Vulture Conservation

Egyptian vulture

Egyptian vulture

‘மஞ்சள் முகப் பாறு’ எனப்படும் ‘Egyptian vulture’ கிருட்டினகிரி மாவட்டம் அஞ்செட்டிப் பகுதியில் பாறைப் பொந்தில்  பத்தாண்டுகட்கு முன்னர் வசித்து வந்த செய்தியை வன அலுவலர் திரு ஆனந்த் அவர்களும் ஓய்வுபெற்ற வனத்துறைப் பாதுகாவலர் திரு கணேசன் அவர்களும் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தில் சுழியம் நிலைக்குச் சென்றுவிட்ட மஞ்சள் முகப்பாறு தற்போதும் அங்கு வாழ்கிறதா என்று பார்த்துவரவேண்டும் என்ற ஆவல் சில ஆண்டுகளாகவே எனக்குள் இருந்தது.  அவ்வப்போது சேலம் பகுதியிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஒன்றிரண்டு மஞ்சள் முகப்பாறுக் கழுகுகள் தென்படுவதும் எனது ஆர்வத்தைக் கிளறியபடி இருந்தது. ஒட்டுவாரொட்டி  எனப்படும் பெருந்தொற்றின் (Pandemic) தாக்கத்தால் அங்கு செல்வதற்கான வாய்ப்பு தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. ஒரு வழியாக அது சென்றவாரம் நிறைவேறியது. வனத்துறை அலுவலர் திருமிகு கார்த்திகேயனி அவர்கள் வழிகாட்டுதலுடன் வனத்துறை மருத்துவர் பிரகாசு அவர்கள் தலைமையில் பறவை அன்பர்கள் ஜோசப்ராஜா, மோகன்ராஜ், கார்த்திகேயன், ஜெயசங்கர் மற்றும் ஆகியோர் உடன்வந்தனர். ஆங்காங்கே நிறுத்திப் பறவைகளைப் பார்த்தபடி சென்றோம். தேன் பருந்து (Honey buzzard), லகுடு- (Kestrel), இராசாளி - Bonellis eagle, கருங்கழுகு - Black eagle ஆகியனவற்றையும் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. காட்டை ஊடறுத்துச் சென்ற பென்னாகரம் ஒகனேக்கல் சாலையின் வழியில் நரி ஒன்று தாவி ஓடியது. பல்லாண்டு இடைவெளிக்குப் பின்னர் நரி ஒன்றைப் பார்த்தது மகிழ்ச்சியைத் தந்தது. நரியின் ஊளைச் சத்தம் கேட்டு எவ்வளவு நாளாச்சு என்று பெருமூச்சும் கூடவே வந்தது. ஊளைச்சத்தம் எட்டாத தூரத்திற்குச் சென்றுவிட்ட கவலையுடன் அஞ்செட்டியை அடைந்தோம். பெரியதொரு பாறைக்கு முன் எங்களது வாகனம் நின்றது.  பாறையில் அமையப்பெற்ற பொந்தைக் காண்பித்து அங்குதான் மஞ்சள் முகப்பாறுகள் வாழ்ந்து வந்தன என உடன்வந்த வனக்காப்பாளர் கூறினார். தற்போது அவை அங்கு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. வெண்மை நிறப்படிவாகத் தென்படும் பறவையின் எச்சம் கூடத் தென்படவில்லை. அந்த இடத்தைப் புறா (Blue Rock Pigeon) தன் வசப்படுத்தியிருந்தது. சாலரி - குங்கிலி - Shorea roxburghii எனப்படும் மரக்கூட்டம் வழியாகப் பயணித்துப் பாறையின் மறுபக்கத்தை அடைந்தோம். பெங்களூரு நகரம் காட்டை நெருக்கித் திமிறி எழுந்து ஆக்ரமித்து வருவதை அவதானிக்க முடிந்தது. தலைக்கு மேலே வெண்தோள் பருந்து (Booted eagle) ஒன்று இரை தேடிக் காற்றில் சறுக்கியபடி பறந்து சென்றது. கூடவே நான்கு ஊர்ப் பருந்துகளும் Black kite வானில் வட்டமடித்தபடி பறந்தன.   கீழே இறங்கி வந்தோம், கோயில் வேலை மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது.  கோயில் பூசாரியிடம் திரு. பசவராஜ் (54) உரையாடியபோது, நான்கு ஆண்டுகட்கு முன்புவரை இங்கு மஞ்சள் முகப் பாறுக் கழுகு இருந்தது எனச் சொன்னார்.  எனக்கு மூளையில் சிறு பொறி தட்டியது. இரை ஏதும் இங்கு இல்லாததால் இவை இடம்பெயர்ந்திருக்கலாம். தற்போது அவை பெங்களூரு அருகிலிருக்கும் இராமதேவர்பெட்டாவுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அந்த இடத்தில் இவற்றின் உறவினர்கள் வசித்து வருவதை நான்கு ஆண்டுகட்கு முன்னர் அங்கு சென்றிருந்தபோது பார்த்திருக்கிறேன். மேலும் இங்கிருந்து அந்த இடம் வான்வழியாகச் சென்றால் சுமார் 30 கி,மீட்டர் தூரம் தான் இருக்கும். இந்தத் தொலைவு கழுகைப் பொருத்தவரை கூப்பிடு தூரம் தான். 

