
பாறு கழுகுகளைக் காக்க பாராளுமன்றத்தில் குரல் தருவேன் கோயமுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி இராஜ்குமார் பேச்சு
பாறு கழுகுகளைக் காக்க பாராளுமன்றத்தில் குரல் தருவேன் கோயமுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி இராஜ்குமார் பேச்சு
செப்தம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை பாறு கழுகுகள் விழிப்புணர்வு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு அருளகம் அமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை இன்று (07-09-2024) காலை 11.30 மணிக்கு வ.உ.சி. பூங்காவிலிருந்து கோயமுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர். ப. கணபதி இராஜ்குமார் அவர்கள் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தார். ஒவ்வொரு நாட்டிற்கும் மாநிலத்திற்கும் விலங்குகள், பறவைகள், செடிகள் இருப்பது போன்று மாவட்ட அளவிலும் இது போன்று உருவாக்க வேண்டும் என்றும் கோயமுத்தூரில் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். அழிந்து வரும் பாறு கழுகுகளைக் காக்க பாராளுமன்றத்தில் குரல் தருவேன் என்றார். இந்நிகழ்ச்சிக்கு கோயமுத்தூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி இரங்கநாயகி அவர்கள் முன்னிலை வகித்தார். இப் பறவை இனத்தின் மேல் உள்ள எதிர்மறையான எண்ணங்களையும் களைய வேண்டும் என்றார்.
ஓசை திரு காளிதாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கிப் பேசும்போது, தமிழ்நாடு முழுவதும் காணப்பட்ட இவ்வினம் தற்போது நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் சில பகுதிகளில் மட்டுமே பார்க்க முடிகிறது என்றும் அண்மையில் கோயமுத்தூரில் சிறுமுகைப் பகுதியில் இவை அடிக்கடித் தென்படுகின்றன என்றும் இது நல்லதொரு அறிகுறி என்றும் தெரிவித்தார். புலிகள் விரவலுக்கேற்ப இவ்வினமும் பெருகி வருகிறது என்றும் அனைத்து மக்களின் ஒத்துழைப்போடு இவ்வினம் நிச்சயம் மீண்டு வரும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
தி.முக. சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் துணைத்தலைவர், திரு.நா.மணிசுந்தர் அவர்கள் பேசும்போது, அருளகம் அமைப்பு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பாறு கழுகுகளைக் காக்கும் அரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றும் மக்கள் பிரதிநிதிகளாகிய நாடாளுமன்ற உறுப்பினரும் மாண்புமிகு மேயர் அவர்களும் தங்கள் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவர்களது அக்கறையைக் காட்டுகிறது என்றார்.
இப் பயணத்தின் நோக்கம் குறித்து சு. பாரதிதாசன் பேசும்போது, இவ்வினம் இறந்த உயிரினங்களைத் தின்று இருக்கும் உயிரினங்களைக் காக்கின்றன என்றும் இவை அழிவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தது இறந்துபோன கால்நடைகளில் இருந்த டைக்குளோபினாக் வலிபோக்கி மருந்தின் வீரியம் என்றும் இது தவிர விசம் தடவிய சடலங்களை எதிர்பாராதவிதமாக உண்ணநேர்ந்ததாலும் இறக்க நேரிட்டது என்றும் அத்துடன் இறந்த விலங்குகள் புதைக்கப்பட்டதாலும் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டும் இவ்வினம் பெருகுவது தடைபட்டது என்றும் தெரிவித்தார். இவ்வினத்தைக் காக்க மாநில அரசும் ஒன்றிய அரசும் எடுத்துவரும் நடவடிக்கையைப் பட்டியலிட்டார். கால்நடைகள் பயன்பாட்டிற்கு டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளைத் தடை செய்தது பற்றியும் குறிப்பிட்டார். இது குறித்து எடுத்துச்சொல்லவும் பாறு கழுகுகளின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் விதமாகவும் பிரச்சார வாகனம் கோயமுத்தூரில் தொடங்கி ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கித் தற்போது பாறு கழுகுகள் வலம் வரும் ஊரைச் சுற்றிலும் சுமார் 600 கி.மீ. செல்ல உள்ளது என்றும் தெரிவித்தார். நிகழ்வில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திருமதி ஸ்ரீ சத்யா, திருவாளர்கள் ஜவஹர் வெள்ளிங்கிரி, மதன், ஆடிட்டர் ராமமூர்த்தி, கார்த்திக்குமார் , சாதிக், டேவிட் பீட்டர், ஆயிஷா, அல்.அமீன் ஹபீப் மற்றும் ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர். நிகழ்வில் முத்தாய்ப்பாக அருங்காட்சியகத்தில் பாடம் செய்துவைக்கப்பட்ட பாறு கழுகையும் பார்த்து வியந்தனர்.
பிரச்சார வாகனத்தில் - பாறு என்றால் என்ன? அதில் எத்துனை வகை உண்டு? எங்கு காணலாம்? அவற்றால் சூழலுக்கு என்ன நன்மை? இதன் தனித்துவம் என்ன? இவற்றின் அழிவுக்கு என்ன காரணம்? இவற்றை அழிவிலிருந்து மீட்க கால்நடை வளர்ப்போரும், கால்நடைத் துறையினரும், மருந்து விற்போரும், பொதுமக்களும் என்ன செய்ய வேண்டும்? ஆகிய தகவல்கள் அடங்கிய சிலைடுகள் சுழற்சி முறையில் நகர்வது போல (Digital board) காண்போரைக் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. க்யூ ஆர் கோடு வழியாகவும் தரவகளைப் பெறும் வண்ணம் பாறு குறித்த பல்வேறு தகவல்கள் எளிய முறையில் விவரிக்கப்பட்டிருந்தது கூடுதல் சிறப்பு. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருளகம் அமைப்பைச் சேர்ந்த சர்மா, அமிர்தலிங்கம், சரவணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.