காட்டுயிர் வாரம்
காட்டுயிர் பாதுகாப்பை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் முதல் எட்டாம் நாள் வரை காட்டுயிர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு அருளகம் அமைப்பின் சார்பாக நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகத்திலுள்ள பொக்காபுரம், மாவினல்லா, செம்மநத்தம், எப்பநாடு ஆகிய ஊர்களில் வசிக்கும் பழங்குடிக் குழந்தைகளுடன் காட்டுயிர் வாரவிழா கடந்த 4ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை அருளகம் அமைப்பினர் வனத்துறையுடன் இணைந்து முதுமலைப் புலிகள் காப்பக இயக்குநர் திரு வெங்கடேசு மற்றும் துணைப் பாதுகாவலர் திரு. அருண்குமார் அவர்கள் வழிகாட்டுதலோடு ஒழுங்கு செய்திருந்தனர்.
அருளகத்தின் செயலர் சு. பாரதிதாசன் மாணவர்களுக்கு காட்டுயிர் கதைகளைச் சொல்லி உற்சாகப்படுத்தினார். நிகழ்வு குறித்து அவர் பேசும்போது, பாறுக் கழுகுகளின் வசிப்பிடத்திற்கு மிக அருகில் இருப்பதால் இந்த ஊர்களைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்தார். மேலும் பழங்குடிகளைப் பொருத்தவரை காடு, காட்டுயிர்கள் என்பது அவர்களின் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் தொடர்புடையது என்பதாலும் பழங்குடிக் குழந்தைகளுடன் காட்டுயிர் வார விழாக் கொண்டாடுவது பொருத்தமாய் இருக்கும் என்பதாலும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்தார்.
நிகழ்வில் யானை, கரடி, முயல், பாறுக் கழுகு ஆகியனவற்றைக் காகித அட்டையைக் கொண்டு முகமூடியாகச் செய்ய திரு. ஆழி வெங்கடேசன் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்றுவித்தார். அவர் சொல்லித்தருவதைப் பார்த்து மாணவர்களும் அதேபோலச் செய்து பழகினர். செல்வி. ஜோன்லிண்டன் அவர்கள் இயற்கைச் சாயங்களைக் கொண்டு வண்ணம் தீட்டுவது குறித்துப் பயிற்சி வழங்கினார். மாணவர்களும் தாங்கள் உருவாக்கிய முகமூடிக்கு வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர். தாங்கள் உருவாக்கிய முகமூடிகளைத் தங்களின் தலைகளில் மாட்டி விளையாடினர்.
தற்போது பழங்குடிக் குழந்தைகளுக்கும் காட்டுக்கும் உள்ள தொடர்பு குறைந்து வருவதாகவும் இதுபோன்ற நிகழ்வு மூலம் காட்டுயிர்கள் மேல் இளந்தலைமுறையினர் நேசம் கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் முனைவர் பி.ஏ. டேனியல் தெரிவிதார்.
நிகழ்வின் முத்தாய்ப்பாக விலங்குகளின் உருவ முகமூடியை மாட்டியபடி, ‘காப்போம் காப்போம்’, ‘காட்டுயிர்களைக் காப்போம்’, ‘காப்போம் காப்போம், பாறுக் கழுகுகளைக் காப்போம்’ என்ற முழக்கத்தை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். இதனைப் பார்த்து ஊர் மக்களும் வெகுவாக இரசித்தனர்.
நிகழ்ச்சிக்குத் தேவையானமுன்னேற்பாடுகளை மசினகுடி வனச்சரகர் திரு. என். பாலாஜி, சிங்காரா வனச்சரகர் திரு. ஜான் பீட்டர், வனவர்கள் ஸ்ரீராம், சித்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
காட்டுயிர் பாதுகாப்பு குறித்த துண்டறிக்கையினை அருளகம் சார்பாக பிரபு அவர்கள் ஊர் மக்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் வழங்கினார்.