குயிலின் கூவலும் ஊரடங்கலும்
பறவைகளின் ஆரவாரமிக்கக் அகவல் என் மனதிற்கு எப்போதுமே குதூகலத்தைக் கொடுக்கும். வேலை நிமித்தமாக, என் பெற்றோர்கள் அதிகாலையிலேயே எழும் பழக்கம் உடையவர்கள் ஆதலால் ‘கோழி கூப்ட’ எழும் பழக்கம் எனக்கும் சிறுவயதிலிருந்தே பழக்கமாகி விட்டது.
கிராமங்களில் கோழிக்கும் சேவலுக்கும் பஞ்சமே இருக்காது. அதிகாலையில் ஒரு சேவல் கூவ ஆரம்பித்தவுடன் அடுத்த அடுத்த இடங்களில் வசிக்கும் சேவல்களும் எசப்பாட்டுப் பாட ஆரம்பித்து விடும். எங்கள் அண்டை வீட்டில் வயதான பாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவரது வீட்டில் எப்போதுமே கோழியும் சேவலும் இருக்கும். சிறுவயதில் நான் கண்விழித்தது அதன் கூப்பாட்டைக் கேட்டுத்தான். இந்த இடத்தில் அந்தப் பாட்டியைப் பற்றிய சிறு குறிப்பு. அவருக்கு இரு மகன்கள் உண்டு ஆனால் அவர்களிடம் அண்டிப் பிழைக்காமல் கோழி வளர்த்தே தனது பொருளாதாரத் தேவையை அவர் ஈடு செய்து கொண்டார். அவருக்கு, நல்ல சம்பாத்தியத்தில் நகர்ப்புறத்தில் வசிக்கும் தன் மூத்த மகன் மீது கூடுதல் பாசம் உண்டு. ஆனால் மகனுக்கோ, தனது ஆத்தா வளர்க்கும் கோழி மீது எப்போதுமே பிரியம் உண்டு.
ஞாயிற்றுக் கிழமைகளில் அம்மாவைப் பார்ப்பதற்கு அவர் ஊருக்கு வருவார். அவரைப் பார்த்தாலே, ‘இன்னைக்கு ஒரு கோழிக்கு அனத்தம் புடிச்சிருச்சு’, என அண்டை வீட்டார்க் கிண்டல் செய்வார்கள். இளைய மகனும் இப்பப் பாருங்க! எங்க அண்ணனுக்கு, எங்க அம்மா மேல பாசம் பொங்குறத! எனக் கண்ணடிப்பார். அதற்கேற்றார்ப் போலவே அவரும் தனது அம்மாவிடம் நைசாகப் பேசுவார், ‘உன்னைய டவுனுக்கு வந்து என்னோட இருனு சொன்னாக் கேட்க மாட்டேங்கிற’ என்று அலுத்துக் கொள்வார். உம் பேத்திக்கு போண்டாக் கோழி (லக்கான்) வாங்கிக் கொடுத்தா சாப்பிடவே மாட்டேங்கிறா! என்றுச் சொல்லி மெல்ல ஒரு பிட்டுப் போடுவார். பேத்தியைக் கண்ணுல காட்ட லாமுல்லடா. ஏண்டா இந்த வாரமும் கூட்டிட்டு வல்ல, எனச் செல்லமாகக் கடிந்து கொண்டே, ‘பௌ பௌ பௌ’ என விழித்து இரையைத் தூவி, கோழியை வரவைத்து அது மும்முரமாக இரையைக் கிளறியைப் கொண்டிருக்கும்போது, இலபக்கென்று இலாவகமாகப் பிடித்து அதன் காலைக் கட்டித் தயாராக மகன் கொண்டு வந்திருந்த வயர்க் கூடையில் போட்டுக் கொடுத்தனுப்புவார். இந்தாம்மா! கைச் செலவுக்கு வைச்சுக்க, எனக் கூறி கோழியின் விலையில் பத்தில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டு நல்லதொரு நாட்டுக் கோழியோடு நடையைக் கட்டுவார் அவரது மூத்த மகன். அவரது அம்மாவுக்கோ அன்று முழுக்கப் பெருமை பிடிபடாது. அது ஒரு தொடர்கதை. அது இருக்கட்டும். நாம் மீண்டும் பறவைகளின் அகவலுக்கு வருவோம்.
