பாறுக் கழுகுக்கான பன்னாட்டு விழிப்புணர்வு நாள்
பாறுக் கழுகுக்கான பன்னாட்டு விழிப்புணர்வு நாள், செப்டம்பர் 3, 2021
International Vulture Awareness Day, September, 3rd, 2022
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை பாறுக் கழகு விழிப்புணர்வு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
பாறுக் கழுகுகள் (Vultures) சூழல் சமநிலையில் முக்கியமான அங்கம் ஆகும், அவை பல்வேறு பகுதிகளில் வேறு வேறு விதமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. பாறுக் கழுகுககளின் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் வாழ்ந்து வருகின்றன .
இதற்கான காரணம் என்ன? இதைக் காக்க மக்கள் என்ன செய்யவேண்டும்? என்பது குறித்துக் கவனப்படுத்துவதற்காகப் பன்னாட்டுப் பாறுக் கழுகு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதற்கான முதல் முன்னெடுப்பை தென்னாப்பிரிக்காவில் உள்ள அழியும் நிலையிலுள்ள காட்டுயிர்களுக்கான அறக்கட்டளையும் இங்கிலாந்தில் உள்ள பருந்துப் பாதுகாப்பு அறக்கட்டளையும் தொடங்கின. தற்போது இதில் உலகெங்கும் உள்ள பல்வேறு அமைப்புகள் தங்கள் பங்களிப்பைத் தன்னார்வமாகச் செலுத்தி வருகின்றன. இதில் தமிழகத்தில் அருளகம் அமைப்பும் தனது பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. இதன் மூலம் பாறுக் கழுகு பாதுகாப்பு மேம்படும் என்று நம்பலாம்.
வாருங்கள் இணைந்து செயல்படுவோம்.
உங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள்! சில நிமிடம் திறந்தவெளியில் நின்று சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்துவிட்டு வானத்தையும் அண்ணாந்து பாருங்கள். அப்பொழுது, உங்கள் கண்களில் கழுகுகளோ வேறு பறவைகளோ, வண்ணத்துப் பூச்சிகளோ, வண்டுகளோ, தேனீக்களோ, வேறு பூச்சிகளோ ஏதேனும் தென்பட்டனவா? ஆம். என்றால் நீங்கள் வாழுமிடம் இன்னும் முழுமையாகச் சீர்கேடடையாமல் தப்பித்திருக்கிறது என்று ஆறுதல் அடைந்து கொள்ளுங்கள். ஏனென்றால், இவ்வுயிரினங்கள் சூழல் மாறுபாட்டை முகம்பார்க்கும் கண்ணாடி போல் உணர்த்தவல்லவை. அவை செழிப்புடன் இருந்தால் தான் நம் வாழ்வும் நலமுடன் இருக்கும்.
தற்போது பல இடங்களிலும் ஒரு வெறிச்சோடிய சூழல் நிலவுகிறது.
உயிரினங்களுக்கிடையேயான ஒத்திசைவும் உணவுச் சங்கிலியும் மாந்தர்களால் பெரும் அதிர்வுக்குள்ளாகியுள்ளது. நம் பரபரப்பான வாழ்வியல் சூழலில் நம் கவனத்திற்கு வராமலேயே எண்ணற்ற உயிரினங்கள் இப்பூவுலிகிலிருந்து விடைபெற்று வருகின்றன. ஆறாவது ஊழிக் காலத்தை நோக்கி (6th Mass Extinction) இப்பூவுலகு சென்று கொண்டிருக்கிறது என உயிரியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
உயிரினங்கள் அழிவது என்பது இயற்கையான ஒரு நிகழ்வு தான் என்று நாம் விட்டுவிட முடியாது. தற்போது மனிதர்களின் அழிச்சாட்டியத்தால் உயிரினங்களின் அழிவானது 1000 மடங்கு வேகத்தில் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. “அழிவுக்கு ஆட்பட்டிருக்கும் உயிரினங்களின் தகவல் நூல்” உலகெங்கும் 16306 வகை உயிரினங்கள் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வா சாவா என்று போராடி வருகின்றன என்று தெரிவிக்கிறது. இப்பட்டியல் நாள்தோறும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இந்தப் பட்டியலில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை பட்டிதொட்டியெங்கும் காணக்கூடிய பறவையாய் இருந்த பாறு கழுகுகளும் இடம் பெற்றுவிட்டன. பாறு சிறப்பினத்தில் 4 வகைகள் (வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, செந்தலைப் பாறு, வெண்கால் பாறு ஆகியன) அற்றுப்போகும் நிலையிலுள்ளதாக ஐயுசிஎன் அமைப்பு செம்புள்ளி குத்தியுள்ளது.
ஓர் உயிரினம் இல்லாமல் போனால் ஏற்படும் பாதிப்பு கணக்கிலடங்காதது. ஆனால் அதை உடனே நம்மால் உணரவும் முடியாது, நம் கவனத்திற்கும் வராது. காரணம், இவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது அடிப்படைத் தேவைக்கோ பகட்டு வாழ்வுக்கோ நேரடியாகப் பெரிய பாதிப்பு ஏதும் உடனடியாக ஏற்படுவதில்லை. இதனால் நீங்களும் நானும் கவலையின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!. ஆனால், எல்லா உயிரினங்களும் ஏதேனும் ஒரு வகையில் ஒன்றோடொன்று ஏனைய உயிரினங்களோடு பிணைக்கப்பட்டுள்ளன. அந்தத் தொடர்பு அறுபடாமல் வருங்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் பொறுப்பும் அதைக் காக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
இதற்காக உலகமெங்கும் பல்வேறு நன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. பூகோளக் காட்டுயிர்ப் பாதுகாப்பு அமைப்பைச் (Global Wildlife Conservation) சேர்ந்த உயிரியலாளர் இராபின் மூரே தலைமையில், பூண்டோடு அற்றுப்போய்விட்டதாகக் கருதப்பட்டுள்ள 25 உயிரினங்களை உள்ளடக்கி முதல் கட்டமாகத் தேடுதல் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் 10 பாலூட்டிகள், 3 ஊர்வன, 3 பறவைகள், 2 நீர் நில வாழ்விகள், 3 மீனினம், தலா ஒரு பூச்சி வகை, இறால் வகை, பவழ உயிரி, செடி ஆகியன இடம்பெற்றுள்ளன. 18 நாடுகளைச் சேர்ந்த மேற்கண்ட பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இமயமலைக் காடையும், காட்டு ஆந்தையும் இடம்பெற்றுள்ளன.
இன்னும் ஒரு 50 ஆண்டுகள் கழித்துப் பாறுக் கழுகுகளைத் தேடி இதேபோல யாரும் புறப்படவேண்டிய நிலை வராது என்று நம்புவோம். அந்த நிலை வராமல் இருக்க தமிழக அரசும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்திய அரசும் ஐந்தாண்டு திட்டம் வகுத்துச் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. ஆசியளவிற்கான செயல்திட்டமும் ‘சேவ் - வல்சர்ஸ்’ (Saving Asia’s Vultures from Extinctions) என்ற அமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதோடு சேர்ந்து நாமும் நமது செயல்பாட்டை இப்போதே தொடங்குவோம். பாறு செழித்தால் பாரும் செழிக்கும்.
சு.பாரதிதாசன்,
செயலர், அருளகம்,