
பாறு கழுகுகளைக் காப்பதற்காக ஒருங்கிணைக்கப்படும் ஆண்டுக் கூட்டம், கம்போடியா
ஆசியாவில் உள்ள பாறு கழுகுகளைக் காப்பதற்காக ஒருங்கிணைக்கப்படும் ஆண்டுக் கூட்டம் இந்த ஆண்டு கம்போடியாவிலுள்ள பூனாம் பெ நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், பங்களாதேசு, லாவோசு, தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர், சிங்கப்பூர், யுனைடடு கிங்டம் ஆகிய நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்களும், களப்பணியாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வைக் கம்போடியாவின் கான் துறை துணை இயக்குநர் Dr.Chea Sam Ang, Deputy Director General, Forestry Administration,. அவர்கள் தொடங்கி வைத்தார். பல்வேறு அறிஞர்களும் தங்கள் நாட்டில் மேற்கொண்டுவரும் பணிகள் குறித்து உரையாற்றினர். ஆசியப் பாறு கழுகுகளை அழிவிலிருந்து மீட்கும் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்
கழுகுகள் குறித்த சிறப்பறிஞர்களான முனைவர் ஜெமிமா பாரி ஜோன்சு, முனைவர் ரைசு கீரீன், முனைவர் கிறிஸ்போடன் ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.
இந்தியக் கால்நடை ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் டாக்டர் கரிகாலன், பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் இயக்குநர் முனைவர் கிசோர் ரிதோ, துணை இயக்குநர் முனைவர் சச்சின் ராணடே, உதவிப் பேராசிரியர் மருத்துவர் பெர்சி அவாரி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தென்னிந்தியாவில் பாறு கழுகுகள் பாதுகாப்புக்காக அருளகம் மேற்கொண்டுவரும் பணிகள் குறித்து உரையாட என்னை அழைத்திருந்தனர். தமிழ் நாட்டில் மேற்கொண்டுவரும் பணிகள் குறித்தும் அதற்கு மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு ஆகியவற்றின் ஓத்துழைப்பு குறித்துக் கவனப்படுத்தி உரை நிகழ்த்தினேன்.
குறிப்பாகத் தமிழ்நாடு அரசு வனத்துறையும், கால்நடைப் பராமரிப்புத் துறையும், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும், மாவட்ட நிர்வாகமும் தரும் ஆதரவை எடுத்துரைத்தேன். ஒன்றிய அரசு பாறு கழுகுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் நான்கு மருந்துகளைத் (டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், கீட்டோபுரோபென், நிமுசிலெட்) தடைசெய்தமைக்குப் பாராட்டுத் தெரிவித்தேன்.
பாறு கழுகுகள் பாதுகாப்புக்காக மாநில அளவில் செயல் திட்டம் உருவாக்கியதை வெகுவாகப் பாராட்டினர். நாம் மேற்கொண்ட சில முத்தாய்ப்பான முயற்சிகளையும் வெகுவாக இரசித்தனர்.
2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆண்டுக்கூட்டத்தைத் தமிழ்நாட்டில் நடத்தலாமா எனக் கேட்டனர்.
முதல் இரண்டுநாள் நிகழ்விலும் பயனுள்ள பல்வேறு தகவலைக் கேட்டறிந்தேன். குறிப்பாகப் பங்களாதேசு நாட்டில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட A. B. M. Sarowar Alam; நேபாள நாட்டில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்த உரையாற்றிய Ankit Joshi மற்றும் Krishna Bhusal; கம்போடியாவில் நடைபெறும் பணிகள் குறித்து உரையாற்றிய Oliver Gray-Rea. பாறு கழுகு செயல்திட்டம் குறித்து உரையாற்றிய Mary Davies தாய்லாந்திலிருந்து வந்து செம்முகப் பாறு குறித்த உரையாற்றிய Chaianan Poksawat, பாறு கழுகுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் மருந்துகள் குறித்து உரையாற்றிய Jake Zarins, மியான்மரில் நடைபெறும் பணிகள் குறித்து உரையாற்றிய Chea Sokha பாகிஸ்தான் நாட்டிலிருந்து உரையாற்றிய ஜாம்ஜெட் சவுத்ரி மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்து ஒருங்கிணைத்த வினாயகம் தர்மலிங்கம் ஆகியோரது உரை குறிப்பிடும்படியாக இருந்தது.
நிகழ்வின் ஒரு பகுதியாக சியாம்பெங் சரணாலயத்திற்குக் காணுலாவிற்கு அழைத்துச்சென்றனர். அங்கு முதன்முறையாக அரிய பறவைகளுள் ஒன்றான Slender-billed Vulture பார்க்கும் நல்வாய்ப்புக் கிடைத்தது.
———————————