Egyptian Vulture Egyptian Vulture Egyptian Vulture

 Egyptian Vulture Egyptian Vulture

இயற்கையாக இறக்கும் காட்டுயிரினங்கள் புதைக்கப்படுவதும் எரிக்கப்படுவதும் தொடர்கதையாக இருக்கும்வரை அவை மீண்டு வரும் என்பது கானல் நீர்தான். உணவில்லாத இடத்தில் அவற்றுக்கு என்ன வேலை?. இரண்டு நாட்களுக்கு முன்னர் யானை ஒன்று இறந்து விட்ட செய்தியை அறிந்தோம். ஒருவேளை அங்கு சென்று பார்த்தால் அவற்றை உண்ண ஏதாவது வருவதற்கு வாய்ப்பிருக்கலாம் என்ற நப்பாசை மேலிட்டது. அடுத்த நாள் அங்கு சென்று பார்க்கலாம் என முடிவெடுத்து அதிகாலையில் கிளம்பி யானையைக் கிடத்திய இடத்தை அறிந்து அங்கு சென்று பார்த்தபோது, எங்களுக்குச் சோகமே மிஞ்சியது. ஆம் அதுவும் எரிக்கப்பட்டுப் பாதி எரிந்து கொண்டிருந்த சிதையைப் பார்த்து வருத்தம் தான் மேலிட்டது. யானையின் சடலத்தை உண்ணவந்த புழுக்களும் அந்தத் தீயில் எரிந்து சாம்பாலாயின. ஒரு மிகப்பெரிய உயிர்ச் சுழற்சியைத் தீயிலிட்டுக் கருக்கிவிட்டனர். இந்த அவலப்போக்கை மாற்ற வனத்துறை முழுமனத்தோடு ஒத்துழைத்தால் தான் உயிர்ச்சுழற்சியை மீட்க முடியும். 

தீவைத்து எரிப்பதை நியாயப்படுத்துவதற்காக, யாரேனும் விசம் வைத்துவிடுவார்கள், கெட்ட நாற்றமெடுக்கிறது, யானையின் எலும்பை யாராவது திருடிச் சென்று விடுவார்கள், நோய் பரவும் என்பன போன்ற காரணங்கள் அடுக்கப்படுகின்றன. இவற்றை நாம் மறுக்கவில்லை. ஆனால் முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பது போல இறந்த யானையைப் புதைப்பதோ எரிப்பதோ வன்முறையான செயல் என்றே தோன்றுகிறது.  நல்ல நல்ல வனத்துறை அலுவலர்கள் இருக்கும்போதே இப்படி நடக்கிறது என்றால் யாரிடம் போய் முறையிடுவது. இந்த வருத்தம் மேலிடப்  புத்தாண்டில் இது குறித்துத் தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உறுதி எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டுக் கிளம்பினோம். 

