World Elephant Day - 12th August
யானையின் பின் செல்வோம்.,,,
மனித மனம் என்னும் காட்டில் நிலங்களுக்கும், வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் இடமிருக்கிறது. அதில் மரங்களுக்கும், விலங்குகளுக்கும் பெரிய அளவில் இடமில்லை. காடுகள் மனித வாழ்வின் ஊற்று. காடுகளின்றி வாழ்வில்லை, மழையில்லை,நீரில்லை போன்றவற்றை மனிதன் உணரும் தருணங்கள் காண இன்னும் பல நூற்றாண்டுகளைத் தாம் கடக்கவேண்டுமோ எனத் தோன்றுகிறது. மனதில் இடமில்லாதபோது, காடுகளும் இல்லாமல் ஆகிறது. எனவே காட்டின் சேதியைச் சொல்ல யானைகளும், சிறுத்தைகளும், இன்ன பிற விலங்குகளும் ஊருக்குள் நுழைகின்றன.
அரசு நிறுவனங்களாலும், லாப வெறி முதலாளிகளாலும் பெரும் வளர்ச்சித் திட்டங்களோடு காடுகள் அழிக்கப்படுகின்றன. அதன் உயிர்ப்பன்மயம் சிதையும்போது, விலங்குகள் வாழ வழியின்றி, ஊருக்குள் நுழைகின்றன. 'ஊர்' என்பதும் முன்னொரு காலத்தில் காடுகள் தாம். அந்தக்காடுகளில் தாம், மனித, விலங்குகளின் மோதல் தொடங்குகிறது. விலங்குகள் ரயிலில் அடிபடுகின்றன, மின்சார டவர்களில் இறக்கின்றன, வேட்டையால் கொல்லப்படுகின்றன, சாலைகளைக் கடக்கும்போது விபத்திற்குள்ளாகின்றன.நகரக்குப்பைகளாலும், நோய்வாய்ப்பட்டும் மரணமடைகின்றன. ஊர்மக்களால் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அவ்வப்போது வனத்துறைக்கும் இவ்வுயிர்கள் பலியாகின்றன.
அகல ரயில்பாதைகள் காடுகளுக்குள் போடப்பட்ட பிறகு வனவிலங்குகளின் மரணங்கள் அதிகரித்துள்ளன. 2016 - ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவெங்கும் 92 புலிகள் இறந்துள்ளன. இது உண்மையிலேயே மிக அதிகம். மனிதனின் இடையூறினால் அதிகமாகவே இறந்துள்ளன. 52 புலிகள் இறந்ததற்கு நம்மிடையே முறையான காரணங்கள் இல்லை. 5 புலிகளுக்கு மேல் வேட்டையாடப்பட்டுள்ளன. 2 புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன. ஒன்று தமிழகத்தில் நடந்துள்ளது.சுமாராக 5 லிருந்து 10 புலிகள் தமிழகத்தில் மட்டும் இறந்திருக்கலாம். சிறுத்தைகளும் சுமார் 10க்கு மேல் இருக்கலாம்.
யானைகளைப் பொறுத்தவரையில் எண்ணிக்கையில் தமிழகத்தில் 32 க்கும் அதிகமானவை இறந்துள்ளன. மின்சார வேலிகளல் கொல்லப்பட்டு, ரயிலில் அடிபட்டு, நோய்க்கூறுகள் அதிகமாகி, உடலில் புழுக்கள் அதிகரித்து இவை இறந்துள்ளன. கோவை, சத்தியமங்கலம், மங்களூர் ரயில் பாதைகளில் அதிகம் யானைகள் இறந்துள்ளன. விலங்குகளின் மேல் நமக்கு கரிசனம் அதிகம் இருந்தால் அடிப்படையான, வழக்கமான நடைமுறைகளை நாம் மாற்றிக் கொண்டு வனவிலங்குகளைக் காப்பாற்ற முடியும். காட்டுக்குள் வேகமாக ரயிலை ஓட்டாமலிருத்தல், முடியுமானால் யானை வழித்தடங்களில் ரயில் பாதைகளை அமைக்காமல் வேறு பாதைகளில் அமைத்தல் அவசியம். தந்தங்களின் வேட்டைக்காக அதிகமாக ஆண் யானைகள் கொல்லப்படுவதால் ஆண், பெண் யானை சரிவிகிதம் பாதிக்கப்படுகிறது. இது யானைகளின் அடிப்படை வாழ்வியலையே புரட்டிப் போடுகிறது.
ஒரு யானை அல்லது புலியின் மரணம், காட்டிற்குள் நாம் நினைத்துப்பார்க்க இயலாத, அளப்பரியத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆப்பிரிக்காவில் இருந்து மனிதன் இடம்பெயர்ந்தபோது மனிதனின் யானையின் பாதையிலேயே நடந்து உலகம் முழுதும் பரவினான். யானையின் சுற்றுப்பாதைகள் பல லட்சம் ஆண்டு கள் தொன்மையானவை. அதை மறந்து மனிதன் தன்னுடைய பாதையிலே யானைகள் பயணிக்க விரும்புகிறான். விளைவுகள் மிகவும் விபரீதமாக உள்ளன. வாழ்வின் அற்புத இயற்கைப் பரிணாமத்தில் மனிதனின் இயல்பு இன்று இடையூறாகப் போய் முடிந்திருக்கிறது.