இப்போது நான் வசிக்கும் வீட்டருகில் கோழிகள் இல்லை என்றாலும், குயில், கரிச்சான், மயில், கானாங்கோழி இவற்றின் அகவல் இரவில் வேறு வேறு நேரங்களில் காதில் விழும். குயிலின் முதல் கூவல், முது வேனிற் காலத்தில் இரவு 2.45 மணிக்குக் கேட்க ஆரம்பிக்கிறது இளவேனிற் காலத்தில் காலை 5.45 மணியிலிருந்து 6.15 மணிக்கு கேட்கத் தொடங்குகிறது. பறவையாளர் சலீம் அலி அவர்கள், குயில் சில மாதங்கள் மட்டுமே கூவுவதாகவும் மற்ற சமயங்களில் அமைதியாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ஆனால் குயில், எப்போதுமே கூவுகின்றன என்று சென்னை இயற்கைக் கழகத்தைச் சேர்ந்த அன்பர் பதிவு செய்த செய்தியை இருபதாண்டுக்கு முன்னமே படித்திருக்கிறேன். அது குறித்து மீண்டும் தேடிப் படிக்கவேண்டும். இந்தக் கொரோனா காலத்தில் நாடும் நகரமும் அமைதியாய் இருப்பதைப் பயன்படுத்தி பல்வேறு பறவைகளின் ஓலிகளையும் இயற்கையான பிற ஓலிகளையும் பதிவு செய்வதில் உலகமுழுதுமுள்ள இயற்கை ஆர்வலர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
அருளகத்தின் தன்னார்வலர் கார்த்திக் சிவானந்தம் தற்போது நியிசிலாந்தில் காட்டுயிர்கள் குறித்தான ஆவணப்படங்களிலும் இயற்கையின் ஓலிகளையும் பதிவு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். அவருடன் நேற்று அலைபேசியில் பேசிய போது, இந்த வாய்ப்பு, இப்போது பயன்படுத்தா விட்டால் வேறெப்போதும் கிடைக்காது என்பதால் மிக மும்மரமாய் இயற்கை ஓலிகளைப் பதிவுசெய்வதில் ஈடுபட்டிருப்பதாய்ச் சொன்னார். இருபதாண்டுகளுக்கு முன்பே கோயமுத்தூரைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் பறவைகளின் ஒலியைப் பதிவு செய்து அதை கேசட்டாக வெளியிட்டிருந்தார். அவரது இல்லத்தில் அதைக் கேட்கும் வாயப்புக் கிட்டியது. அந்தக் காலத்தில் அது ஓரு அற்புதமான தொடக்கம். அதன்பின் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகமும் பறவைகளின் அகவல் அடங்கிய ஒரு ஒலிப்பேழை ஒன்றை வெளியிட்டது. அதை இன்றும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.எப்போதெல்லாம் அந்த ஒலிப்பேழையை இயக்க ஆரம்பித்தாலும் கொஞ்ச நேரத்திலேயே தூக்கம் வந்துவிடும். அப்படியே தூங்கி விடுவேன். முழுதாக ஒரு முறை கூட அதைக் கேட்டதில்லை. தற்போது அதை இயக்குவதற்கான டேப்ரிக்கார்டர் வழக்கொழிந்து விட்டதால் அதைக் கேட்கும் வாய்ப்பும் இல்லை. தற்போது கணிணி யுகத்தில் எல்லாமே டிஜிட்டல் ஒலியாகவும் கிடைக்கிறது என்பதை அறிந்தேன். கார்த்திக் என்ற பறவை ஆர்வலர் பறவைகளின் 1000 குரல்களைப் பதிவேற்றம் செய்ததைப் பற்றிச் சென்ற வாரம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர். அதை அறிந்து மகிழ்வுற்றேன். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.
