சர்வதேச மணல் மேடுகள் தினம் இராமேசுவரத்தில் மேற்கொள்ளப்பட்டது
சர்வதேச மணல் குன்றுகள் தினத்தை (June 29, 2024) முன்னிட்டு மணல்மேடுகள் பாதுகாப்புக் குழுவினருக்கானப் பயிற்சிப் பட்டறை அருளகம் அமைப்பு சார்பாக இன்று இராமேசுவரம் தீவில் அப்துல்கலாம் நினைவிடத்திற்கருகிலுள்ள பலநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பஞ்சாயத்து தலைவர்கள் உறுப்பினர்கள், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 80 பேர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குத் தங்கச்சி மடம் பஞ்சாயத்துத் தலைவி திருமதி குயின் மேரி தலைமை வகித்துப் பேசும்போது, மணல்மேடுகள் பாதுகாப்புத் திட்டம் 20 ஆண்டுகட்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும் என்றும் தற்போது காலதாமதமாகத் தொடங்கினாலும் அருளகம் செயல்பாடுக்கு உறுதுணையாய் இருப்போம் எனவும் கூறினார். தொடர்ச்சியாக மணல்மேடுகள் பாதுகாப்பு குறித்து அருளகம் உருவாக்கிய விழிப்புணர்வுப் பதாகையை திருமதி குயின் மேரி வெளியிட அதை மன்ற உறுப்பினர் திரு முருகேசன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சிக்குத் தங்கச்சி மடம் ஊராட்சித் துணைத் தலைவர் ஆமினாம்மா, கவுன்சிலர் தில்லை புஷ்பம், கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை நிர்வாகி மருத்துவர் இளையராஜா, மீனவர் தொழிற்சங்கத் தலைவர், திரு கருணாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அருளகம் அமைப்பின் செயலாளரும் தமிழ்நாடு காட்டுயிர் வாரியம், தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை உறுப்பினருமான பாரதிதாசன் உலக மணல் மேடுகள் பாதுகாப்பு தின உரையில் இராமேஸ்வரம் தீவில் மக்கள் பங்கேற்புடன் மணல் மேடுகளை பேணிப்பாதுகாக்கும் திட்டத்தை ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதுடெல்லியில் உள்ள டெரி அமைப்பின் ஆதரவில் மத்திய மாநில அரசுகளின் துறைசார் வழிகாட்டுதலுடன் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் பொதுமக்கள் மற்றும் பிற தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்புடன் இத்திட்டப்பணியினை துவங்கி செயல்படுத்தி வருவது குறித்து விளக்கினார்;.
மேலும் அவர் பேசும்போது, கடல்மட்டம் உயர்ந்தால் முதல் பாதிப்பு தீவுப் பகுதிக்குத்தான் நேரும் தீவில் நிலத்தடி நீர் நன்னீராக இருப்பதற்குக் காரணம் மணல் குன்றுகள் தான் எனவே மணல் குன்றுகளைப் பாதுகாப்பது அவசியம் எனவும் எடுத்துரைத்தார்.
கவன்சிலர் தில்லை புஷ்பம் அவர்கள் பேசும் போது, மணல்மேடுகள் அதிகம் இருந்ததால் ஒரு ஊரின் பெயரே மணல் மேடு என இருந்ததாகவும் தற்போது அந்த ஊரில் மணல் மேடே இல்லை என்றும் தாங்கள் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடிய இடங்கள் எல்லாம் அதன் அருமை அறியாமல் கட்டாந்தரை ஆகிவிட்டது என வருத்தமுடன் தெரிவித்தார். திரு கருணாமூர்த்தி அவர்கள் பேசும்போது மணல் கொள்ளையர்களால் மணல் மேடுக்ள சுரண்டப்பட்டது என்றும் அதற்கு அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் துணையும் இருந்தது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மணல் குன்றுகள் பாதுகாப்புக்கு குரல் கொடுத்துவரும் திரு ஜெபமாலை அவர்கள் தீவுக்குத் தேவையற்ற சவுக்கு மரத்தை வனத்துறையினர் நடுவதைத் தடுக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திராவிட கழக தலைமைக் கழக அமைப்பாளர்; சிகாமணி மணல் மேடுகளில் முள்ளிச் செடிகளின் காய்கள் பந்து போன்று உருண்டு
வருவதை தீவின் அனைத்து கிராமங்களிலும் காணமுடியம் ஆனால் தற்போது மணல் மேடுகளை அழித்துவிட்டோம் எனவே, தீவின் குக்கிராமங்கள் தோரும் மணல்மேடு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு ஊரக மறுசீரமைப்பு இயக்கத் தன்னார்வலர் ஸ்டாலின் பேசுகையில் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் நீராதாரமும் மிகுந்த முக்கிமாகின்றது. அதை வழங்குவதில் மணல்மேடுகள் முக்கிய பங்காற்ற வல்லது எனவே அதைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என எடுத்துரைத்தார்.
தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு அமைப்பாளர் சின்னத்தம்பி அவர்கள் பேசுகையில் 1964-68-ல் ஏற்பட்ட புயல் பாதிப்பின் போது தனுஷ்கோடியிலும் இராமேஸ்வரத்திலும் மணல்மேடுகள் இருந்த காரணத்தினால் பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொண்டதுடன் பேரழிவும் தவிர்க்கப்பட்டது. ஆகவே, மணல்மேடுகளின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை பேணிப்பாதுகாக்க அனைவரும் அருளகம் அமைப்புடன் இனைந்து செயல்பட வேண்டும் எனக் கூறினார் நிகழ்வை அருளகத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பொன்.நடராசன் நெறிப்படுத்திப் பேசும்போது சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவில் நெய்தல் நிலத்தாவரங்களை இராமேசுவரம் தீவில் அருளகம் அமைப்பு வளர்தெடுக்க உள்ளது குறித்தும் இதற்கென நாற்றங்கால் பண்ணை குந்துக்காலில் அமையுள்ளதாகவும் பேசினார். நிகழ்வுக்கு வேண்டிய ஏற்பாடுகளை அருளகத்தின் களப்பணியாளர் திரு. கார்த்தி செய்திருந்தார். முன்னதாக இராமேசுவரம் தீவுக்கே உரித்தான குளுமாப் பூச்சி எனப்படும் இராமேசுவரம் புலிச்சிலந்தி குறித்தும் அதன்மேல் உள்ள தவறான நம்பிக்கைகள் குறித்தும் ஆராய்ச்சியாளர் திரு முகமது சாகித் மக்களிடம் எடுத்துரைத்தார். ம.சா.சுவாமிநாதன் ஆரய்ச்சி நிறுவன அறிவு மைய பொறுப்பாளர் கெவின் குமார் பேசும்போது, கடந்த காலங்களில் படிப்படியாக மணல் மேடுகள் அழிந்து வருவது குறித்து வருத்தமுடன் பதிவு செய்தார். கடலோசை வானொலியைச் சேர்ந்த லெனின் அவர்கள் பேசும்போது இராமேஸ்வரம் தீவின் சிறப்பு மற்றும் மீன்பிடித் தடைக்காலத்திற்கான அறிவியல்பூர்வமாக விளக்கினார். தீவ தன்னார்வலர் சுகந்தி பேசுகையில் மணல் மேடுகளைப் பாதுகாக்க பெண்கள் பங்கு அவசியம் என்று வலியுறுத்தினார்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்குத் தென்னங்கன்றுகள் அருளகம் அமைப்பு சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு கெவின்குமார், (எம்எஸ்சுவாமிநாதன் பவுண்டேசன்), தீவு பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் திரு சிக்கந்தர், திருமதி சுகந்தி, திரு முருகேசன் ஆகியோரும் பேடு நிறுவனத்தைச் சேர்ந்த ரான் செலின், தமிழ்நாடு கிராமப் புணரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்த யுவபாரதி மற்றும் ஸ்டாலின் ஆகியோரும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திரு முருகேசன், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்வில் முத்தாய்ப்பாக மணல்மேடுகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அனைவரது கருத்துக்களையும் தொகுத்துத் திட்டம் சார்பில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் மற்றும் தீவில் உள்ள தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் இராமேரவரம் ஆகிய முன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மணல்மேடுகள் பாதுகாப்பு குழுக்கள், மாணவர்களுக்கான குழுக்கள், இளையோருக்கான குழுக்கள் என மூன்று வகையானக் குழுக்கள் அமைத்து செயல்படுத்தவுள்ள பணிகள் குறித்தும் நெய்தல் நிலத் தாவரங்கள் சுமார் 125000 நாற்றுக்களை மக்களுடன் இணைந்து நட்டு பராமரிக்க உள்ளதையும் எடுத்துரைக்கப்பட்டது.