கடந்த 200 ஆண்டுகளாக, மனிதனின் இயற்கை அழிவு வெறி கட்டுப்படுத்த இயலாததாக மாறி வருகிறது. காடுகளுக்குள் நடக்கும் சுரங்கச் செயல்பாடுகள், பெரும்பணக்காரர்களின் கேளிக்கை விடுதிகள், ஒற்றைப் பணப்பயிர்களான காப்பி, தேயிலை, தேக்குத் தோட்டங்கள், அதில் கொட்டப்படும் நஞ்சு ரசாயனங்கள், புதிதான சாலைகள், அதில் வேகமாக வரும் வாகனங்கள், அணைக்கட்டுக்கள், பிரம்மாண்டமான நீர்க்குழாய்கள் காட்டிற்குள் கட்டப்படும் மத, கல்வி நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகளின் எல்லை மீறல்கள், மழைக்காடுகளின் மரங்களை வெட்டுதல், விலங்குகளின் வேட்டை மற்றும் காட்டை அழிக்கும் எண்ணற்றச் செயல்பாடுகள் நம் அன்றாட வாழ்வை மிகவும் சிக்கலுக்குரியதாக மாற்றியுள்ளன. நாம் பெரும் சிக்கலில் இருக்கிறோம் என்பதை அறியாதவர்களாக இருக்கும் போது, சீரழிவுகள் இன்னும் அதிகமாகின்றன. 'இவ்வுலகம் நமக்கே' என்னும் 'மனித நடுவச்சிந்தனை' (Anthropocentric) - யிலிருந்து முற்றிலும் வெளியேறவேண்டிய காலம் இது.
இயற்கையின் கொடையிலே அதி முக்கியமானது மனித முயற்சியின்றி அது தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் தான். இதனையும் மனிதன் அனுமதிப்பதில்லை அல்லது அமைதியாக இருப்பதில்லை. ஆட்சிகளின், கட்சிகளின் சாயல்களின்றி காடுகளைப் பாதுகாக்கும் திட்டங்கள் நமக்குத் தேவை. பத்திலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக, காட்டை வளப்படுத்தும் திட்டங்களும், காடுகளை ஒருபோதும் மனிதனால் உருவாக்க இயலாது என்ற அறிதலோடு தொலைநோக்குச் செயல்பாடுகள் நமக்கு அவசியம். ஒரு குறிப்பிட்ட மரத்திற்கோ, விலங்கிற்கோ, பூச்சிகளுக்கோ குறிப்பிட்ட சில செயல்பாடுகள் மட்டுமில்லை, மனிதனால் அறிந்துகொள்ள இயலாத அளவில்லாத செயல்பாடுகள் அங்கே நடக்கின்றன. யானைகள் என்பன வெறும் விலங்கு மட்டுமல்ல, நாம் எண்ணிப்பார்க்க இயலாத, பெரும் மரங்களின் விதைகளைக் கடத்துபவர்களாக, விதை வங்கிகளாகப் பணிபுரிகின்றன என்பதைப் போல பல ஆயிரம் பல்லுயிர்ச்செயல்கள் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உள்ளன.
நாம் செய்யவேண்டியதெல்லாம் காட்டிற்குள் நிரந்தரமாக அல்லது மிக அதிகமாக விலங்குகளும் பறவைகளும் காட்டிற்குள் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்துவது தான்.யானை,புலி போன்ற விலங்குகள் தாண்டி நாம் அறியாத சிறு விலங்குகளும், பறவைகளும்,பூச்சிகளும் செயற்கையாக மரணமடைவது காட்டிற்குள் பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
வனவிலங்குகளைக் கவனத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மிக நிச்சயம் நல்ல பலனைத்தரும். பழங்குடிகள், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடனும் அவர்களின் அறிதலுடனும் காட்டிற்குள் எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவேண்டும்.எவ்விடத்தில் அதிகம் வனவிலங்குகள் கொல்லப்படுகிறதோ அங்கு அறிவியலாளர்களும்,அரசு அதிகாரிகளும் .பழங்குடிகளும் இணைந்து கவனக்குவிப்புடன் தீர்வுகளை எட்டலாம்.
'கொடிய விலங்குகளும், பயங்கரங்களும்' எனத்தொடங்கும் குழந்தைக்கதைகள் முதல், அதனையே பின் தொடரும் வணிகப்பத்திரிகை வரை, நமது எழுத்துக்களும் இதழியலும் முழுமையாக உருமாற்றம் கொண்டு காடுகளின் அளப்பரிய ஆற்றலை மக்களுக்குக் கொண்டு செல்லும் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருக்கிறோம். சமவெளி மனிதனுக்கு ஞானத்தைப் போதிக்கும் காடுகள் இல்லாதபோது, நமக்கு இப்புவியை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. நாற்பது சதவீதக்காடுகளை மீட்டெடுக்காதவரை, நம் வாழ்வு லயமானதாக இருக்கப்போவதில்லை. லாபமீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட முதலாளியச் சமூக அமைப்பிலிருந்து விலகி உயர்திணை, அஃறிணை எனப்பிரிக்கத் தெரியாத காட்டுப்பழங்குடியின் மனதினை எட்டுவதே நம் இறுதி இலட்சியம்.
விகடனில் வந்தது......
ஆர்,ஆர்.சீனிவாசன்...பூவுலகின் நண்பர்கள்