குரங்கு நிபுணர் ஜேன் கூடால்
"மொழி இருந்தால் குரங்கும் அறிவாளிதான்" காட்டுயிர் திரைப்பட விழா ஒன்றுக்காக சமீபத்தில் குரங்கு நிபுணர் ஜேன் கூடால் சென்னை வந்திருந்தார் . 'விலங்குகள் பேசும்போது' என்ற அவரது படம் அந்த விழாவில் திரையிடப்பட்டது.
அவருடன் ஒரு பேட்டி
காடுகளில் உங்களால் மறக்க முடியாத ஓர் அனுபவம்?
அது ஒரு அற்புதமான தருணம். அடர் காட்டில் வாழும் ஒரு குட்டி சிம்பன்சி என்னை நோக்கி நகர்ந்து வந்தது. சற்று தூரத்திலிருந்த தாய் சிம்பன்சி, குட்டி என்னை நெருங்க அனுமதி கொடுத்து பேசாமல் இருந்தது. சாதாரணமாக விலங்குகள் தங்கள் குட்டிகளிடம் அந்நியர் யாரையும் நெருங்க விடுவதில்லை. அதுவே அவற்றின் இயல்பான தாய்மை-பாதுகாப்பு குணம். என்னை நோக்கி நகர்ந்து வந்த பிளின்ட் -டின் (அதற்கு நான் அப்படிப் பெயரிட்டிருந்தேன்) ஒளிரும் பெரிய கண்கள் என் கண்களை நோக்கின. பிறகு வாஞ்சையுடன் மெதுவாக எனது மூக்கை அது தொட்டது... சொல்லிக் கொண்டிருக்கும்போதே கூடாலின் கண்கள் அந்த நினைவுகளில் ஆழ்கின்றன.
குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
நமக்கும் குரங்குகளுக்கும் அறிவு ரீதியில் பெரும் இடைவெளி ஏற்படுவதற்கு மொழிதான் முக்கிய காரணம். மொழியின் மூலம் விஷயங்களை நாம் புரிந்து கொள்கிறோம். மொழியின் உதவியால் தகவல்களை எழுத்துகளைக் கொண்டு நினைவுகளாக பதிவு செய்து கொள்கிறோம். நாம் புரிந்து கொண்டதை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறோம். மேலும் மொழி மூளை அளவிலேயே பல்வேறு விஷயங்களை பதிவு செய்கிறது. அடுத்தடுத்த தலைமுறை கூடுதல் அறிவுடன் பிறக்கிறது. குரங்குகளுக்கு மொழி இல்லாதது, அவற்றின் மூளை தொடர்ந்து வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.
குரங்குளிடம் இவ்வளவு நெருக்கமாகப் பழகுகிறீர்களே, அவற்றின் நோய் எதுவும் உங்களுக்குத் தொற்றிக் கொள்ளதா?
எனக்கு அப்படி எந்த பயமும் இல்லை. தொடக்க காலத்தில் சிறுத்தைகளைப் பார்த்து நான் பயந்திருக்கிறேன். எனது முதல் ஆராய்ச்சித் திட்டத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணம் வெறும் ஐந்து மாதங்களில் கரைந்துவிட்டது. அதுதான் என்னை மிகவும் பயமுறுத்தியது. ஆராய்ச்சியை தொடர முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பியது. காட்டுயிர்கள் பயமுறுத்தக்கூடியவை அல்ல.
பிரபலமாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறீர்களா?
நான் ஒரு விஐபி எல்லாம் இல்லை. நான் நானாக இருப்பதையே முக்கியமாக கருதுகிறேன். நான் கூறுவதை மக்கள் கேட்கிறார்கள் என்பது ரொம்ப முக்கியம். பூவுலகை காக்க ஒவ்வொரு தனிநபரும் ஒவ்வொரு நாளும் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
காட்டுயிர்களை பாதுகாக்கும் பணியில் இவ்வளவு தீவிரம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
டான்சானியாவில் உள்ள கோம்பே சரணாலயத்திலோ , வேறு காட்டிலோ நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். அது உணர்வு எல்லோரையும் சென்றடைய வேண்டும். எல்லாம் பாதுகாக்கப்படவும் வேண்டும்...