சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உட்பட்டக் கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்வு - Jan/Feb 2025
கால்நடைகளுக்குத் தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்தும் உயர்மின் அழுத்த மின்வேலியின் ஆபத்து குறித்தும் காட்டுத்தீயினால் ஏற்படும் அழிவு குறித்தும் விசம் வைப்பதால் நேரும் தீங்கு குறித்தும் பல்வேறு தரப்பினரிடமும் பரப்புரை செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்வு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உட்பட்டக் கிராமங்களில் 27-01-2025 அன்று தொடங்கி 1-02-2025 வரை நடைபெற உள்ளது.
காராச்சிக்கொரை ஊரில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அருளகத்தின் செயலர் சு.பாரதிதாசன் தலைமை தாங்கினார். வனவர்கள் கண்ணன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பாரதிதாசன் பேசும்போது, 2025 புத்தாண்டின் தொடக்க நாளில் ‘பாறு’க் கழுகுகளைப் பாதுகாக்கும் நோக்கில் ‘நிமுசிலெட்’ மருந்தைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்தத் தடைவிதித்தது வரவேற்கத்தக்கது என்றார். 2006 ஆம் ஆண்டில் டைக்குலேபினாக் மருந்தும் 2023- ஆம் ஆண்டு கீட்டோபுரோபேன் மற்றும் அசிக்குளோபினாக் ஆகிய மருந்துகளும் தடைசெய்யப்பட்டது குறித்தும் இம் மருந்துக்கு விதிக்கப்பட்டத் தடையை மருந்துக்கடைக்காரர்களுக்கும், கால்நடை மருத்துவர்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும், பால் சங்கங்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துச்சொல்லும் விதமாக தெருமுனைப் பிரச்சாரம் வனத்துறையின் உதவியுடன் அருளகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்வையாளர்களுக்கு முறையற்ற உயர் மின்வேலிகளால் உருவாகும் சிக்கல் குறித்த விழிப்புணர்வுத் துண்டறிக்கையினை வனத்துறையைச் சேர்ந்த வனக்காப்பாளர்கள் துரைராம், சதீசுகுமார், குப்புச்சாமி ஆகியோர் வழங்கினர். தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்தும் பாறு கழுகுகளின் முக்கியத்துவம் குறித்த துண்டறிக்கையினை அருளகத்தைச் சேர்ந்த சுந்தரி,ரேவதி, சந்தோசு, ஜான் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பவானிசாகர் வனச்சரகர் சதாம் அவர்கள் வழிகாட்டுதலோடு வனவர்கள், வனக்காப்பாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
பாடல்கள் வாயிலாகவும் நாடகம் வாயிலாகவும் பலகுரல் வாயிலாகவும் கலைஞர்கள் செந்தில் தலைமையில் பொன்ராஜ், கடலரசன், உதயசங்கர், பிருந்தா, துர்கா ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
காராச்சிக்கோரையில் தொடங்கி, கொத்தமங்கலம், நெருஞ்சிப்பேட்டை, ராஜன் நகர், பட்ர மங்கலம் ஆகிய ஊர்களிலும் தெங்குமரகடா, கல்லாம்பாளையம், அல்லிமாயாறு, புதுக்காடு ஆகிய ஊர்களிலும் நடைபெற்றது. நிகழ்வினை ஊர்ப் பொதுமக்கள் இரசித்துப் பார்த்தனர்.
இன்றைய நிகழ்வு பவானிசாகர், சத்தியமங்கலம், தூக்கநாயக்கன் பாளையம், கடம்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து வரும் ஆறுநாட்களுக்குப் பல்வேறு ஊர்களில் நிகழ்வு நடைபெற உள்ளது தங்களது ஆதரவு பெரிதும் விரும்பப்படுகிறது.