Jharkhand Visit
ஜார்கண்டு மாநிலத்தின் மல்லுயிர் வகைமை வாரியத்தின் தலைவர் திருமிகு ரவி சிங்கால் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து வரும் பிப்ரவரி 10 அன்று ஜார்கண்ட்டு மாவட்ட வன அலுவலர்களிடம் பாறுக் கழுகுகள் பாதுகாப்பு குறித்து உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் அழைத்த பொழுது நான் முதுமலையில் களப்பயணத்தில் இருந்தேன். அவர்தம் அழைப்புக்கு நன்றியும் மகிழ்ச்சி தெரிவித்தேன். மேலும் ஜார்க்கண்ட்டு மாநிலத்தில் பாறுக் கழுகுகள் பாதுகாப்புக்காக வேலை செய்துவரும் நியோஹூமன் பவுண்டேசன் நிறுவனரான முனைவர் சத்யபிரகாசு அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் என்னை விடப் பொருத்தமானவராயிருப்பார் எனவும் கூறினேன்.
உங்கள் செயல்பாடு குறித்து வாசித்தறிந்தேன்.நீங்கள் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த பணி ஆற்றிவருவதப் பற்றிக் கேள்விப்பட்டேன். அதை இங்குள்ள வனத்துறை அலுவலர்களிடம் பகிர்ந்து கொண்டால் உந்துதலாய் இருக்கும் என மறுமொழி கூறினார். ஒருபுறம் அவர் அழைப்பு எனக்கு மகிழ்ச்சியாயிருந்தாலும் மறுபுறம் உள்ளூரில் ஒருவர் இருக்க என்னை மட்டும் அழைத்தது என்னைத் தர்ம சங்கடத்துக்கு ஆட்படுத்தியது.
‘ஜார்க்கண்டு’ என்ற சொல்லுக்குக் காட்டு நிலம் எனப் பொருள். ஜார்க்கண்டு மாநிலத்திற்குச் செல்வது எனக்கு இது முதல்முறைப் பயணம். ஜார்க்கண்டு மாநிலப் பழங்குடியினர் குறித்தும் பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டா அவர்கள் குறித்தும் இருபது ஆண்டுகட்கு முன்னர் வாசித்திருக்கிறேன். ஆங்கிலேயர்களின் துப்பாக்கிக் குண்டுக்கு எதிராக வில் அம்பைக் கொண்டு போராடியது குறித்துப் படித்து நெகிழ்ந்திருக்கிறேன். அதேபோல ஜார்க்கண்டு மாநிலத் தலைநகரான ராஞ்சி என்ற பெயர் எனக்குப் பள்ளிக் காலங்களில் ராஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் என்ற பெயரில் அறிமுகமாகியிருந்தது. இப்போது தான் அந்த மண்ணைத் தொடும் வாய்ப்புக் கிடைத்தது.
இந்தக் கருத்தரங்கமானது பல்லுயிர் வகைமைச் சட்டத்தைத் மாநிலத்தில் திறம்படப் பயன்படுத்துவது குறித்தும் அதன் பயனை உள்ளூர் மக்களும் பெறுவது எப்படி என்பது குறித்தும் வனத்துறை அலுவலர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாநிலமெங்கிலிருந்தும் 40க்கும் அதிகமான வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருமிகு L.Khiangte கூடுதல் தலைமைச் செயலர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, இளைஞர்களிடம் சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் ஒவ்வொரு நாளும் காட்டுப் பகுதியைப் பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கோரி கடிதம் மூலமும் தொலைபேசி வாயிலாகவும் வனத்துறைக்கு அழுத்தம் தரப்படுவது குறித்தும் வருத்தமுடன் குறிப்பிட்டார். அவர் உரையைத் தொடங்கும்போது தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த எனது பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டார். பல்லுயிர் வகைமை வாரியத் தலைவர் திருமிகு ரவி சிங்கால் நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றினார். மாநிலத் தலைமை வனப்பாதுகாவலர் திருமிகு சஞ்சய் சீரிவத்சா அவர்கள் தொடக்க உரையாற்றினார். கூட்டத்தில் ஓய்வு பெற்றத் தலைமை வனப்பாதுகாவலர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பல்லுயிர் வகைமைச் சட்டத்திலுள்ள வரவேற்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இன்னும் கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டியது குறித்தும் திருமிகு சீனிவாச மூர்த்தி அவர்கள் கவனப்படுத்தி உரையாற்றினார்.
எனது உரையினை உள்ளூர்ப் பழங்குடி மொழியில் ’ஜோகார்’ என வணக்கம் கூறித் தொடங்கினேன். அவர்களுடன் தமிழ் நாட்டில் வனத்துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு அருளகம் மேற்கொண்டு வரும் பணிகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன் உள்ளூரில் பாறுக் கழுகுப் பாதுகாப்பிற்காக வேலை செய்துவரும் நியோஹூமன் பவுண்டேசன் நிறுவனர் சத்யப்பிரகாசு அவர்களைப் பற்றியும் மறக்காமல் குறிப்பிட்டேன்.
