Articles

கொரோனா நோய்த் தொற்றியும் பாறு கழுகுகளும்

கொரோனா நோய்த் தொற்றியும் பாறு கழுகுகளும்

கேட்டவுடனே அச்சத்தைத் தரும் ஒரு சொல்லாக 'கொரோனா' என்ற சொல் நம் செவிப்பறையில் மோதுகிறது . 'கொரோனா' போன்ற நுண்மிகளை (virus) மனிதகுலம் காலங்காலமாகச் சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்து கொண்டு தான் இருக்கிறது. இதிலிருந்தும் மீண்டுவிடுவோம். அதற்கு மருத்துவம் துணை நிற்கும். ஐயம் தேவையில்லை. அதே வேளையில், இதற்கு இயற்கையும் அதன் அங்கமான பல்லுயிர்களும் மறைமுகமாகத் துணைபுரிந்து இப் பூமிப் பந்திலுள்ள உயிரினங்களை முற்றிலும் அழிய விடாமல் காக்க முயலும் என்பதை நம்புவோம்.

வளர்ந்த நாடுகளுக்கு இணையான சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளோ தன் சுத்தம் பேணும் மக்களோ இந்தியாவில் இல்லை என்ற குறை சுட்டிக் காட்டப்படுவதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் இவ்வளவு மக்கள் தொகையும் எப்படித் தொற்று நோய்க் கிருமிகளிலிருந்து தப்பிக்கின்றனர்?. அதிலும் உடல்நலம், சுற்றுப்புறத் தூய்மை என்பன பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத நம் மக்களை எது பாதுகாக்கின்றது? நம்மிடம் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் இதற்கு உதவியிருக்கக்கூடும் என்பது ஒருபக்கம் உண்மை. இதற்கு மறைமுகமான மறுபக்கம் ஒன்றும் உண்டு.

கொடிய தொற்று நோய்க் கிருமிகளைக் கட்டுக்குள் வைத்ததில் இந்தியாவிலுள்ள பல்லுயிர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அதிலும் இறந்தவற்றை உண்டு வாழும் பாறு கழுகு போன்ற உயிரினங்களுக்கும் சிறப்பான பங்கு உண்டு. காட்டில் விலங்குகள் நீர்நிலைகளுக் கருகில் இறக்க நேர்ந்தால் அதிலிருந்து நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் தண்ணீரில் கலந்து அங்கு தாகம் தணிக்க வரும் மான்களுக்கோ யானைகளுக்கோ இதர விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. அப்படிப்பட்ட சூழலில் பாறு கழுகு கூட்டம் வந்து இறங்கினால் இறந்த விலங்கின் உடல் இருந்த அடையாளமே தெரியாமல் தின்று தூய்மைப்படுத்தி விடும். இதனால் நீர்மூலம் பரவும் நோய்களும் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்பட்டன.

தவிர, விலங்குகளுக்கு ஏற்படும் கொடிய நோய்க் கூறுகளான அடைப்பான் (Anthrax), கழிச்சல் (Cholera), கோமாரி நோய் (அ) காணை நோய் (Foot and Mouth Disease), வெறிநோய் (Rabies), நச்சுயிரித் தொற்று(Distemper) உள்ளிட்ட தொற்று நோய்களால் மடிந்த விலங்குகளை உண்டாலும் பாறு கழுகுகளுக்கு ஏதும் ஆவதில்லை என்பது நமக்கு வியப்பைத் தரக்கூடும். அந்த நச்சு நுண்ணுயிரிகளை இதன் வயிற்றில் சுரக்கும் வீரியமான அமிலம் செயலிழக்கச் செய்து விடுகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். இதனால் பாறு கழுகுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இறந்த விலங்கிடமிருந்து தொற்று நோயும் பரவுவதில்லை. அதேபோல, இவற்றிடமிருந்தும் எந்த நோயும் பிற உயிரினங்களுக்குத் தொற்றுவதில்லை. இவ்வாறு அவை காட்டின் தூய்மைப் பணியாளராய் இருந்து எண்ணரும் உயிரினங்களைக் காக்கின்றன.

