உயிரியலாளர் முனைவர் ஏ ஜே டி ஜான்சிங் (A. J. T. Johnsingh) நெஞ்சில் தைத்த முள்
கடந்த ஜீலை மாதம் சென்னையின் மையப் பகுதியில் சோர்வடைந்த நிலையில் வெண்முதுகுப் பாறு கழுகு ஒன்று பறவை ஆர்வலரால் மீட்கப்பட்டது. உடனே முதலுதவி மருத்துவத்திற்காக அது பெசன்ட் நினைவு விலங்குகள் நல மருந்தகத்திற்கு வனத்துறையால் அனுப்பிவைக்கப்பட்டது. ஆயினும் பலனளிக்கவில்லை. இறந்து விட்டது. அதனை உடற்கூறு ஆய்வு செய்தபோது வயிற்றில் இரை எடுத்ததற்கான அறிகுறி ஏதும் இல்லை என்பதும் உடலுறுப்பில் காயம் இருந்ததும் தெரியவந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் பறவை ஆராய்ச்சியாளர் இரவீந்திரன் அவர்கள் எம்மைத் தொலைபேசியில் அழைத்துப் பறவை ஆர்வலர் ஒருவர் இரயில் பயணத்தின்போது அரைக்கோணம் அருகே ஒரு சோடிப் பாறு கழுகுகளைக் கண்டதாகவும் இதுகுறித்து மேலதிகத் தகவல்களைத் திரட்டுமாறும் கோரியிருந்தார். அருகில் வசிக்கும் நண்பர்களுக்குத் தகவல் அனுப்பிப் பார்க்கச் சொன்னேன். ஆயினும் கண்டுபிடிக்க இயலவில்லை. அவற்றுக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. இரை ஏதும் கிடைப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லாமல் வந்த வழியில் திரும்பிச் செல்வதற்கும் போதிய தெம்பு இல்லாமல் அவை தவித்திருக்கக்கூடும்.
ஏன் இந்த நிலை ஏற்படுகிறது.
மனிதனுக்குச் செய்யும் சாவுச் சடங்கைப் போலவே விலங்குக்கும் செய்ய வேண்டும் என்ற விலங்கு நேயச் சிந்தனை காரணமாகவும் தூய்மை கருதியும் கெட்ட வாடை வீசுகிறது என்றும் நோய்த் தொற்று ஏற்படும் என்று அஞ்சியும் இறந்த விலங்கின் இறைச்சியில் யாரேனும் நஞ்சு தடவிவிடக்கூடாது என்பதாலும் அதன் மூலம் பிற விலங்குகள் ஏதும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற அக்கறையிலும் உடலங்கள் புதைக்கப்படுகின்றன. இது எல்லாம் நகர்ப்புறத்தில் செய்தால் கூடப் பரவாயில்லை. காட்டிலும் இப்படித் தான் நடக்கிறது. சில விதிவிலக்குகள் தவிரப் பெரும்பாலான இடங்களில் காட்டிலோ காட்டிற்கு அருகிலோ பேருயிர்களான யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்கு இறந்தால் உடற்கூராய்வுக்குப் பின்னர் புதைக்கவோ எரிக்கவோ செய்யப்பட்டது என்று தான் செய்தி வருகின்றது. இதில் உச்சகட்டக்கொடுமை என்னவென்றால் மின்சாரம் தாக்கி இறந்த விலங்குகளையும் சாலையிலும் இரயிலிலும் அடிபட்டு இறக்கும் விலங்குகளும் இவ்வாறே புதைக்கப்படுகிறது. இது கவலையளிக்கும் விசயம் ஆகும்.
மேலும் அவை எப்படிப் புதைக்கப்படுகின்றன என்று பார்த்தால் மனது வலிக்கும். இறைச்சியை யாரும் கவர்ந்து செல்லக்கூடாது என்பதற்காக இயந்திரத்தை வரவழைத்து ஆழக்குழி தோண்டி உடலத்தை அதனுள் தள்ளி அதன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, குழியைச் சுற்றி பிளீச்சிங்பவுடர் தெளித்து, டெட்டால் தெளித்து மூடப்படுகிறது. சில வேளைகளில், மூட்டை மூட்டையாகச் சமையல் உப்பைக் கொட்டுவது போன்றவையும் அரங்கேறும். இதனால் எந்த நுண்ணுயிர்களுக்கும் கூடப் பயன்படாமல் போகிறது. மேலும் எரிக்க வேண்டி வந்தால் டன்கணக்கில் மரக்கட்டைகளை அடுக்கி வைத்து எரிப்பதும் நடக்கும். இதனால் எவ்வளவு புகை, சீர்கேடு. இது காட்டில் மட்டும் தான் நடக்கிறது என்று எண்ணி விட வேண்டாம். கடற்கரையிலும் பெரிய சுறாவோ திமிங்கிலமோ ஆமையோ ஓதுங்கினாலும் அவற்றுக்கும் இதேபோன்ற அரங்கேற்றம் தான்.
