பாறுக் கழுகுப் பாதுகாப்புப் பணிகள்
தமிழக அரசு பாறுக் கழுகுப் பாதுகாப்புக்கெனக் குழு ஒன்றை அமைத்துள்ளதை அருளகம் அமைப்பின் சார்பாகவும் பறவை அன்பர்கள் சார்பாகவும் மனதார வரவேற்கிறோம்.
2006- இல் ஒன்றிய அரசு முதன்முதலில் பாறுக் கழுகுப் பாதுகாப்பிற்கென செயல்திட்டம் ஒன்றை வெளியிட்டது. அதில் பல்வேறு அறிவுறுத்தல்கள் செயல்திட்டங்கள் சொல்லப்பட்டிருந்தன. அப்போதே மாநில அளவிலான குழு ஒன்றை அமைக்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பதினாறு ஆண்டுகட்குப் பின் இது நிறைவேறியுள்ளது. ஆட்சிப்பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுக்குள் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்காகத் தமிழக முதல்வரையும், வனத்துறை அமைச்சரையும், வனத்துறைச் செயலரையும், முதன்மை வனத்துறை அலுவலர், முதன்மைக் காட்டுயிர் பாதுகாவலர், கூடுதல் வனத்துறை அலுவலர் உள்ளிட்டோரையும் அருளகம் மனதாரப் பாராட்டுகிறது. குரலற்ற மனிதர்களுக்காக மட்டுமின்றி குரலற்ற உயிரினங்களுக்காகவும் இந்த அரசு இருக்கிறது என்பதை இது எடுத்தியம்புகிறது. வனத்துறைச் செயலர் ஆர்வமுடனும் அக்கறையுடனும் பாறுக் கழுகுப் பாதுகாப்புக்கு தமிழக அரசு என்ன செய்யவேண்டும் எனக் கேட்டறிந்தார். அவருக்கு அருளகம் சார்பாக எமது சிறப்பான நன்றியினை உரித்தாக்குகிறோம். இந்தியாவில் பாறுக் கழுகுப் பாதுகாப்பில் தொடர்ந்து முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு அரசு இருக்கிறது என்பதைப் பலரும் பாராட்டினர். பாறுக் கழுகுகள் பாதுகாப்புக்காக உலகெங்கும் நடைபெற்றுவரும் செயல்பாடுகள் குறித்து வரும் செய்தியிலும் இதைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர். இந்தப் பாராட்டெல்லாம் தமிழக அரசுக்குத் தான் சேரும். இன்னும் பல திட்டங்கள் செயல்வடிவம் பெறவேண்டும். உயிரினங்கள் பாதுகாப்பில் முன்னோடியாகத் தமிழகம் திகழவேண்டும் என்பது என் ஆவல்.