பாறுக் கழுகுகள் செழித்தால் பாரும் செழிக்கும்
’பாறு’ எனச் சங்கத் தமிழிலும் இருளர் பழங்குடியினராலும் ’பத்’ எனத் தோடர் மக்களாலும் ‘ரணபத்து’ எனப் படுகு மக்களாலும் ’பிணந்தின்னிக் கழுகு’ எனச் சமவெளி மக்களாலும் அழைக்கப்படும் பறவை இனம் இறந்த விலங்குகளை உண்டு காட்டைத் தூய்மைப் படுத்துவதோடு நமக்கும் நோய்நொடி பரவாமல் காக்கும் அருமையான பணியினைச் செய்து வருகிறது.
பாறுக் கழுகுகள் தற்போது மிகவும் அரிதாகி விட்டன. அவற்றை அழிவிலிருந்து மீட்க மண்ணின் மைந்தர்களோடும் பல்வேறு தரப்பினருடனும் இணைந்து வனத் துறை, கால்நடைத் துறை, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலோடு அருளகம் அமைப்பு முனைப்புடன் செயலாற்றிவருகிறது.
கால்நடைகளுக்குப் பயன்படுத்திய வலி மருந்துகளின் வீரியமானது இறந்த மாட்டை உண்டபோது இவற்றை அடைந்து இப் பறவைகளின் அழிவிற்குப் பெரிதும் காரணமாய் அமைந்தது.
எனவே இப் பறவைகளுக்குத் தீங்கு செய்யும் கால்நடை மருந்துகளான டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், நிமுசிலாய்ட்ஸ், புளூநிக்சின், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளைப் புறக்கணிக்கக் கோரியும் பாதுகாப்பான மாற்று மருந்துகளான மெலாக்சிகம், டோல்பினமிக் ஆசிட் மருந்துகளையும் சித்தா ஆயுர்வேதா, ஹோமியோ ஆகிய மருந்துகளைப் பயன்படுத்தக் கோரியும் பல்வேறு வகையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அத்துடன் இப் பறவைகளின் அழிவிற்குக் காரணமான விசம் தடவப்பட்ட சடலங்களை உண்ண நேர்வதால் அவை அழிவுக்கு ஆட்பட்டு வருவதைப் பற்றியும் இயற்கையாக இறந்த விலங்குகளைப் புதைக்காமலும் எரிக்காமலும் பாறுக் கழுகுகளுக்கு உணவாக்க வேண்டுகோள் விடுத்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் (08 & 09 -02-2023) பொம்மலாட்டம் மூலம் எப்பநாடு, கூக்கல் துறை, சின்னக் குன்னூர், உல்லத்தி ஆகிய ஊர்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். நாம் வாழும் பகுதியைப் பாறுக் கழுகுகள் செழித்து வாழும் பகுதியாக மாற்ற ஆதரவு நல்குவீர். இறந்ததைத் தின்று இருக்கும் உயிரினங்களைக் காக்கும் பாறுக் கழுகுகள் செழிக்கட்டும்.