பாறுக் கழுகுகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக வாலிபால் போட்டி நடத்தி வருவதைக் குறிப்பிட்டு நீங்கள் உங்கள் பகுதிக்குப் பொருத்தமாகக் கிரிக்கெட் போட்டி நடத்தலாம் எனவும் மண்ணின் மைந்தரான கிரிக்கெட் புகழ் திரு தோனி அவர்களை அதற்குத் தூதுவர்களாகப் பயன்படுத்தலாம் எனவும் எனது உரையில் குறிப்பிட்டேன். மேலும் அண்மையில் ஜார்க்கண்டு மாநில முதல்வர் அவர்கள் மாண்புமிகு இந்திய அரசின் தலைமை அமைச்சருக்கு எழுதியக் கடிதத்தை எடுத்துக் காட்டி அதில் பழங்குடியினர் நலம் பாதிக்கப்படுவது குறித்துச் சுட்டிக் காட்டி எழுதியமைக்காக எனது தனிப்பட்ட வாழ்த்தையும் தெரிவித்தேன். என்னை உரையாற்ற அழைத்தமைக்காக நன்றியும் தெரிவித்தேன்.
அடுத்தநாள் களப்பயணமாக ஹசாரிபாக் எனும் மாவட்டத்திற்குச் சென்றிருந்தேன். வழியெங்கும் முருக (இலைப்பொரசு) மரங்களும் மஞ்சள் இலவு மரங்களும் பூத்துக் குலுங்கின. கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. என்னுடன் காட்டுயிர் நிறுவனத்தில் ஆய்வாளராக இருக்கும் இளைஞர்கள் தீபக்கும் விக்னேசும் கலந்து கொண்டனர். அவர்களிடம் உரையாடியது எனக்கு உற்சாகமாய் இருந்தது. சத்யபிரகாசு அவர்கள் அதிகாலையில் என்னை அழைத்துச் சென்று பாறுக் கழுகுகள் முன்னர் கூடமைத்திருந்த தைல மரத்தைக் காட்டினார். அம்மரங்களை வெட்ட முயற்சித்தது குறித்தும் அதைத் தடுக்கத் தான் மேற்கொண்ட முயற்சி குறித்தும் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அடுத்ததாக பாறுக் கழுகுகள் பனை மரத்தில் கூடமைத்திருந்ததைக் கேள்விப்பட்டு அங்கு சென்றோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் அலைந்தும் பாறுக் கழுகுகள் ஏதும் தென்படவில்லை. ஆயினும் வேறு வகைப் பறவையினங்கள் புதிதாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஹசாரிபாக் மேற்கு மண்டலத்தின் வன அலுவலர் திருமிகு ஆலம் அன்சாரி அவர்களைச் சந்தித்து எனது பயணத்திற்கு உதவியமைக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்தேன்.
ராஞ்சி செல்லும் வழியில் குப்பைக் கிடங்கின் அருகில் வண்டியை நிறுத்தச் சொன்னேன். அங்கு காலாவதியான மாத்திரைகள் மருந்துகள் எல்லாம் கொட்டப்பட்டுக் கிடந்தன. குப்பைக் கிடங்கில் மைனா, வாலாட்டி, கொக்கு, சிட்டுக்குருவி, கரும்பருந்து ஆகியன இரை தேடியபடி இருந்தன. இந்த மருந்துகள் எல்லாம் மழை பெய்யும்போது தண்ணீரில் அடித்துச் சென்றால் அதைப் பறவைகளும் விலங்குகளும் குடித்தால் என்னாகுமோ என்ற அச்சம் மேலிட்டது. கடந்தவாரம் இதேபோல மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்ட செய்தி நாளிதழில் வந்ததையும் இணைத்துப் பார்த்தேன்.
ஜார்க்கண்டு மாநிலம் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி. ஆயினும் மக்கள் வறுமையில் உழல்கின்றனர். நிலக்கரி, மைக்கா, இரும்புத்தாது எடுக்கும் பொருட்டுக் காட்டுப் பகுதிகள் தொடர்ந்து அழுத்தத்திற்கு ஆட்பட்டு வருகின்றன. வனவிலங்கு நடமாட்டமற்றக் காட்டுப்பகுதியாக மாறி வருகின்றன. இங்குள்ள மக்களும் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு வனத்தையே நம்பியுள்ளனர். மக்கள் பங்களிப்பு இல்லாமல் அவர்களது வறுமையைப் போக்காமல் காட்டையும் காட்டுயிர்களையும் காப்பாற்ற முடியாது. இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
இன்னும் நாம் களப்பணியாற்ற வேண்டியதும் பயணிக்க வேண்டியதும் அதிக தொலைவு என்பதை உணர்ந்து திரும்பினேன்.