நான் முறைப்படி பறவைகளின் கூவலை இன்னும் பதிவு செய்ய ஆரம்பிக்க வில்லை. ஊரடங்கள் காலத்தில் பெங்களூரைச் சேர்ந்த மனநல மருத்துவப் பேராசிரியர் ரகுராம், பறவையாளர் செகநாதன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் எழுதிய கட்டுரையை வாசித்தபோது, எனக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. இந்த வாகனப் பயன்பாடற்ற பேரமைதியில் என்னென்ன ஓலிகள் காதில் கேட்கின்றன என்று நானும் காதைக் கொஞ்சம் தீட்டினேன். வைரமுத்து வரிகளில் சொல்லப் போனால், பூபூக்கும் ஓசையைக் கேட்க வேண்டும். ஆனால் உண்மையான இயற்கையாளன் என்பவன் வாகனங்களின் இரைச்சலுக்கிடையேயும் பரபரப்பான சாலையிலும் பறவைகள் உள்ளிட்ட இயற்கையின் நுட்பத்தை உள்வாங்க வேண்டும், என்று படாரென நெட்டிப்பொட்டில் உறைத்தது. இந்த இடத்தில் என்றோ படித்தது நினைவுக்கு வருகிறது. அதாவது, பரபரப்பான சாலையில் சில்லறையைச் சிதற விட்டால் எல்லோரது கவனமும் திரும்புகிறதே. அது மட்டும் எப்படி?. நம் மனம் ஓன்றில் இலயித்தால் தானாகவே அதை நோக்கி நாம் கவரப் படுவோம். ‘அமைதியே பேரிரைச்சல், பேரிரைச்சிலிலும் அமைதி’. இது ஜென் தத்துவமோ, சூபி தத்துவமோ, கண்ணன் உரையோ! (அதாங்க கீதை) எப்படி வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். காது எப்போதும் திறந்துதான் இருக்கும். நீங்கள் தான் எதைக் கேட்க வேண்டும் என்று பழக்கப்படுத்த வேண்டும். எனவே, இன்று என்னவெல்லாம் இயற்கையான ஓலி கேட்கிறது என்று காதைத் திறந்து வைத்தேன்.
காலை வேளையில், அண்டங்காக்கை, தையலான் குருவி, மயில், அணில் பிள்ளை, இடையிடையே கதிர்க் குருவி, மரங்கொத்தி, குயில், காடை, தேன்சிட்டு ஆகியனவற்றின் ஓலி காதில் தேனாகப் பாய்ந்தது. வாயில் பாய்ந்தால் தானே தேன் இனிக்கும். காதில் பாய்ந்தால் எறும்பு அல்லவா கடிக்கும் என்று பாரதியார் கவிதையைப் (செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே) படித்து ஒருவர் இடக்கு பேசியது போல நீங்களும் பேசக்கூடாது என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
உச்சிவெயிலில் பனங்காடை சோடி ஓன்றின் கரகரப்பும் அத்துடன் சில் வண்டுகளின் ரீங்காரம் விடாது கேட்டபடி இருந்தது. மாலை நேரம் ஆக ஆக நாகனவாய்ப் புள்ளின் (அதாங்க மைனா) குரல் பெயருக்கேற்றார்போல வாத்தியக் குழுவினர் கூட்டாக நாயணம் வாசிப்பது போலவே இருந்தது.
