அலையாத்திக் காடுகள் (Mangrove Day) நாள் விழா
ஜீலை 26 இன்று அலையாத்தி காடுகள் நாள் முன்னிட்டு அலையாத்தி மரக்கன்றுகள் நடும் விழா அருளகம் அமைப்பின் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவில் வனத்துறை வழிகாட்டுதலுடன் பாம்பன் மக்கள் பங்கேற்புடன் குந்துக்கால் (Kunthukkal) பகுதியில் கடைபிடிக்கப்பட்டது.
இதன் முக்கிய நிகழ்வாக அலையாத்தி மரக்கன்றுகள் நடும் பணியினை திரு ஜெகதீசு பகான். (Jagadesh Bagan) ஐ.எப்.எஸ் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுக்கு அருளகத்தின் செயலர் சு. பாரதிதாசன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில் திரு. மகேந்திரன், வனச்சரகர், மண்டபம், மேற்பார்வையில் 600 அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டன.
திருமதி, லலிதா பிரகாசு, முதல்வர், கோமாரம் சுசீலா பன்னாட்டு உறைவிடப்பள்ளி (Kaumaram Sushila International Residential School) , திரு நிஜாம் முகைதீன், குருசடைத் தீவு சூழல் சுற்றுலா நிர்வாகி (Eco development Committee) மற்றும் குழுவினர், திரு முருகேசன், தங்கச்சிமடம் பஞ்சாயத்து உறுப்பினர், திருமதி.சரஸ்வதி அவர்கள், பசுமை இராமேசுவரம் (Green Rameswaram) திட்ட நிர்வாகி, திரு.இளையராஜா, மருத்துவர், (பாலாஜி மருத்துவமனை & மக்கள் நல அறக்கட்டளை Education and health Development Trust), திரு.சிக்கந்தர்-நிறுவனர், தீவு தன்னார்வலர் அமைப்பு (Island Protection Committee), திருமதி ரேஞ்சலின், மக்களுக்கான முன்னேற்ற அமைப்பு (People Action for Development) , மற்றும் தமிழ்நாடு ஊரக மறுமலர்ச்சி இயக்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு அலையாத்தி மரங்களை நட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக கோமாரம் சுசீலா பன்னாட்டு உறைவிடப்பள்ளி மாணாக்கர்கள் 45 பேர் கலந்துகொண்டு அலையாத்தி மரங்களை நட்டதுடன் கடலோரத்தில் தூய்மைப் பணியினையும் மேற்கொண்டனர்.
அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவில் மக்கள் பங்கேற்புடன் மணல்மேடுகள் பாதுகாப்புத் திட்டத்தினை ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித்திட்டம் (UNDP- SGP) உதவியுடன் டெரி (Tata Energy Research Institute) அமைப்பின் மேற்பார்வையில் மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலுடன் முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அருளகம் அமைப்பின் சார்பாக திட்டத்தின் அலுவலர்கள் திரு.நடராஜன், திரு.முஹம்மது சாகித் மற்றும் திரு.கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் கலந்துகொண்டோர் அனைவரும் மணல்மேடுகள் மற்றும் அலையாத்தி காடுகளைப் பேணிப் பாதுகாப்பது தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நடப்பட்ட மரங்களைப் பாதுகாப்பது தொடர்பாக மணல்குன்றுகள் பாதுகாப்புக் குழுவினருடனும் சூழல் பாதுகாப்புக் குழுவினருடனும் வனத்துறையினருடன் கலந்தாலேசிக்கப்பட்டது. இளங்கன்றுகளில் பாசி படர்வது, பாசி சேகரிக்கும் வாகனங்களால் சேதமுறுவது, மனிதர்கள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கிப் போடுவது ஆகியன குறித்து கவனப்படுத்தப்பட்டது. இதனைத் தவிர்க்க வேண்டிய முறைகளும் கவனப்படுத்தப்பட்டது.
மேலும் அலையாத்திக் காடுகள் நாளையொட்டிப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அருளகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக ம.சா. சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையில் கோயம்புத்தூர் கொமாரம் சுசிலா சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கடற்கரைத் தூய்மை பணி நடைபெற்றது. இவ்விழாவில் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்டப்பணியாளர் திரு. கெவின் குமார் அவர்கள் கலந்துகொண்டு கடல் வாழ் ஊயிரினங்களையும் குறிப்பாகப் பவழப்பாறைகளையும் பாதிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும் கிழிந்த வலைகளையும், கடல்பகுதியிலிருந்து அகற்றும் பேய்வலைத் திட்டம் குறித்து விளக்கமளித்தார். இதன்மூலம் சுமார் 400 கிலோ நெகிழிப் பைகள், கிழிந்த வலைகள், பாட்டில் உள்ளிட்டக் குப்பைகள் குந்துக்கால் கடற்கரையை ஒட்டிய மணல்மேடு பகுதியில் சேகரிக்கப்பட்டது. மாணவர்களை குருசடைத்தீவுக்கு அழைத்துச் சென்று கடல் வாழ் உயிரினங்கள் குறித்தும், கால நிலைச் சீர்கேடு குறித்தும், பவழ உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
அதனைத் தொடந்து மக்கள் பங்கேற்புடன் மணல்மேடுகளைப் பாதுகாக்கும் அருளகத்தின் திட்டப் பெயர்ப் பலகையை கொமாரம் சுசிலா சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளி முதல்வர் திருமதி லலிதா பிரகாஷ், அவர்கள் திறந்து வைத்தார். மண்டபம் சரக வன உயிர்க்கோளப் பாதுகாப்பு வனச் சரகர் திரு.மகேந்திரன், அவர்கள் நிகழ்வுக்கு முன்னிலை வகித்து கடல் ஆமைகள் குறித்து உரையாற்றினார். தூய்மை இராமேசுவரம் அமைப்பைச் சேர்ந்த திருமதி சரஸ்வதி அவர்கள் பாடலுடன் கூடிய விழிப்புணர்வை கொமாரம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார். இதில் மாணவர்களுடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் பேசிய அருளகம் அமைப்பின் செயலாளர் திரு சு. பாரதிதாசன் அவர்கள் அலையாத்திக் காடுகளும் மணல் குன்றுகளும் சூழல் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்றுத் தெரிவித்தார். மேலும் குடிநீரின் தரம் உவர்ப்பாகாமல் காக்கும் அற்புதமானப் பணியினை மணல்குன்றுகள் செய்கின்றன என்றும் சுனாமி போன்ற பேரிடர்களைத் தடுப்பதிலும் மீனவர்கட்கு வாழ்வாதாரத்தை வழங்குவதிலும் அலையாத்திக் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன எனவும் தெரிவித்தார்.
அருளகம் அமைப்பின் நெய்தல் நாற்றுப்பண்ணைக்கு திரு ஜெகதீசு பகன், இ.வ.ப., அவர்கள் வருகை புரிந்து அங்கு மணல்குன்றுகளுக்கு ஏற்றதாக வளர்க்கப்பட்டு வரும் நாற்றுக்களின் வளர்ச்சி குறித்துப் பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்குத் தேவையான ஒத்துழைப்பை பாம்பன் ஊராட்சி மன்றத் தலைவி திருமதி அகிலா பேட்ரிக் வழங்கினார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் அருளகம் அமைப்பின் திட்ட அலுவலர் திரு.நடராஜன் வரவேற்புரை வழங்க நிகழ்ச்சியின் நிறைவில் அருளகம் அமைப்பின் கள ஒருங்கிணைப்பாளர் திரு.கார்த்திக் அவர்கள் நன்றி கூறினார்.