அடுத்ததாக ஒரு பெரிய குத்துக்கல் பாறை ஒன்று இருக்கும் இடத்தை நோக்கி எங்களது வாகனம் சென்று நின்றது. தொலைநோக்கி வழியாக அளவளாவினோம். பாறையின் பிளவில் ஒரு இடத்தில் கொம்பன் ஆந்தை உட்கார்ந்து எங்களை நோட்டமிடுவது போல இருந்தது. அதை நீண்ட நேரம் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தோம். அரை மணி நேரம் ஆகியிருக்கும். திடீரென ஒரு ஐயம் ஏற்பட்டது. அது உண்மையிலேயே ஆந்தை தானா அல்லது உரு மாறு தோற்றப்பிழையா என்று. தொலைநோக்கியை முடுக்கினோம். வைத்தகண் மாறாமல் பார்த்தபோது இவ்வளவு நேரம் நாம் பார்த்து இரசித்தது ஒரு பாறையின் தோற்றமே அப்படி அமைந்திருக்கிறது எனத் தெரிந்து எங்களுக்குள் சிரித்துக்கொண்டே இடத்தை விட்டு நகர்ந்தோம்.

செல்லும் வழியில்,  ‘உரிகம்’ என்ற ஊரின் பெயர் கண்ணில் பட்டது. இந்த ஊர் ‘உரிகம் புளி’ என்ற அடைமொழியுடன் எனக்குத் தொண்ணூறுகளில் அறிமுகமாகி இருந்தது.  ‘புளி’ என்றால் புளியமரத்தினைக் குறிக்கும். அது என்ன ’உரிகம் புளி’ என்று வினவியபோது, உரிகம் என்பது அன்றைய தர்மபுரி மாவட்டத்தில் அமையப்பெற்ற ஒரு ஊர் எனவும் அந்த ஊரில் காணப்பட்ட ஒரு புளியமரம் நல்ல விளைச்சலையும் திரட்சியான கனிகளையும் கொண்டது என்பதால்  அந்த மரத்திலிருந்து விதையும் ஒற்றுக் கன்றுகளும் உருவாக்கப்பட்டு ஊர்ப்பெயரைக் கொண்டு அந்த இரகம் அழைக்கப்பட்டது என்பதையும் அறிந்துகொண்டேன்.  150 வயதான பழமையான இம் மரத்திலிருந்து  கன்றுகள் உருவாக்கப்பட்டுத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பெற்றது. அத்தகைய சிறப்புமிக்க அம் மரத்தைக் காணவேண்டும் என்ற ஆவல் எனக்கு இருந்தது. ஓரிரு முறை இந்த ஊருக்கு அருகாமையில் செல்ல நேர்ந்தபோதும் அம்மரத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. இந்த முறை, அந்த மரத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஊர்க்காரர்கள் வழிகாட்ட  மரம் இருக்கும் இடத்தை அடைந்தோம். நிறையப் புளிய மரங்கள் ஆங்காங்கே இருந்தன. அருகாமையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர் பல்வேறு புளியமரங்களுக்கிடையே உரிகம் புளி எனக் காரணப்பெயர்பெற்ற மரத்தைச் சுட்டிக்காட்டினார். தூரத்திலிருந்து பார்க்கும்போது மரம் தளதளவென இருந்தது. ஒரு காய் கூடக் கண்ணில் படவில்லை. ஆனால் அதே வேளையில் அருகாமையில் காணப்பட்ட புளியமரத்தில் காய்கள் காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தன.  என்ன காரணம் என்று மரத்திற்கு அருகாமையில் சென்று பார்த்தபோது, மரத்தின் வேர்களைச் சுற்றித் தண்ணீர் நின்று கொண்டிருந்தது. உபயம் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தில் கட்டப்பட்ட தடுப்பணை என்பது புரிந்தது.