இரவில் ஆட்காட்டியின் கூப்பாடு விட்டு விட்டுக் கேட்டது. அத்துடன் அதிகம் கேட்டிரா மற்றொரு ஓலியும் வீட்டுக்கு அருகிலிருந்து, ‘பியுக், பியுக்,பியுக், பியுக்’, எனக் கேட்டபடி இருந்தது. நாங்கள் வசிக்கும் வீட்டின் மூன்று பக்கமும் திறந்த பொட்டல் வெளி. ஒரு பக்கம் பள்ளி வளாகம். எமது வீட்டுக்கும் அடுத்த வீட்டிற்கும் இடைவெளி 300 மீட்டர் தொலைவில் இருந்தது. ஆங்காங்கே வீடுகள் தள்ளித் தள்ளி இருந்தன. இரவில் இடைவிடாது கேட்ட அந்த ஓசை என் ஆர்வத்தைக் கூட்டியது . இது இரவாடிப் பறவையான இராப்பாடியின் குரலாய் இருக்குமோ வண்டாய் இருக்குமோ என்று யோசித்தேன். ஆனால் எதனோடும் அக்குரல் பொருந்திப் போகவில்லை. தொடர்ந்து அந்தக் குரல் அருகாமையிலிருந்த பொட்டல் வெளியிலிருந்து வந்த வண்ணம் இருந்தது. அதற்கு வாயே வலிக்காதா இப்படித் தொடர்ந்து பாடிக்கொண்டே இருக்கிறதே என்று கூட யோசித்தேன். சரி, அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம் என்றுத் தூங்கப் போய் விட்டேன்.
மீண்டும் அடுத்த நாள் இரவும் அந்த ஓசை காதில் விழுந்தது. சில நேரம் அமைதியாகி விட்டு மீண்டும் ஆரம்பித்து விட்டது. அதை செல்பேசியில் பதிவு செய்து பறவை அன்பர்கள் அம்சாவுக்கும் செகநாதனுக்கும் அனுப்பலாம் என்று கூட யோசித்தேன். எனது செல்லிடப்பேசியில் அதைப் பதிவு செய்யும் நுணுக்கம் எனக்குக் கைவரப் பெறாததால் அந்த ஆசையைக் கைவிட்டேன். பிரதமர் விளக்கை அணைத்து விட்டு அகல் விளக்கு ஏற்றச் சொன்ன நாளும் வந்தது. இன்று எப்படியும் அந்தக் குரலுக்குச் சொந்தக்கார உயிரினத்தைக் கண்டே பிடித்துவிட வேண்டும் என்று எனது பிள்ளைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டேன். ஏனென்றால் இன்று எப்படியும் 9மணிக்கு ஊரே அமைதியாகிவிடும். அதைப் பயன்படுத்தி அந்தக் குரலுக்கு சொந்தக்காரப் பறவையைக் கண்டு பிடித்துவிடலாம் என்று தயாராய் இருந்தோம். ஆனால் மக்களோ, மின்சாரத்தைத் துண்டித்து விளக்கை அணைத்துவிட்டு மாடியில் ஏறிக் கூப்பாடும் குளவையும் போட ஆரம்பித்துவிட்டனர். சொல்லி வைத்தாற் போல அந்தக் குரலும் நின்று விட்டது. இவர்கள் போட்ட சத்தத்தால் அந்தக் குரலைக் கேட்க முடியாமல் போய்விட்டது என்று வருந்தினேன். மீண்டும் ஆரவாரம் அடங்கி அவரவர்கள் வீட்டுக்கு நுழைந்த பின் அந்தக் குரல் மீண்டும் கேட்க ஆரம்பித்து விட்டது. அருகாமையிலிருந்த வீட்டருகிலிருந்து தான் சத்தம் வந்து கொண்டிருந்தது. காதைக் கூர்மையாக்கினோம். பேரமைதி. எங்கள் வீட்டிலிருந்த நாயும் எங்களது நடவடிக்கையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. குரல் வந்த திசையை நெருங்கிவிட்டோம். இன்று புது இரவாடியைப் பதிவு செய்யப்போகும் ஆவல் மேலிட்டது. எனது மகள் அந்தக் குரல் வீட்டுக்குள்ளிருந்து வருகிறது என்று சொன்னாள். வீட்டுக்குள்ளே எப்படி பறவை இருக்க முடியும். அவர்கள் ஒன்றும் பறவை