன்னெடுப்புகளையும் தமிழ்நாட்டு அரசின் முன்முயற்சியையும் வெகுவாகப் பாராட்டினர். நிகழ்ச்சியில் முத்தாயப்பாக உலகிலேயே பாறுக்கழுகுகளுக்கான முதல் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக சித்வான் பகுதி அறிவிக்கப்பட்டது. இப்பகுதியை மக்கள் பங்கேற்புடன் பாதுகாக்கப்ட்ட பகுதியாக உருவாக்கத் தன்பகதூர் சவுத்ரி மற்றும் கிறிஸ்னா பூசல் ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் வெளிப்பாடாக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பாறுக் கழுகுகள் பறக்கவிடப்பட்டன. நிகழ்வில் ‘பாறுக் கழுகுகளைத் தேடி’ என்ற எனது நூலையும் வழங்கினேன்.எனது புத்தகத்தின் முகப்புரையில் தன்பகதூர் சவுத்ரி மற்றும் கிறிஸ்னா பூசல் ஆகிய இருவர் பெயரையும் குறிப்பிட்டு அவர்களுக்கும் புத்தகத்தைக் காணிக்கையாக்கி இருப்பதைத் தெரிவித்தபோது நெகிழ்ந்துபோயினர். நிகழ்ச்சியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொண்டார். சேவ் அமைப்பின் பொறுப்பாளர் ரைஸ்கீரீன் மற்றும் மேற்பார்வையாளர் கிறிஸ்பௌடன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தமிழ்நாட்டிலும் பாறுக் கழுகுகளுக்கென பாதுகாக்கப்பட்ட மண்டலம் ஒன்று உருவாக வேண்டும். அதை நோக்கி அருளகம் உங்கள் அனைவரது ஆதரவோடும் முன்னெடுக்கும்.