பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்பாட்டுக் குழுக் கூட்டம்
பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்பாட்டுக் குழுக் கூட்டம் (21 அக்டோபர், 2024) கோயமுத்தூரில் நடைபெற்றது. ‘அருளகம்’ இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில் கேரளம் கர்நாடகம், தமிழ்நாடு உள்ளி மாநிலங்களிலிருந்து பாறு கழுகு தொடர்பான ஆராய்ச்சியிலும் களப்பணியிலும் அருளகத்துடன் இணைந்து செயல்படும் கூட்டு அமைப்புகள் கலந்து கொண்டன.
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை அருளகத்தின் தலைவர் கார்த்திகா இராஜ்குமார் வரவேற்றார். அருளகத்தின் செயலர் சு.பாரதிதாசன் நோக்க உரையாற்றினார். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அருளகம் சார்பாகத் ‘தமிழ்நாடு பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்திட்டம்- வரைவு அறிக்கை’ வெளியிடப்பட்டது. அதனை ஓய்வுபெற்ற வனத் துறை அலுவலர் சி.பத்ரசாமி வெளியிட ‘ஓசை’ அமைப்பின் தலைவர் கே. காளிதாசன் பெற்றுக்கொண்டார்.
பாறு கழுகுகள் பாதுகாப்புக்கென தேசிய அளவிலும் மாநில, மாவட்ட, மற்றும் பஞ்சாயத்து அளவிலும் எடுக்கவேண்டிய செயல்திட்டம் முன்மொழியப்பட்டுக் கலந்துகொண்ட அறிஞர்கள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டுக் கருத்துகள் பெறப்பட்டன. அதில் முதன்மைப்படுத்திச் செய்யவேண்டிய விசயம் பட்டியலிடப்பட்டு அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அருளகத்தின் செயலர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாறு கழுகுப் பாதுகாப்புக்காக அரசு மேற்கொண்டுவரும் பணிகளையும் அருளகம் அமைப்பு மேற்கொண்டு வரும் பணிகளையும் பாறு கழுகுப் பாதுகாப்புக்கென ஆசிய அளவிலான திட்டத்தின் மேலாளர் கிறிஸ்போடன் பாராட்டினார். குறிப்பாகக், கீட்டோபுரோபேன், புளூநிக்சின் மருந்துகளைத் தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறை விலக்கிக்கொண்டதைக் குறிப்பிட்டார். நிமுசிலாய்ட்சு மருந்தையும் இந்திய அளவில் உடனே அரசு தடைசெய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்வில் ஒருபகுதியாக மூன்று மாநிலங்களிலும் பாறு கழுகுகள் பாதுகாப்புக்காக மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் பணிகளை அருளகத்தின் பணியாளர்கள் சர்மா, சாலினி மற்றும் சுந்தரி ஆகியோர் எடுத்துரைத்துனர். கர்நாடகாவில் மேற்கொண்டுவரும் பணியினைக் ‘காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பைச்’ சேர்ந்த ராஜ்குமார் அவர்களும் கேரளாவில் மேற்கொண்டுவரும் பணிகள் குறித்து ‘ஹியூம்ஸ் மையத்தைச்’ சேர்ந்த விஸ்னுதாசு அவர்களும் எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் பாறு கழுகுப் பாதுகாப்பு தொடர்பாகப் பல் வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்றினர். நீண்ட காலத் தொடர் ஆராய்ச்சி மேற்கொள்வதன் அவசியத்தை இயற்கையும் பட்டாம்பூச்சியும் அமைப்பின் தலைவர் பாவேந்தன் எடுத்துரைத்தார். ‘உலகளாவிய இயற்கைப் பாதுகாப்பு அமைப்பைச்’ சேர்ந்த பூமிநாதன் அவர்கள் ஊணுண்ணி தாக்கி இறந்த கால்நடைகளுக்கான இழப்பீடு வழங்குவது குறித்தும் அதில் உள்ள சவால்கள் குறித்தும் எடுத்துரைத்தார். ஜான் மெல்லாடு (ராயல் சொசைட்டி பார் தி புரொடக்சன் ஆப் பேர்ட்சு) அவர்கள் பாறு கழுகுகளுக்குப் பாதுகாப்பான இரை கிடைக்கிறதா, எங்கெல்லாம் செல்கின்றன என்பதை இடங்காட்டிக் கருவி பொருத்தியும் இறந்த கால்நடைகளில் ஏதேனும் தீங்கு விளைவிக்கும் மருந்துகளின் கசடு இருக்கிறதா என்பதைத் திசு மாதிரி எடுத்துச் சோதனை செய்யவேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். சடலங்களை அப்படியே விடுவதில் உள்ள சவால்கள் குறித்துக் கால்நடை மருத்துவர் என்எஸ் மனோகரன் அவர்களும் பிரயாக் அவர்களும் எடுத்துரைத்தனர். சலீம் அலி மையத்தைச் சேர்ந்த நம்பிராசன் அவர்கள் வலி போக்கி மருந்துகளுக்கும் பாறு கழுகுகள் இறப்புக்கும் உள்ளத் தொடர்பையும் பாபுஜி ஜனகராசன் நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறைந்ததற்கும் உள்ள தொடர்பை எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் வந்திருந்தவர்களுக்கு தன்னார்வலர் பழங்குடி இளைஞர் திரு. சந்தோசு அவர்களால் வரையப்பட்ட பாறு கழுகு ஓவியம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தின்மூலம் பாறு கழுகுக்கு தீங்கு செய்யும் நிமுசிலாய்டுசு மருந்தை விலக்கிக்கொள்ளவும் அத்துடன் எந்த மருந்தையும் புழக்கத்திற்கு விடுவதற்கு முன்னர் அதனால் வேறு உயிரினங்களுக்கு ஏதேனும் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.
மேலும் பாறு கழுகு தொடர்பாகத் தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ளவேண்டும் எனவும் இடங்காட்டிக் கருவி பொருத்தி அவற்றின் வாழ்வியலை ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் எனவும்
பாறு கழுகுச் செயல்திட்டத்தை அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும்
பாறு கழுகுப் பாதுகாப்பு பகுதியை உறுதி செய்ய வேண்டும் எனவும்
ஊணுண்ணிகள் தாக்கி இறந்த கால்நடைகளுக்கு உடனே இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளுக்கு காப்பீடு வழங்க வழிவகை காணவும் வேண்டுகோள்கள் விடப்பட்டன.