மின்சாரம் தயாரிக்கும் ஃபேன்!
பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்த ஆயிஷா நேராக அடுப்படிக்குப் போனாள் . அங்கே அவள் அம்மாவும், அப்பாவும் சாயங்கால டிபன் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
பிரகாசமான புன்னகையோடு வந்த ஆயிஷாவைப் பார்த்த அவள் அப்பா, "இன்றைக்கு ஏதோ சந்தோஷமா விஷயத்தோட வந்திருக்க போலிருக்கே" என்றார். " ஆமா, ஆமா! இன்றைக்கு பள்ளிக்கூடத்துக்கு பாபு ஒரு பொருளை செய்து கொண்டு வந்திருந்தான். சீக்கிரம் வாங்க, உங்களுக்கும் காண்பிக்கிறேன். வீட்டில் காண்பித்தவுடன் திரும்பக் கொடுத்து விடுவதாக அவனிடம் சொல்லியிருந்தேன்" என்றாள் ஆயிஷா.
அம்மா, அப்பா அவளைப் பின்தொடர, புத்தகப் பையில் இருந்து பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு காற்றாடியை வெளியே எடுத்தாள் ஆயிஷா. சிறுவர்கள் தென்னை ஓலையால் செய்து விளையாடும் காற்றாடியை போன்று சுழலும் வடிவத்தில் அது இருந்தது . தம்பி ஓடிவந்து பக்கத்தில் நின்று கொண்டு, அக்கா என்ன செய்யப் போகிறாள் என்பதை ஆவலான கண்களோடு பார்த்தான். ஆயிஷா இப்போது பையில் இருந்து சிறிய மோட்டார் ஒன்றை வெளியே எடுத்தாள் . அதில் மிகச்சிறியதாக, அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படும் பல்பு ஒன்று பொறுத்தப்பட்டிருந்தது. அது ஒரு விளக்கு.
காற்றாடியின் நடுவில் இருந்த துவாரத்தில் மோட்டாரின் சுழலும் பாகத்தை கவனமாகப் பொருத்திய பிறகு , ஆயிஷா சொன்னாள், "ஃபேன் ஸ்விட்சை போடுங்க அம்மா" சுழலத் தொடங்கிய ஃபேனுக்கு நேராக ஆயிஷா , தன் கையில் இருந்த காற்றாடியைத் திருப்பினாள். காற்றாடி மெதுவாகச் சுழலத் தொடங்கியது. " அம்மா, அப்பா பல்பைப் பாருங்க, பல்பு எரியுது பாருங்க" என்று மகிழ்ச்சியோடு ஆயிஷா குதித்தாள். விளக்கு மெதுவாக மின்னிமின்னி ஒளியை அதிகமாகப் பாய்ச்சத் தொடங்கியது. "பரவாயில்லையே இது நல்ல தொழில்நுட்பமாக இருக்கே" என்றார் அப்பா. " இங்க பாருங்க அப்பா, பல நாடுகளில் மின்சாரம் உற்பத்தி செய்றதுக்கு, இது மாதிரி பெரியபெரிய காற்றாடிகளைப் பயன்படுத்துகிறார்களாம். எங்க டீச்சர் சொன்னாங்க தெரியுமா" என்றாள் உற்சாகமாக." அவங்க சொன்னது ரொம்பச் சரி" என்றார் அப்பா. " இந்த காற்றாடியை செய்து கொண்டு வந்ததற்கு பாபுவை டீச்சர் ரொம்பவே பாராட்டினாங்க.
நாமும் இது போல ஒரு காற்றாடியை செய்து வீட்டில் பொருத்தினால் என்ன அப்பா, மின்சாரம் இல்லாத நேரத்தில் இதில் இருந்து நமக்கு வெளிச்சம் கிடைக்கும் இல்லை. நிறைய நேரம் கரண்ட் கட் ஆகிப் போகுதே" என்று கேட்டாள். " அதற்கு இவ்வளவு சிறிய மோட்டார் எல்லாம் போதாது, ஆயிஷா. அது மட்டுமில்லாம அது நன்றாகச் சுழல நிறைய காற்றும் வேணுமில்லையா. அப்படி சுழல காற்றாடியை மிக உயரமான இடத்தில் பொருத்த வேண்டும்" என்று அம்மா சொல்ல, அது ஆயிஷாவுக்குப் பிடிக்கவில்லை. "அம்மா இதை இங்க வைக்கக்கூடாதுன்னு சொல்றாங்க, சரி, நான் எங்க பள்ளிக்கூடத்துல பெரிய காற்றாடியை வைக்க வேண்டும் என்று டீச்சர்கிட்ட சொல்லப் போறேன், பார்ப்போம்" என்றாள். அவளது யோசனையைக் கேட்டு அப்பாவும் அம்மாவும், சிரித்துக் கொண்டே, "சரி, சொல்லித்தான் பாரேன்," என்றார்கள். கீழே இருந்த காற்றாடியை எடுத்துக் கொண்டு பாபுவின் வீட்டுக்கு ஓடினாள் ஆயிஷா. தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை.
