மின் காப்பு - A Message To The Newly Elected Government
அதிகாலைப் பயணத்தின்போது, சாலையின் ஓரத்தில் பெரிய ஆந்தை ஒன்று இறந்து கிடந்ததைப் பார்த்து வண்டியை ஓரங்கட்டினோம். இந்தச் சாலை நான் அடிக்கடிப் பயணிக்கும் சாலை தான். இறங்கி அருகில் சென்று உற்று நோக்கியபோது அது Indian eagle-owl அல்லது rock eagle-owl எனப்படும் கொம்பன் ஆந்தை என்று தெரிய வந்தது. அதனைப் பறவை ஆர்வலர் அம்சா அவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன். இந்திய ஆந்தைகளிலேயே பெரிய இறக்கை உடையது இவ்வகை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆந்தையை எனது இரவு நேரப் பயணத்தில் அடிபட்ட இடத்திற்கு அருகாமையில் இரண்டு மூன்று முறைப் பார்திருக்கிறேன். மக்கள் பரபரப்பாகச் செல்லும் சாலையின் ஓரத்தில் அமைந்திருந்த ஆல மரத்தில் தான் அது குடிகொண்டிருந்தது என்பதனையும் நான் அடையாளப்படுத்தி வைத்திருந்தேன். அதனை பகல் வேளையில் சென்று பார்க்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் வாய்ப்புக் கிட்டவில்லை. உண்மையைச் சொன்னால் சென்று பார்க்க முனைப்புக் காட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இறந்து கிடந்தப் பறவையைத் தூக்கிப்பார்த்தபோது தக்கை போல எடையற்றுக் கிடந்தது. அடிபட்டு இரண்டு நாள் ஆகியிருக்கக் கூடும். இப்படிப் பார்க்க நேர்ந்துவிட்டதே என்று வெதும்பினேன். வானத்தை அண்ணாந்துப் பார்த்தபோது உயர்மின் அழுத்த மின் கம்பி தலைக்கு மேலே சென்று கொண்டிருந்தது. இது எப்படி இறந்திருக்கலாம் என்று யோசித்துப் பார்த்தேன். ..கம்பியில் அமர்ந்திருந்த அந்த ஆந்தை இரையைப் பிடிக்கப் பறக்க எத்தணித்து இறக்கையை விரித்தபோது ஆறடி அகலமுள்ள பரந்து விரிந்த அதன் இறக்கை மற்றொரு மின் கம்பியில் உரசி மின்தாக்குதல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தேன். பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் வரை அதன் இனப்பெருக்கக் காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை கூட்டில் குஞ்சு இருந்து அதற்கு இரை எடுத்துச்செல்ல எத்தணித்தபோதும் இது நேர்ந்திருக்கலாம்.
Photo by Bharathidasan S
Photo by Karthic SS
பெரும்பாலான அரிய உயிரினங்களை நேரில் பார்ப்பதை விடச் சாலையிலும் மின்கம்பங்களிலும் அடிபட்டுக் கிடப்பதைத்தான் பார்க்க முடிகிறது. இதை எல்லாம் பார்த்தால் எந்த மேம்பாட்டு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என சிலர் வக்காலத்து வாங்கக்கூடும். சாலையில் செல்லாதீர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாதீர் என ஏட்டிக்குப் போட்டியாகப் பேசலாம். நாங்களும் இதெல்லாம் தேவை இல்லை என்று சொல்லவில்லை. இதனால் நேரும் ஆபத்தைக் குறைக்கத்தான் வழிவகை காணச்சொல்கிறோம். ஏனெனில் மின் கம்பிகள் நிகழ்த்தும் கொலைகள் ஏராளம் ஏராளம். அதில் யானை போன்ற பேருயிர்கள் அடிபட்டால் உடேன அது செய்தியாகிவிடும். ஆனால் கணக்கற்ற சிறிய வகைப் பாலூட்டிகளும் பறவைகளும் ஊர்வனவும் அடிபடுவது நம் கவனத்திற்கு வருவதில்லை.
சிறு சம்பவம் என் நினைவுக்கு வந்தது. இருபாதாண்டுகட்கு முன்னர் நான் தங்கியிருந்த அறைக்கு அருகில் ஒரு உணவகம் இருந்தது. அங்கு உணவுக் கழிவுகள் எச்சில் இலைகள் கடைக்கு வெளியே கொட்டப்படுவது வழக்கம். கடைக்கு மேலே செல்லும் மின் கம்பங்களில் அமர்ந்துபடி காகங்கள் பசியாறிக் கொள்ளும். ஆனால் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது ஒரு காகம் மின்தாக்குதல் ஏற்பட்டு மாண்டுபோகும். அத்துடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிடும். இதனால் அருகில் கம்பெனி நடத்திவந்த நிறுவனத்திற்கும் பெரிதும் இடையூறாக இருந்தது. அதன்பின்னர் எச்சில் இலைகளை அங்கு போடக்கூடாது எனக் கடைக்கு உத்தரவிடப்பட்டது. காகங்களும் தப்பின. இது போன்ற முன் எச்சரிக்கைத் தேவை என்பதைத்தான் வலியுறுத்துகிறோம். காகம் தானே என எளிதில் நாம் கடந்துபோகக்கூடாது. மிகவும் அழிவபாயத்திலுள்ள வரகுக் கோழி Indian Bustard களுக்கும் மின்கம்பிகளும் காற்றாலைகளும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. அத்துடன் அழிவபாயத்திலுள்ள பாறுக் கழுகுகளுக்கும் டைக்குளோபினாக் உள்ளிட்ட வலி போக்கி மருந்துகள் ஏற்படுத்தும் சிக்கலுக்கு அடுத்தபடியாகப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவது மின்கம்பங்களில் மோதி இறப்பது தான் என ஆப்ரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இத்துடன் முதுமலையிலுள்ள மாயாறு பகுதியிலும் நான்கு ஆண்டுகட்கு முன் இமயமலையிலிருந்து வந்த பாறுக் கழுகு மின்கம்பியில் மோதி மின்தாக்குதல் ஏற்பட்டுக் கருகி மாண்டுபோனதை ஆராய்ச்சியாளர் மணிகண்டன் பதிவு செய்துள்ளார்.
அழிவயாத்திலுள்ள உயிரினங்களைக் காக்க எல்லா வகையிலும் முயற்சிக்க வேண்டும் என்பதே எமது குரல். எனவே இந்தியாவில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் அனைத்து மின் கம்பிகளையும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பு நேராவண்ணம் கம்பிகளுக்குக் காப்பு (இன்சுலேட்) செய்ய முன்வரவேண்டும் அல்லது நிலத்திற்கு அடியில் புதைக்க வேண்டும். இதை முதல்கட்டமாகச் சரணாலயங்கள் இருக்கும் பகுதியில் தொடங்கிப் பின்னர் அனைத்துப் பகுதிகளுக்கும் இதனை விரிவு படுத்தவேண்டும். இதற்காகும் பொருளாதாரச் செலவுச் கணக்கை மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டுச் செயலாற்ற வேண்டும். உருவாகும் புதிய அரசுக்கு கோரிக்கையாக இதனை முன்வைக்கிறோம்.
சு.பாரதிதாசன்
செயலர்
அருளகம்