
பாறு கழுகுகள் நலம் காக்கும் முதலுதவிப் பெட்டியை மாயாறு ஊருக்கு வழங்கும் நிகழ்வு
பாறு நலன் காக்கும் கால்நடை முதலுதவிப் பெட்டி வழங்குதல் மற்றும் கால்நடைகளுக்கு மூலிகை மருத்துவ வழிகாட்டும் நிகழ்வு
முதுமலைப் புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள மாயாறு மற்றும் பூதநத்தம் ஆகிய ஊர்கள் பாறு கழுகுகள் கூடமைத்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள ஊர்களாகும். இங்கு உள்ள கால்நடைகள் வயிறு உப்புசம், காணை, மடி வீக்கம், கால் புண், அம்மை நோய், கால் சுளுக்கு, உண்ணி மற்றும் செரிமானக் கோளாறு போன்ற நோய்களுக்கு ஆட்படுகின்றன. இதில் குறிப்பாக மடிவீக்கம், சுளுக்கு போன்ற நோய் அறிகுறிகளுக்கு வலி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பாறு கழுகுகளின் அழிவிற்கும் வலி மருந்துகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாய் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளை கால்நடைகள் பயன்பாட்டிற்கு ஒன்றிய அரசு தடைசெய்துள்ளது. தவிர நிமிசுலாய்ட்சு, புளுநிக்சின் ஆகிய மருந்துகளும் தீமை விளைவிக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்துப் பல்வேறு வகையிலும் அருளகம் அமைப்பு பலதரப்பட்ட மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தீமை விளைவிக்கும் மருந்துகளைத் தவிர்க்கும் முகமாக பாதுகாப்பான மருந்துகள் அடங்கிய முதலுதவிப் பெட்டியை வழங்க அருளகம் முடிவு செய்தது. இந்த மருந்துப் பெட்டியில் மெலாக்சிகம், டோல்பினமிக் ஆசிட் ஆகிய மருந்துகளும் மடி வீக்கத்திற்கும் கால் புண்ணிற்கும் உண்ணிக்கடிக்கும் குடல் புழு நீக்கத்திற்கும் தேவையான மூலிகை மருந்துகளும் அத்துடன் அயோடின், பஞ்சு, கட்டுத்துணி, பொட்டாசியம் பெர்மாங்கனேட் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டுள்ளன.
பாறு கழுகுகள் நலம் காக்கும் முதலுதவிப் பெட்டியை மாயாறு ஊருக்கு வழங்கும் நிகழ்வு 25-09-24 அன்று நடைபெற்றது. இந்திகழ்விற்கு அருளகம் அமைப்பின் செயலாளர் திரு.சு. பாரதிதாசன் தலைமை வகித்துப் பேசும்போது, தீமை விளைவிக்கும் மருந்துகள் ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து பாறு கழுகுகளைக் காக்க இம்முயற்சி உதவக்கூடும் என்ற நம்பிக்கையினை வெளிப்படுத்தினார். முதற்கட்டமாக இத்திட்டம் மாயாறில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேவை கருதி பிற ஊர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்திகழவ்வில் கால்நடை மருத்துவராக 24 வருட அனுபவம் மிக்க Dr.பழனி B.V.Sc. அவர்களும் இயற்கை கோகுல் அவர்களும் முன்னிலை வகித்தனர். பாரம்பரியக் கால்நடை வளர்ப்பவரான திரு நஞ்சன் முதலுதவிப் பெட்டியைத் திறந்து வைத்தார். கால்நடை முதலுதவிப் பெட்டிபயை ஊர்மக்கள் முன்னிலையில் திரு.முரளி அவர்களிடம் வழங்கப்பட்டது.
கால்நடை வளர்ப்பு தொடர்பாக மக்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு கால்நடை மருத்துவர் பழனி அவர்கள் விளக்கமளித்தார். பாரம்பரிய மருத்துவத்தையும் நவீன மருத்துவத்தையும் ஒருசேரப் பயன்படுத்தலாமா எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது ஒரு சேர அளிக்கலாம் என்றும் நோயின் தீவிரம் கருதி இதைக் கடைபிடிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆடு மற்றும் கோழி வளர்ப்பில் அதிக கவனம் செலுத்துமாறு கிராம மக்களை ஊக்கப்படுத்தினார். இயற்கை கோகுல் அவர்கள் வீட்டில் இருக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு மருந்தை எவ்வாறு தயாரிப்பது என்பதையும் விளக்கினார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக மாடுகளுக்குத் தீவனச் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் பங்கேற்பாளர்களுக்கு புல் கரணைகள் வழங்கப்பட்டன. இதில் 35 பேர் பயனடைந்தனர், ஆண்கள் 20 பேர் பெண்கள் 15 பேர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருளகத்தின் களப்பணியாளர்கள் சுந்தரி, ரேவதி, ஜான், மஞ்சுநாத் ஆகியோர் செய்திருந்தனர்.
ஊர் குறிப்பு
மாயாறு மற்றும் பூதநத்தம் ஆகிய ஊர்களில் சுமார் ஆயிரத்தி இருநூறு குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் 1990கள் வரை 20,000 நாட்டு மாடுகள் இருந்த நிலையில் தற்போது 656 மாடுகள் மட்டுமே உள்ளன. வனத்துறை கட்டுப்பாடு மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் கால்நடைகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக ஊர்மக்கள் தெரிவித்தனர். இங்கு கலப்பின மாடுகள் சொற்ப எண்ணிக்கையிலேயே (18) இருக்கின்றன. இங்கு கால்நடைகள் பெரும்பாலும் எருவுக்காகவே வளர்க்கப்படுகின்றன. நாட்டு மாடுகள் ஒரு நாளைக்கு 1.5 - 2 லிட்டர் பால் தருகின்றன. வனத்திற்குள் மேயச்செல்லும்போது காட்டு விலங்குகளால் கால்நடைகள் பலியாகும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.