தடுப்பணையை வடிவமைக்கும்போது இதை எல்லாம் பார்ப்பதில்லை என்பது வருத்தமான செய்தி. அருகில் ஒரு பாரம்பரியமிக்க மரம் இருக்கிறது. அதுவும் புளியமரம் வறட்சியில் வளரும் ஒரு மரம். அதற்குத் தண்ணீர் தேங்கினால் என்ன ஆகும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்பணி அரங்கேறியுள்ளது என்பது வருத்தப்படவைத்தது. எங்கு எளிமையாக வேலை செய்யமுடியுமோ கட்டுமானப் பொருட்களை எளிதில் எடுத்துச் செல்ல முடியுமோ அங்குத் தடுப்பணை அமைத்துவிடுகிறார்கள். இந்த இடத்தில் புளிய மரத்தின் மேல்புறம் ஒன்று கீழ்புறம் ஒன்று என இரண்டு தடுப்பணைகள் அமைக்கப்பட்டிருந்தன என்று சொல்வதை விட இந்த மரத்திற்குக் கல்லறை கட்டியிருந்தனர் என்று சொல்லலாம். இன்னும் சில ஆண்டுகளில் பாரம்பரியமிக்க அந்த மரமும் பட்டுப்போய் விடும் என்பதை நினைத்துப் பார்த்தேன். ‘புளி  ஆயிரம் பொந்து ஆயிரம்’ என்ற பழமொழியும் பொய்த்துப்போவதை உணர்ந்தேன்.
இதேபோலக் காட்டுக்குள்ளும் தடுப்பணை அமைத்த இடங்களின் அருகே இருந்த பெரிய பெரிய மரங்கள் குறிப்பாக ஆற்றோரத்தில் நன்கு வளரும் நீர் மத்தி மரங்களும் பட்டுப்போகி விட்டதைக் கண்ணுற்றிருக்கிறேன். 

அடுத்ததாக நாங்கள் பிதிரெட்டி எனும் ஊரை நோக்கிச் சென்றோம். காரணம், அங்கு ஆசியாவிலேயே பெரியதொரு ஆலமரம் இருப்பதைக் கேள்விப்பட்டு அதைப் பார்க்கும் ஆவல் மேலிடக் கிளம்பினோம். பார்த்து உண்மையிலேயே வியந்தோம். சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் வியாபித்திருந்தது அந்த ஆலமரம். தனது தோட்டத்தை அம்மரத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கிய விவசாயியை மனமாறப் பாராட்ட வேண்டும். புள்ளி ஆந்தைகளும், சாம்பல் இருவாட்சிப் பறவைகளும் கண்ணில்பட்டன. அந்த மரத்தையும் வழமைபோலக் காதலர்கள் விட்டுவைக்கவில்லை. தங்களது பெயர்களை மரத்தைக் காயப்படுத்திக் கீறி எழுதி வைத்திருந்தனர். 

அருகாமையிலிருந்த புளியமரத்தை நோக்கினேன். குரங்குக்கூட்டம் புளியந்தளிர்களையும் காய்களையும் கடித்து வாயில் அதக்கிக்கொண்டிருந்தன. வயல்களில் இருந்தக் கேப்பைக் கதிர்களைக் குரங்குகள் சில வாயில் அதக்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்துக்கொண்டே நகர்கையில் சற்றுத் தொலைவில் ஒரு மின்கம்பத்தில்  கருகி ஒரு குரங்கு செத்துத் தொங்கியபடி உயிரை விட்டிருந்தது. இதே போல காடுகளுக்குள் ஊடறுத்துச் செல்லும் மின்கம்பங்களில் மாட்டி எத்துனை எத்துனை விலங்குகள் இறக்குமோ. தெரியாது. நம் கவனத்திற்கும் வராதது. எனவே இருக்கின்ற மின்கம்பங்களை எல்லாம் மின்சாரம் தாக்கா வண்ணம் வடிவமைக்க வேண்டும். ஆறறிவு படைத்த மனிதர்கள் என்பதை மனச்சாட்சியுள்ள மனித குலம் நிரூபிக்க வேண்டுமெனில் இது போன்ற செயல்கள்மூலம் தான் காட்ட வேண்டும். மாலை மயங்கிக்கொண்டிருந்தது.  பறவைகள் தங்குமிடத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தன. வௌவால்கள் இரை தேடிப் பறக்க ஆரம்பித்தன. நிலவொளியில் அவற்றைப் பார்த்தபோது,  அந்தக் காட்சி உயிரினங்கள் பாதுகாப்பில் நாம் பயணிக்கவேண்டியது நீண்ட நெடுந்தொலைவு உள்ளது என்பதை உணர்த்தியது.

அன்புடன்,
சு.பாரதிதாசன்
செயலர், அருளகம்
உறுப்பினர், தமிழ்நாடு அரசு காட்டுயிர் வாரியம்
உறுப்பினர், பாறுக் கழுகுகள் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு அரசு

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Newsletter

Subscribe to our newsletters to receive latest news and updates.
I agree with the Privacy policy