மேலே சுழன்று கொண்டிருக்கும் ஃபேனை பார்த்துக் கொண்டே, "இந்த ஃபேன் சுத்துனா எப்படி லைட் எரியுது. இதுல ஏதோ மாஜிக் இருக்கு" என்றான். " ஃபேனில் எந்த மாஜிக்கும் இல்லை. பிளாஸ்டிக் காற்றாடியில்தான் எல்லா மாஜிக்கும்" என்றார் அப்பா. " எல்லா குழந்தைகளுக்கும் தாங்களாகவே எதையாவது செய்து பார்க்கணும் என்று ஆசையிருக்கும். அப்படி அவங்களே செய்யுறதுதான் ஓலைக் காற்றாடி. சும்மா கையில் பிடித்துக் கொண்டால் அது சுத்தாது. காற்றாடியின் நடுவில் ஒரு குச்சியை பொருத்தி, குச்சியை பிடித்துக் கொண்டு ஓட வேண்டும். அப்போதான் சுழலும். காற்று நல்லா வீசினா, எதிர்பக்கத்துலகூட வேகமாகச் சுழலும். யாருடைய காற்றாடி அதிகமாகச் சுழல்கிறது என்று நண்பர்கள் குடுகுடுவென்று ஓடுவதை , இப்பவெல்லாம் நிறைய பார்க்க முடியறதில்லை. கல்வியின் சுமை குழந்தைகளை விளையாட்டில் இருந்து தள்ளி வைக்கிறது.
எத்தனையோ நாடுகள் இது மாதிரி பிரம்மாண்ட காற்றாடிகளை வைத்திருக்கிறார்கள், தெரியுமா?" என்று கேட்டார். பாபு வீட்டிலிருந்து திரும்பிய ஆயிஷாவும், தம்பியுடன் சேர்ந்து கொண்டு அப்பாவின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள். " அங்கெல்லாம் பல ஏக்கர் நிலங்களில் ஏராளமான காற்றாலைகளை அமைத்திருக்கிறார்கள். ஒரேயொரு வித்தியாசம்தான். இந்த பெரிய காற்றாடிகளின் உயரம் பத்து மாடிக் கட்டடத்தின் உயரம் இருக்கும். அதன் சுற்றளவையும், உயரத்தையும் மனசில் கொஞ்சம் கற்பனை செஞ்சு பாருங்க. காற்றாலைகள் அதிகமாக உள்ள பகுதிகளை காற்றாலை பகுதிகள் என்றும் சொல்வார்கள். இதன்மூலம் காற்றின் அதிவேக சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறாங்க . சைக்கிள் சக்கரத்தால் டைனமோ சுழன்று லைட் எரிவது போல, காற்றாலையின் இறக்கைகள் சுழலும்போது பெரிய டைனமோக்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதுதான் இதன் தொழில்நுட்பம்.
எப்போதும் காற்று வீசக்கூடிய இடங்களில்தான் காற்றாலைகளை அமைக்க முடியும். உயரம் குறைவான இடங்களில் காற்று குறைவாகவே வீசும். காற்றாடியின் உயரம் அதிகரிக்கும்போது, மரங்கள், கட்டடங்கள் காற்றை தடுத்து நிறுத்தாமல் இருப்பதால், உயரமான இடங்களில்தான் பலமான காற்று வீசுகிறது. இதற்காக பலம்வாய்ந்த உயரமான சிமெண்ட் தூண்கள், இரும்புத் தூண்கள் மீது காற்றாலைகளை அமைக்கிறார்கள். தென்னை ஓலையால் செய்யும் காற்றாடிக்கு நான்கு இறக்கைகள் இருக்கும். ஆனால் மின்சாரம் தயாரிக்கும் இந்த காற்றாலைகளுக்கு மூன்று இறக்கைகள் மட்டுமே இருக்கின்றன. தூண்கள் இருபது மீட்டருக்கு அதிக உயரமாக தயாரிக்கப்படும். தற்பொது பூமியில் இருக்கும் மிகப்பெரிய காற்றாலையின் உயரம் 200 மீட்டருக்கும் அதிகம். அதன் தூண்கள் மட்டும் 160 மீட்டர் உயரம். சுழலும் இறக்கை ஒவ்வொன்றின் நீளமும் 45 மீட்டர்.
ஜெர்மனியில் உள்ள லாஸ்ஸோ என்ற இடத்தில் இந்த மாபெரும் காற்றாலை கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் ஒரு விழுக்காடு , காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. டென்மார்க்கில் 19 விழுக்காடு மின்சாரத் தேவையை காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்கிறார்கள். காற்றாலை மின்சார உற்பத்தியில் ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்பெயின் நாடுகளுக்கு அடுத்து 4வது இடம் இந்தியாவுக்கு. அதிலும் தமிழகத்தில்தான் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது," என்றார் அப்பா. " ஓ, அப்படியா" என்றார்கள் ஆயிஷாவும் அவள் தம்பியும். "
ஆமாம். இந்தியாவில் 8000 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் மூலம் தயாரிக்க முடிகிறது. அதில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலைகளை இப்போதுதான் பயன்படுத்து கற்றுக் கொண்டிருக்கோம் என்று தப்பா நினைச்சுக்காதீங்க . 2,200 ஆண்டுகளுக்கு முன்பே காற்றாலைகளைப் போன்ற அமைப்பு இருந்திருக்கிறது. சிறப்பாகப் பயனளிக்கும் காற்றாலைகள் ஏழாம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானில் உருவாகின . அதற்குப் பிறகு காற்றை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது டென்மார்க்தான். இன்றும்கூட அவர்கள்தான் காற்றை அதிகமாக பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து வருகிறார்கள்.
மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு தற்போதுள்ள மாற்று வழிகளில் மிகச் சிறந்தது காற்றாலைகள்தான் . அதுமட்டுமில்லாம, இது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது இல்லை. இருந்தாலும் காற்றாலைகளில் அடிபட்டு பறவைகள் இறந்து போவதும் நடக்கிறது" என்றார் அப்பா. "இது கவலை தரும் அம்சம்தான் என்றாலும், காற்றாலைகளால் நிறைய நன்மைகள் கிடைக்கிறது என்று எங்க டீச்சரும் சொன்னாங்க அப்பா" என்றாள் ஆயிஷா. " அதில் எந்தச் சந்தேகமும் இல்லை"
மலையாளம் வழி தமிழில் : -
நன்றி : யுரேகா மலையாள இதழ்