வளர்க்கவில்லையே என்று கடிந்து கொண்டேன். ஆள் அரவம் அற்ற இந்தப் பகுதியில் பாம்பு ஓன்று ஊர்ந்து போனதைச் சில நாட்களுக்கு முன்னர் எனது துணைவியார் பார்த்திருக்கிறார். அவர் எச்சரிக்கை விடுத்தார். நானும் அதை வேறொரு இடத்தில் பார்த்தது சற்றென்று நினைவுக்கு வந்ததால் எச்சரிக்கையுடன் முன்னேறினோம். ‘யாரப்பா அது’ என்று அந்த வீட்டிலிருந்து குரல் வருமோ என்று பயந்து சற்றுத் தள்ளியே நின்று காதைக் கூர்மையாக்கினேன். ஏதோ ஒன்று உரசுவது போல இருந்தது அந்த சத்தம். ஆம், வீட்டிலிருந்து தான் அந்தக் குரல் வந்து கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். என்னவாக இருக்கும் என்று மூளைக்கு கட்டளை அனுப்பினேன். ஆடாமல் அசையாமல் ஐந்து நிமிடம் இருந்தேன். புரிந்து விட்டது., அது வேறொன்று மில்லை. பழைய மின்விசிறியிலிருந்து வந்த ஓசை தான் அது என்று மூளை சொன்னது. இது போன்றதொரு நிகழ்வு நடந்ததை என் மூளை மீட்டெடுத்து இதை எனக்கு அறிவுறுத்தியது. அந்த நிகழ்வு உங்கள் பார்வைக்கு ஒரு சில வரிகளில். பத்து ஆண்டுகட்கு முன், சுற்றுச்சூழல் தொடர்பாக தென் தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் ஒரு எளிய வீட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் பார்வையாளனாக நானும் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு மறைந்த பத்திரிக்கையாளர் பிரபுல் பித்வாயும் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். அன்று வேகாத வெயில். அறையிலிருந்த மின்விசிறியை இயக்க நினைத்தோம். இயங்கவில்லை. உதவிக்கு ஒருவரை அழைத்தோம். அவர் அறைக்குள் நுழைந்தார். மின் விசிறியை இடதுபுறமும் வலது புறமும் தட்டினார். மெல்லிய சினுங்கலுடன் அந்த மின்விசிறி இயங்க ஆரம்பித்து விட்டது. அந்த நிகழ்வைப் பார்த்து பிரபுல் பித்வாய் மெய்மறந்து சிரித்தது இன்று என் நினைவுக்கு வந்தது. ஆம். அன்று கேட்ட அதே ஓலியை என் மூளை நினைவுத் தட்டிலிருந்து மீட்டெடுத்து நினைவூட்டியது.
எப்போதெல்லாம் மின்சாரம் தடைபட்டதோ அப்போதெல்லம் அதன் ஓலி நின்று போய் இருக்கிறது. நான் தான் ரொம்ப தப்பா ஊரடங்கால் ஊரை நோக்கிப் பறவைகள் திரும்பி விட்டன என்று தவறுதலாகப் புரிந்து கொண்டேன். பறவை அன்பர்கள் இதற்காக என்னை வசைபாட வேண்டாம். பறவை பார்ப்பவர்கள் எப்போதுமே சிடுசிடுப்புடன் இருக்க வேண்டும் என்பது இல்லை. சிரித்த முகத்துடனும் பறவைகளைப் பார்க்கலாம். உங்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் நான் பிரதமருக்கு நன்றி சொல்ல விழைகிறேன். அவர் மட்டும் அன்று மின்சாரத்தை நிறுத்தச் சொல்லாமல் இருந்திருந்தால் நானும் அதைப் பறவை என்றோ வண்டு என்றோ நினைத்திருப்பேன். விளக்கை அணைத்தால் கொரோனா எப்படிப் போகும் ‘சைடு மிர்ரரைத் திருப்பினாக்க ஆட்டோ ஓடுமா’ என்று குண்டக்க மண்டக்க கேள்வி கேட்பவர்கள் கவனிக்க வேண்டுகிறேன்.