உலக சுற்றுச்சூழல் நாள் - இராமேஸ்வரம்
உலக சுற்றுச்சூழல் நாள் (சூன் 5, 2024) இராமநாதபுரம் மாவட்டம்
இராமேஸ்வரம் தீவில் மாவட்ட வனத்துறை சார்பாகக் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அருளகம் அமைப்பும் கலந்துகொண்டு தமிழ்நாட்டு அரசின் வனத்துறையின் வழிகாட்டுதலோடு TERI - UNDP - உதவியுடன் மேற்கொள்ள உள்ள மணல் திட்டுகள் பாதுகாப்பு குறித்தும் நடவு செய்ய உள்ள தாவர வகைகள் குறித்தும் எடுத்துரைத்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் திருமதி எஸ். ஹேமலதா அவர்கள் தலைமை தாங்கி மரக்கன்றை நட்டுத் தொடங்கி வைத்தார். நிகழ்வையொட்டி, அருளகத்தைச் சேர்ந்த சு. பாரதிதாசன் அவர்கள், தங்கச்சி மடம், ஊராட்சி மன்ற உறுப்பினர், திரு முருகேசன், அருளகம் ஆலோசகர் திரு நடராசன், தீவுப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த சுகந்தி மற்றும் சிக்கந்தர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். வனச்சரகர் திருமதி நித்யகல்யாணி முன்னிலை வகித்தார். அருளகம் அமைப்பின் நாற்றுப்பண்ணையிலுள்ள அரிய வகைத் தாவரங்கள் குறித்தும் நெய்தல் திணைக்குரிய தாவரங்கள் குறித்தும் வனத்துறையினர் கேட்டறிந்தனர்.
இதன் தொடர்ச்சியாக பாம்பன் ஊராட்சி மன்ற வளாகத்தில் Tamil Nadu Rural Reconstruction Movement (TRRM) சார்பாக நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வு பாம்பன் ஊராட்சி மன்றத் தலைவி அகிலா பேட்ரிக் தலைமையில் TRRM அமைப்பின் தலைவர் கருப்புசாமி முன்னிலையில் நடைபெற்றது. இதில் பாம்பன் ஊராட்சியைச் சேர்ந்த 35 பெண்கள் 6 ஆண்கள் கலந்து கொண்டனர். அதில் மணல் மேடுகளின் முக்கியத்துவம் அதனைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் TERI - UNDP - உதவியுடன் 50 ஹெக்டேர் பரப்பில் பசுமைப் பரப்பை உருவாக்க உள்ளது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதற்குப் பொதுமக்கள் ஆதரவை நல்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பபட்டது.
நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக மணல் திட்டுக்களைக் காக்கப் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் அருளகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு கார்த்தி ஆராய்ச்சியாளர் திரு முகமது சாகித் ஆகியோரும் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நெய்தல் திணைக்குரிய நாற்றுப்பண்ணை அமைக்க பாம்பன் ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட குந்துக்கல் குறுங்காடு வளாகம் தேர்வு செய்ப்பட்டது.