காந்தி நாவல்
நாவல் பழத்தை நினைக்கும்போது நம்மில் பலருக்கும் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்ற உரையாடல் நினைவுக்கு வரும். நாவல் பழத்தின் சுவை மனிதர்களை மட்டுமல்ல கரடியையும் சுண்டி இழுக்கும். அத்துடன் பல வகையான பறவைகளும் விரும்பியுண்ணும். நீரிழிவு நோய் தீர்க்கவும் இதன் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் மருந்து பயன்படுவதாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு கொண்ட நாவல் மரத்தை ஒவ்வொரு ஊரிலும் வளர்ப்பது பெரும்பயன்.
2006 ஆம் ஆண்டு அருளகம் அமைப்பு சார்பாக இடிந்தகரைக் கடலோரத்தில் மரம் நடும் சேவையிலிருந்தபோது, எங்களை ஊக்கப்படுத்துவதற்காக டாக்டர் இரமேசு அவர்கள் குடும்பத்தாருடன் கோயம்புத்தூரிலிருந்து அங்கு வந்திருந்தார். வரும்போது கூடவே நாவல் மரக் கன்றுகளையும் உடன் எடுத்து வந்திருந்தார். இங்கேயே நாவல் மரக் கன்று இருக்கிறது. ஏன் அங்கிருந்து மெனக்கட்டு எடுத்து வந்தீர்கள் என வினவியபோது, காந்தியின் கையால் 1934 ஆம் ஆண்டு நடப்பட்ட நாவல் மரத்திலிருந்து உருவாக்கிய மரக்கன்றுகள் இவை என்று சொல்லி எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தீனார். இந்த நாற்றுக்களை யோகானந்த் அவர்கள் தந்ததாகச் சொன்னார். மரம் நடும் நிகழ்வில் காலம் சென்ற நண்பர் அசுரன் அவர்களும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டார்.
அந்த மரத்தைக் கண்டு களிக்கும் பேறு அண்மையில் வாய்க்கப்பெற்றேன். அந்த மரம் நான் இருந்த இடத்திலிருந்து வெறும் 3 கி.மீ. தொலைவில் தான் இருந்தது.
காந்தி அடிகள் கோயமுத்தூருக்கு வருகை புரிந்தபோது, அவரது திருக்கரங்களால் 1934 ஆம் ஆண்டு நடப்பட்ட இம்மரம் கோவை - இராமநாதபுரத்திலுள்ள வணிகக் குழு வளாகத்தில் உள்ளது. அந்த நாவல் மரத்திலிருந்து விதைகள் சேகரிக்கப்பட்டு குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி நிருவாகத்தின் அரவணைப்போடும் ஓத்துழைப்போடும் அருளகம் அமைப்பினரால் 5000 நாற்றுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஊரிலும் மரம் நடும் இயக்கம் பெரிய அளவில் முகிழ்த்து வருகின்றன. அவர்கள் நடும்போது இந்த நாவல் மரத்தையும் காந்தியின் பெயரால் நட முன்வருமாறு கோருகிறோம். அதுவும் காந்தி அடிகளால் நடப்பட்ட மரம் என்றால் அது இரட்டிப்பு மகிழ்ச்சி அல்லவா?
காடுகள் அழிப்பும் பல்லுயிர்ச் சிதைவும் கொரோனா போன்ற நுண்மிகள் மனிதகுலத்தை ஆட்டிப்படைப்பதற்கான காரணிகளில் ஒன்றாக அறியப்படும் இவ்வேளயில் காந்தியாரும் குமரப்பாவும் முன்வைத்த சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கைகள் தேவையாயிருக்கின்றன.
தனிதனி வெறுப்பு தலைதூக்கி வரும் இவ்வேளையில் காந்தியடிகள் வலியுறுத்திய அன்பும் அகிம்சையையும் ஒற்றுமையையும் இம் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் நாடெங்கும் பரவும் என்று நம்பலாம். தொடர்பு கொள்ளுங்கள்.
அன்புடன்
அருளகம்.- பூந்தளிர் நாற்றுப்பண்ணை
99430 57480, 9843211772