இதில் நாம் கவனிக்கத் தவறும் விசயம் என்னவென்றால் இறந்த விலங்குகளை உண்பதற்காகவே சில உயிரினங்கள் தகவமைக்கப்பெற்றிருக்கின்றன என்பதையே நாம் மறந்து விடுகிறோம். அதில் சிறப்பிடம் வகிப்பவை பாறு கழுகுகள். வெகுமக்களால் பிணந்தின்னிக் கழுகு என அழைக்கப்படும் இவை பிற விலங்குகளைக் கொன்று உண்ணும் வேட்டையாடிப் பறவை அல்ல. இறந்ததை மட்டுமே உண்பவை. பாறு மட்டுமின்றி கழுதைப் புலி, பன்றி, நாரை, கொக்கு, மைனா, காகம் உள்ளிட்டவையும் இறந்த விலங்குகளை உண்டு சுற்றுப்புறத்தைக் காக்கும் அரிய அற்புதமான பணியினைச் செய்து வருகின்றன. கடலில் ஆமைகளும் இதேபோன்று துப்புரவப் பணியினைச் செய்கின்றன. உடலங்களை எல்லாம் புதைத்துவிட்டால் அவை உணவுக்கு எங்கு செல்லும் என்று நாம் யோசிப்பதில்லை. இந்தச் செயல் அவற்றின் உணவைத் தட்டிப்பறிப்பதற்குச் சமம். இறைச்சியில் நஞ்சு தடவாமலும் களவாடப்படாமலும் கண்காணிப்புக் கேமரா மூலம் அதனைத் தடுக்க முடியும். இது எல்லாம் தெரிந்தும் எதற்கு நமக்கு வம்பு என்று ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் புலி உள்ளிட்ட பூனை இனத்தைச் சேர்ந்த விலங்குகளை எப்படி அப்புறப்படுத்தவேண்டும் என்ற வழிகாட்டி முறையை உருவாக்கியுள்ளது. புலியின் நகம், பல், தோல், இறைச்சி ஆகியவை மதிப்பு மிக்கதால் அவற்றை எரிக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இதே அளவுகோலை எல்லா விலங்குகளுக்கும் பொருத்துவது ஏற்புடையது அல்ல.
தற்போது தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் பாறு கழுகுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்பது மகி்ழ்ச்சியளிக்கிறது. அதற்கேற்ப அவற்றுக்கு இரை கிடைப்பதையும் கிடைக்கும் இரையும் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.
உயிரியலாளர் முனைவர் ஏ ஜே டி ஜான்சிங் (A. J. T. Johnsingh) நெஞ்சில் தைத்த முள்-
மறைந்த காட்டுயிர்ப் பாதுகாவலர் ஏ.ஜே.டி. ஜான்சிங் அவர்களிடம் பாறு கழுகுகள் எதிர்நோக்கும் சிக்கல் குறித்து உரையாடியபோதெல்லாம் இறந்த விலங்குகளைப் புதைக்காமல் அவற்றைப் பாறு கழுகுகளுக்கு இரையாக்கவும் இது குறித்து வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்கவும் முதன்மைக் காட்டுயிர் பாதுகாவலருக்கு வேண்டுகோள் விடுப்போம் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். இது குறித்து எனக்கும் கழுகுகள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த கிரன், பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக இயக்குநர் திரு ஆசாத் இரகுமானி, குரங்குகள் ஆராய்ச்சியாளர் அஜீ்த்குமார், பாறு கழுகு ஆராய்ச்சியாளரும் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் முன்னாள் துணை இயக்குநருமான முனைவர் விபு பிரகாசு, சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த முனைவர் ராஜா ஜெயபால், இந்தியக் காட்டுயிர்கள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கொமர்கோக்ஷி, ஒய்.வி. ஜாலா, ஆசியளவிளான பாறு கழுகுகள் பாதுகாப்புக்கானத் திட்ட மேலாளர் முனைவர் கிறிஸ்போடன் ஆகியோருக்கும் விடுத்த மின்னஞ்சலிலும் இது குறித்து வலியுறுத்தியிருந்தார். அதற்குப் பதில்சொல்லும் முகமாக அதில் முதல் கையெழுத்தாக ஏ.ஜே.டி. ஜான்சிங் அவர்களது கையொப்பத்தை இடம்பெறச் செய்யவேண்டும் என ஆசாத் இரகுமானி அவர்களும் குறிப்பிட்டிருந்தார். கோவிட் தொற்று காலத்தில் இக்கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தியதாலும்அதற்குப் பின்னர் ஏ.ஜே.டி. ஜான்சிங் அவர்கள் உடல் நலம் குன்றியதாலும் அக்கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது.
தந்தை பெரியார் அவர்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று விரும்பினார். அவர் இறக்கும் வரை அது நிறைவேறவில்லை. இதைக் கருத்தில்கொண்டு தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளுடன் அவரைப் புதைக்கிறோம் என்றார் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். இறந்த விலங்குகளைப் பிற உயிரினங்கள் உண்பதற்குத் தோதாக வழிகாட்டு நெறிமுறையை உருவாக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார் ஏ. ஜே. டி. ஜான்சிங் அவர்கள். அது நிறைவேறாமலே அவரது நெஞ்சில் தைத்த முள்ளோடு அவரைப் புதைத்துள்ளோம்.
தமிழ்நாடு அரசு அவரது மறைவையொட்டி வன உயிரின பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை அளித்த வன உயிரின ஆர்வலர் ஒருவருக்கு டாக்டர் ஏ ஜே டி ஜான்சிங் (A. J. T. Johnsingh) வன உயிரினப் பாதுகாப்பு விருது ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும் எனத் அறிவித்துள்ளதை முழு மனதுடன் வரவேற்கிறோம்.
அதே வேளையில் அவரது நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றவும் இறந்த விலங்குளைப் பிற உயிரினங்கள் பயன்படுத்துவதற்கேற்ப வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறும் மாண்புமிகு வனத்துறை அமைச்சருக்கு அன்புடன் வேண்டுகோள் வைக்கிறோம்.
சு.பாரதிதாசன்,
தமிழ்நாடு அரசு காட்டுயிர் வாரிய உறுப்பினர்
தமிழ்நாடு அரசு பாறு கழுகு பாதுகாப்புக் குழு உறுப்பினர்