இளையோர் மற்றும் மாணக்கர்களுக்கு மணல்மேடுகள் பாதுகாப்புச் சிறப்பு பயிற்சி மற்றும் பட்டறிவுப் பயணம்
இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் தீவில் மக்கள் பங்கேற்புடன் மணல்மேடுகள் பாதுகாக்கும் திட்டத்தினை அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இத்திட்டத்தில் இளையோர்கள், மாணாக்கர்கள் பங்கேற்பை உறுதிசெய்யும் முகமாக அவர்கட்கு சுற்றுச்சூழலையும் மணல்மேடுகளையும் பாதுகாப்பதன் அவசியத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வுப் பயிற்சி மற்றும் பட்டறிவுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வுக்கு அருளகம் அமைப்பின் செயலர் மற்றும் திட்ட இயக்குனர் திரு.சு.பாரதிதாசன் அவர்கள் தலைமையுரை ஆற்றி தனித்துவமான இம்மணல்மேடுகள் நன்னீர் ஆதாரமாகவும் கடல்நீர் உட்புகாமலும் காத்து வருவதை விளக்கினார். இப்பகுதியில் தாழை மரங்கள் மிகுந்து இருந்ததால் வேர்க்காடு எனப்பெயர் பெற்றதையும் எடுத்துரைத்தார்.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆதரவில் டெரி அமைப்பின் மூலம் மத்திய மாநில அரசுகளின் ஒப்புதலில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் இத்திட்டம் நடைபெற்று வருவதா கவும் இத்திட்டத்தின் மூலம் தாழை , முள்ளி, அடப்பங்கொடி, பனை, விராலி உள்ளிட்டச் செடிகள் நடப்பட்டு வருவதையும் கவனப்படுத்தினார். தற்போது மணல் மேடுகள் சூழல் பார்வையற்றுச் சமப்படுத்தப்படுவது குறித்தும் தாழை மரங்களும் அழிக்கப்பட்டு வருவதையும் அவற்றைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அருளகத்தின் திட்ட ஆலோசகர் திரு. பொன். நடராசன் விளக்கமளித்தார்.
மேலும் தங்கச்சி மடம் அரசுப் பள்ளி ஆசிரியர் திரு.ஜெரோம் அவர்கள் சிறு வயதில் தான் பார்த்த மணல்மேடுகளையும் இயற்கைச் செழிப்பையும் உரையாடலின் வழியே காட்சிப்படுத்தினார்.
மணல் மேட்டில் மரக்கன்று நடுதல்-
தொடர்ந்து இராமேசுவரம் மல்லிகை நகர் அருகில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் மாணாக்கர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.
நெய்தல் நாற்றுப்பண்ணை பார்வையிடல்-
குந்துகாலில் நடப்பட்டிருந்த அலையாத்தி மரங்களையும் பாம்பன் ஊராட்சிக்குட்பட்ட நெய்தல் நாற்றுப்பண்ணையை பார்வையிட்டு இங்கு மணல்மேடுகளில் நட்டு பராமரிப்பதற்காக வளர்க்கப்பட்டு வரும் மரம் செடி கொடிகளை பார்த்து அதன் பயனையும் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெரிந்துகொண்டனர். இளையோர்கள் மற்றும் மாணாக்கர்கள் தன்னார்வமாக இணைந்து மணல்மேடுகள் பாதுகாப்பு மரம் வளர்ப்பு சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பான செயல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட விருப்பம் தெரிவித்தனர்.
மணல்மேடுகள் பாதுகாப்பு உறுதிமொழி-
நிகழ்வின் இறுதியில் தீவின் பல்லுயிர் பாதுகாப்பு மணல்மேடுகள் பாதுகாப்பு உறுதிமொழி அனைவரும் இணைந்து எடுத்துக் கொண்டனர்.
நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை திரு.ஜான் செபேசு அவர்கள் வரவேற்றார் அருளகத்தின் களப்பணியாளர் திரு.சக்தி அவர்கள் நன்றியுரை யாற்றினார்.