சிதடிப் பூச்சிகளின் சிம்பொனி
நீங்கள் காட்டுக்குச் சென்றிருக்கிறீர்களா? அங்கு விதவிதமான செடிகள், ஓங்கி வளர்ந்த மரங்கள், கலர்கலரான வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் எல்லாம் பார்க்க முடியும்.
அடிக்கடி காட்டுக்குச் செல்பவர்கள் அனுபவிக்கும் ஒரு விஷயம் இரவு நேரத்தில் பெரும் கச்சேரியைப் போன்று கூட்டங்கூட்டமாக ரீங்காரம் செய்வதை கேட்டிருக்கலாம். இந்த ரீங்காரமிடும் சிறு பூச்சி, ஈயைப் போன்ற அளவுடனே இருக்கும். ஆங்கிலத்தில் இப்பூச்சியின் பெயர் சிகாடா. தமிழில் சில்வண்டு என்றும் சிதடிப் பூச்சி என்றும் அழைக்கப்படும் அப்பூச்சியின் உலகத்துக்குள் கொஞ்சம் எட்டிப் பார்ப்போம். மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலங்களில் அதிகம் உலவும் இப்பூச்சிகள் மற்ற இடங்களிலும் காணக் கிடைக்கும். பெண் பூச்சிகள் மரத்தின் பொந்துகளில் முட்டையிடும்.
முட்டை ஒன்றரை மாதத்தில் பொரிக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம்பூச்சி கீழே விழுந்து தரையில் குழி பறித்து உள்ளே சென்று தங்கிவிடும். எத்தனை நாட்களுக்கு? நாட்களல்ல, ஆண்டுகளுக்கு! பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னரே, மண்ணுக்குள் இருந்து வெளிஉலகுக்கு வரும். அதுவரை ஜாலியாக மரத்தினுடைய வேர்களின் முனைப் பகுதியில் போய் சாவகாசமாகத் தங்கி, தனக்குத் தேவையான உணவை வேரிலிருந்தே பெற்றுக் கொள்ளும். பதினேழு ஆண்டுகள் மண்வாசத்துக்குப் பிறகு வெளியே வரும் பூச்சிகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறது தெரியுமா? ஆண்டுகளல்ல, நாட்கள்! வெறும் ஒரு வாரம் மட்டுமே. அதிலும் பெரும்பாலான நேரம் இனப்பெருக்கம் செய்வதிலேயே கழித்து விடும். வெவ்வேறு அம்மாக்களின் முட்டைகளிலிருந்து வெளியே வந்த பூச்சிகள் எல்லாம் சொல்லி வைத்தது போல 17 ஆம் ஆண்டிலோ அல்லது 13 ஆம் ஆண்டிலோ வெளியுலகுக்கு வருவது ஏன் என்று ஆராய்ச்சியாளர்கள் மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் பூச்சிகள் ஏன் அந்த ஓசையை எழுப்புகின்றன தெரியுமா?
அவை உள்ளேயும் வெளியேயும் சவ்வை விரைவாகத் தள்ளி ஓசை எழுப்புகின்றன. சவ்வின் உட்புறம் உள்ள தசையை சுருக்கி விரிப்பதன் மூலம் இந்த சவ்வை அசைக்கின்றன. இந்தத் தசை விநாடிக்கு நூறு முறைகூட சுருங்கி விரியும்.
அடிவயிற்றில் உள்ள மத்தளம் போன்ற சவ்வை விரைவாக அதிர வைத்து ஓசை எழுப்புகின்றன ஆயிரக்கணக்கான பூச்சிகள். ஆயிரக்கணக்கான பூச்சிகள் ஒரு சேர குரல் கொடுக்கும்போது, கூட்டுஇசை போலிருக்கும். புதிதாக மலைப்பகுதிக்குச் சென்றால், இந்த ஓசையின் அளவை வைத்தே காடு எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைக் கூறிவிடலாம். நிறைய பூச்சிகள் ரீங்காரமிட்டால், அந்தக் காடு மனிதர்களின் கைகளில் இருந்து தப்பி, தொந்தரவில்லாமல் இருக்கிறது என்று அர்த்தம். குறைவாகக் கேட்டால், காடு அழிந்து வருகிறது என்று பொருள்.
அமைதிப் பள்ளத்தாக்குப் போன்ற ஒரு சில அடர்ந்த காடுகளில் மட்டும் இந்தப் பூச்சிகளின் ஓசை கேட்பது இல்லை. அதனால்தான் அந்தக் காடுகளுக்கு அமைதிப் பள்ளத்தாக்கு என்று பெயர் வந்தது.
பொதுவாக, இணை சேர்வதற்காகவே ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளைக் கவர்வதற்காக இந்த ஓசை எழுப்புகின்றன. இணைசேரும் காலம் முடிந்ததும், மரப்பொந்தில் சென்று முட்டையிடும். முட்டை பொரித்து வெளி வந்தவுடன் இளம்பூச்சி, டாடா காட்டிவிட்டு மண்ணுக்குள் சென்று விடும். அப்புறமென்ன, பதிமூன்று, பதினேழாவது ஆண்டில்தான் தங்கள் நிலவாசத்தை முடித்துக் கொண்டு வனவாசத்துக்கு வரும், வெறும் 7 நாள் ஆயுசுக்காக...