ஆனாலும் நாம் பாறு வகைப் பறவைகளால் என்ன பயன்? என்ற கேள்வியை அடிக்கடி கேட்கிறோம். நாம் எதையெடுத்தாலும் வட்டிக் கணக்கு போட்டும், பொருளாதாரக் கண்ணோட்டத்திலும், ஜிடிபி (Gross Domestic Product) அடிப்படையிலும் பங்குச் சந்தை குறியீட்டு எண் அடிப்படையிலும் ஒருநாட்டைப் பார்ப்பதால் பிற உயிரினங்களின் அருமை தெரிவதில்லை. இவை ஆற்றும் சேவையை இயந்திரத்தைக் கொண்டு செய்தால் எவ்வளவு செலவாகும் என்று பொருளாதாரக் கணக்குப்போட்டு பார்த்தால் அது அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கையையும் ஏன் ஐந்தாண்டுத் திட்டத்தின் பயனையும் மிஞ்சும் படியாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

மேலும் இது போன்ற உயிரினங்கள் இல்லாது போனால் அது உணவுச் சங்கிலியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம். அது உடனடியாக எதிரொலிக்காது. பாறு கழுகுகள் இல்லாத வெற்றிடத்தை நாய்களும் எலிகளும் எடுத்துக்கொள்ளும். நாய்களின் எண்ணிக்கை அதிகமானால் வெறிநோயின் (ரேபிஸ்) தாக்கமும் கூடுதலாகவும் வாய்ப்புண்டு. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிக்கட்டும் என்பதற்கேற்ப இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புண்டு. இவை எல்லாம் நேரா வண்ணம் இயற்கையாகவே ஒரு ஒழுங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதில் மனிதர்களின் தலையீடு கூடுதலாகக் கூடுதலாக அந்த ஒழுங்கு சீர்குலையத் தொடங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட உயிரினங்கள் ஏராளம்.
அப்படி ஒரு பேரழிவைத்தான் பாறு கழுகுகளும் சந்தித்தன. அவை பெருமளவு மடிந்ததற்கு, மாடுகளுக்குத் தரப்படும் வலி போக்கி மருந்தான டைக்குளோபினாக் மருந்து பெரும் பங்கு வகித்தது என்ற செய்தியைச் சொன்னபோது உலகம் நம்ப மறுத்தது. ஆனால் அசைக்க முடியாத ஆய்வுகளால் பின்னர் அதை ஏற்றது. இதை அறிந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் நாடுகளும் அம் மருந்துக்குத் தடை விதித்தன. சுகாதாரத்தில் முன்னிலை வகிக்கும் வளர்ந்த நாடான இத்தாலியும் தடை விதித்தது. ஆனால் அந்தத் தடையை ஓரிரு ஆண்டுகளில் அந்நாடு விலக்கிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து ஸ்பெயினும் விலக்கிக் கொண்டது. பறவையாளர்கள் முறையிட்டும் அந் நாடுகள் கடைசி வரை செவி சாய்க்கவில்லை. எங்கள் நாட்டில் சுகாதாரச் சீர்கேடு இல்லை. வளர்ந்து வரும் நாடுகளைப் போல நாங்கள் இறந்த விலங்குகளை வெளியில் வீசுவதில்லை என்று மறுதலித்தது. ஆனால் அப்படி உயர்ந்த சுகாதாரம் பேணப்படும் நாட்டில் தான் 'கோரோனா' தன் கைவரிசையைக் காட்டியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டக் கடமைப் பட்டுள்ளோம்.

பாறு கழுகுகளுக்கும் கொரோனோவிற்கும் நேரடியாகத் தொடர்பில்லை ஆயினும் கொரோனா போன்ற நச்சுயிரிகளின் ஆபத்தில் மனிதகுலம் சிக்கியுள்ள இவ்வேளையில் இதுபோன்ற தீநுண்மிகளை இயற்கையாக கட்டுக்குள் வைக்கும் பாறு கழுகு போன்ற உயிரினத்தைப் பற்றியும் தெரிந்து அதைப் பாதுகாக்க முன்வர வேண்டும் . பாறு செழிக்கட்டும்.

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Newsletter

Subscribe to our newsletters to receive latest news and updates.
I agree with the Privacy policy